Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் என்றும் காமடியன் தான் - விவேக்!

Webdunia
சனி, 28 ஜூலை 2007 (13:58 IST)
எந்த அலையிலும் கவிழ்ந்து விடாமல் குடைசாயாமல் தன் நகைச்சுவைப் படகில் பயணித்து வருபவர் விவேக். அவரது சிரிப்பூட்டும் திறமைக்கும் அண்மை உதாரணம் 'சிவாஜி' தனக்கென தனியிடம் பெற்று தனி ஆளுமையுடன் வளர்ந்துவிட்ட விவேக்குடன் ஒரு சந்திப்பு.

சிரிக்க வைப்பது உங்கள் இயல்பா? சினிமாவுக்காகவா?

நிஜத்தில் எனக்கு ஹியூமர் சென்ஸ் உண்டு. இதை நான் சொல்லலை பல பேர் சொன்ன கருத்துங்க நம்புங்க. நான் இருக்கிற இடம் எப்பவும் கலகலப்பா இருக்கும். என்னை சுற்றி எப்பவும் ஒரு கூட்டம் இருக்கும். இது வளர்ந்து ஹியூமர் க்ளப் சினிமான்னு கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. நான் விரும்பிய இடம் இதுதான்.

ஆந்தக்கால கலைவாணர் போல இந்தக் கால காமெடியர்களுக்கு மரியாதை இல்லையே ஏன்?

எப்படி மரியாதை வரும்? நடிக்கிற கேரக்டர் சொல்லப் போற கருத்தை வச்சித்தான் மரியாதை வரும். நம்ம சினிமாவில் இப்போ ஹீரோவுக்கு லவ் லெட்டர் தூக்கிட்டுப் போற வேலைக்குத்தான் காமெடியன்களை பயன்படுத்துறாங்க. இது இல்லைன்னா ஆபாசமா பேசி சிரிக்க வைக்க காமெடியர்களைப் பயன்படுத்தறாங்க அப்புறம் எப்படி காமெடியனுக்கு மரியாதை வரும்? கலைவாணர் தான் சொல்ல விரும்பியதை நகைச்சுவையாக சொல்ல முடிஞ்சுது. அந்த அளவுக்கு இப்போ சுதந்திரம் இருக்கா?

அப்படி நீங்கள் கருத்துச் சொன்னாலும் அது சர்ச்சையாகி விடுகிறதே..?

சர்ச்சையாகிறதில்லை, ஆக்கி விடுறாங்க. எதையும் ஊதி பெரிசாக்குறதுக்கு நம்ம நாட்டில் பலபேர் இருக்காங்க. நான் யாரையும் மனசுல வச்சிக்கிட்டு பேசுறதில்லை எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. யதார்த்தத்தை மட்டுமே சொல்றேன்.

உங்களை விமர்சிக்கும் போது என்ன நினைப்பீர்கள்?

நாம் செய்கிற காரியத்தை நாலு பேர் பாராட்டினாலும் அல்லது யாராவது ஒருத்தராவது திட்டினாலும் எதுவுமே இல்லாம இருக்கக்கூடாது. என்னை விமர்சிக்கிறப்போ உண்மை சிலருக்கு எரிச்சலை உண்டாக்கலாம்னு நினைப்பேன். காய்க்கிற மரம்தான் கல்லடி படும்னு நினைச்சு அமைதியா இருந்திடுவேன்.

உங்கள் வளர்ச்சி அசுர வளர்ச்சியா அல்லது..?

வளர்ச்சியைப் பார்க்கிற நீங்கள் அதுக்கு பின்னாடி இருக்கிற முயற்சியைப் பார்த்தீங்களா. அசுர முயற்சின்னு யாரும் சொல்றதில்லை இந்த இடத்தைப் பிடிக்கிறதுக்கு நான் சந்தித்த போரட்டங்கள் நீண்ட நெடியது. என் வலிகள் யாருக்கும் தெரியாது. சுமார் பத்து வருஷத்துக்கும் மேலா எதிர்நீச்சல் அடிச்சது பலருக்கும் தெரியாத விஷயம். அதனால்தான் எனக்குன்னு உட்கார்ந்துக்க ஒரு சின்ன இடம் கிடைச்சிருக்கு இதுக்கே கவனமா இருக்கனும். கடுமையாக உழைக்கனும் இல்லைன்னா யாராவது தள்ளிவிட்டுட்டு உட்கார்ந்திருவாங்க.

விவேக் காமடி என்றால் தனி டிராக்தானே நினைவுக்கு வருகிறது?

விவேக் காமடி தனித்து தெரியலாம். தனி டிராக்ல மட்டுமே வருவேன்கிறதை என்னால ஏத்துக்க முடியாது. 'சிவாஜி' உள்பட பல படங்களில் கதையோடத்தான் வர்றேன். அது தான் என் விருப்பமும்.

வெற்றிபெற்ற காமடியன்களுக்கு எல்லாம் ஹீரோ ஆசை வந்து விடுகிறதே..?

நான் 'சொல்லி அடிப்பேன்' படத்துல ஹீரோவாக நடிக்கிறேன். இதுபற்றி நேராவே கேட்கலாமே. ஹூரோவா நடிச்சே தீருவதுங்கிற ஆசை இல்லை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் செஞ்சுத்தான் பார்ப்போமேன்னு ஆசை இருக்கும். நம்மால முடியாதுன்னு ஓடவும் விருப்பமில்லை. ஹூரோன்னா எனக்கேத்த மாதிரி கதை இருக்கனும், பெரிய பில்டப் கொடுத்து ஆக்ஷன் ஹூரோவா காட்டிக்கனும்னு விரும்பலை. நோக்கம் சிரிக்க வைக்கனும். அதுக்கேற்ற கதைல படம் முழுக்க வரலாம். ஒரு படம் முழுக்க சிரிக்க வைக்கிற மாதிரி கதை வரனும். அப்படி கதை பண்றது கஷ்டம். இன்றைக்கு சிரிக்கும்படி எழுதுறவங்க குறைவாத்தான் இருக்காங்க.

ஹூரோவாகிவிட்டீர்கள் இனி சின்ன காமடி காட்சிகளில் நடிப்பீர்களா ?

ஐயோ.. அப்படி ஏதாவது ஏடா கூடமா எழுதிடாதீங்க ஐயா. நான் என்னைக்கும் காமடியன்தான். அதுதான் எனக்குச் சோறு போடுது. அந்தச் சாப்பாட்டுத் தட்டை யாரும் பிடுங்கிட வச்சிடாதீங்க. நானும் விட மாட்டேன் ஏன்னா அது என் வயிற்றுப் பிரச்சினை இல்லையா ?

' சிவாஜி'யில் ரஜினியுடன் நடித்த அனுபவம் எப்படி?

அதுபற்றி தனி டாபிக்கா பேசலாம். ரஜினி சார் என்றைக்கும் கிரேட்தான். தூரமா இருந்தாலும் கிட்ட போனாலும் எனக்கு அவரிடம் உள்ள பிரமிப்பு மாறலை. ஆனால் அவர் மிக எளிமையானவர். என் 'சொல்லி அடிப்பேன்' கேசட் ரிலீஸ் ஃபங்ஷனுக்கு வந்தது இன்ப அதிர்ச்சி. வந்து மனம்விட்டுப் பேசி வாழ்த்தினார். அது எனக்குப் பெருமையா இருந்திச்சு. 'சிவாஜி'யில் நடிக்கிற ஒவ்வொரு காட்சியின் மேலும் அவரோட பெருந்தன்மையைக் கண்டேன்.

அப்படியென்ன அப்துல்கலாம் மீது தனி பாசம்?

அவர் மீது எனக்கு மட்டுமா பாசம்? கோடான கோடி குழந்தைகள், இளைஞர்கள், மாணவர்கள் எல்லாருக்கும் அவர் மீது பாசம். அவரால் ஊக்கம் பெறாத குழந்தைகள் உண்டா? அவர் முதல் குடிமகன் என்பதற்கு உண்மையின் இலக்கணமாக இருப்பவர். அவர் மீண்டும் குடியரசுத் தலைவராக வேண்டும்கிறதுதான் இந்திய மக்களின் விருப்பம். அவர் பிறந்தநாளை மாணவர் தினமாகக் கொண்டாடலாம். அவரைப்பற்றிப் பேசினால் நான் உணர்ச்சி வசப்பட்டுவிடுவேன். மாணவர்கள் மத்தியில் அவர்தான் சூப்பர் ஸ்டார் அவர் மீது எனக்கு பாசம் மதிப்பு வந்ததில் ஆச்சரியமில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலுக்காக கீர்த்தி சுரேஷைப் பெண் கேட்க சென்றேன்… பிரபல இயக்குனர் பகிர்ந்த ஆச்சர்ய தகவல்!

கார் பந்தயத்தின்போது மீண்டும் விபத்து: நூலிழையில் உயிர் தப்பினார் நடிகர் அஜித் குமார்.

96 புகழ் கௌரி கிஷனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

பர்ப்பிள் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஐஸ்வர்யா லஷ்மி!

நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள சொல்வதில்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

Show comments