2016 மே 6 ஆம் தேதி தனது பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் படத்தை வெளியிடுவதாக வார்னர் பிரதர்ஸ் அறிவித்துள்ளது. உண்மையில் இந்தப் படம் 2015 ல் வெளியாவதாகதான் கூறினார்கள். அதிகாரப்பூர்வமாக தேதியை அறிவித்தபின் திடீரென ஒருநாள், ஒரு வருடம் தள்ளி 2016 ல் படம் வெளியாகும் என்றனர்.
இவர்கள் இப்படி தேதியை ஒரு வருடம் தள்ளிப் போடுவதற்கு முன், மார்வல் நிறுவனம் தங்களின் சூப்பர்ஹீரோ படம் ஒன்று 2016 மே 6 வெளியாகும் என அறிவித்திருந்தது. எந்த சூப்பர்ஹீரோ என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை. இந்த அறிவிப்புக்குப் பிறகே வார்னர் பிரதர்ஸ் தனது படத்தின் தேதியை மாற்றியது.
இரண்டு சூப்பர்ஹீரோ படங்கள் ஒரே நாளில் வெளியாவது ஒரு உறையில் இரண்டு கட்டாரிகளை வைப்பது போல. இப்போதைய கேள்வி, யார் தேதியை மாற்றப் போகிறார்கள்?
மார்வல் திட்டவட்டமாக தேதியை மாற்றப் போவதில்லை என கூறிவிட்டது. வார்னர் பிரதர்ஸும் அசைவதாக இல்லை. இந்நிலையில் மார்வலின் சூப்பர்ஹீரோ படம், கேப்டன் அமெரிக்கா 3 என்று ஹாலிவுட் ரிப்போர்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆக, 2016 ல் கேப்டன் அமெரிக்கா பேட்மேன், சூப்பர்மேனுடன் மோதவிருப்பது உறுதி.