ரஜினிகாந்த் நடித்திருக்கும் கோச்சடையான் ஒரு சரித்திரப் படம். வீர, தீர சாகஸங்கள் நிறைந்த கோச்சடையான் என்ற மன்னனை பற்றிய கதை. இதில் தந்தை, மகன் என இரு வேடங்களில் ரஜினி நடித்துள்ளார். ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா படத்தின் இயக்குனர். இசை ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் வைரமுத்து.
படத்தில் மகன் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனும், நடனத்தில் வல்லவரான தந்தைக்கு ஜோடியாக ஷோபனாவும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ஜாக்கி ஷெராஃப், சரத்குமார், நாசர், ஆதி, ருக்மணி ஆகியோரும் நடித்துள்ளனர்.
போட்டோ ரியலிஸ்டிக் பெர்ஃபாமென்ஸ் கேப்சர் டெக்னாலஜியில் உருவாகியிருக்கும் முதல் முழுநீள இந்தியப் படம் இது. இந்த தொழில்நுட்பத்தில்தான் அவதார், டின்டின் படங்கள் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டன.
3 டி அனிமேஷனில் தயாராகியிருக்கும் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவடைந்து டப்பிங் வேலைகள் நடந்து வருகின்றன. அனைத்தும் முடிந்து ஏப்ரல் 11 படத்தை உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியிடுவதாக ஈரோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர்கள்தான் படத்தை தயாரித்து வெளியிடுகிறார்கள்.