இளையராஜா சிறந்த புகைப்பட கலைஞர். இசை தவிர்த்து அவர் ஈடுபாடு காட்டும் ஒரே துறை இது. பலருக்கும் தெரியாத இந்த ரகசியம் கடந்த 15ஆம் தேதி வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. தான் இதுவரை எடுத்த புகைப்படங்களில் சிறந்தவற்றை நான் பார்த்தபடி என்ற பெயரில் கண்காட்சியாக வைத்துள்ளார். கமல்ஹாசன் திறந்து வைத்த இந்த புகைப்பட கண்காட்சி நாளைவரை நடைபெற இருக்கிறது.
இந்தக் கண்காட்சியை முன்னிட்டு நேற்று பத்திரிகையாளர்களை இளையராஜா சந்தித்தார். அப்போது பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
இந்த கண்காட்சியை பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம், மு.மேத்தா, நடிகர் பார்த்திபன், விவேக் உள்பட ஏராளமானோர் கண்டு களித்தனர். தனக்குப் பிடித்தமான ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், பாலுமகேந்திரா இருவரும் பாராட்டு தெரிவித்தது மகிழ்ச்சியளித்தது என்று இளையராஜா சந்திப்பின் போது தெரிவித்தார்.
இந்த புகைப்பட கண்காட்சி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஓவிய கண்காட்சியில் நடைபெற்று வருகிறது.