ஆக்சன் படங்களிலேயே மூன்றுக்கு மேல் சண்டைக் காட்சிகள் வைப்பதில்லை, திகட்டும். ஒரே படத்தில் பதினோரு பைட் சீன்கள் வைத்தால்.. ?
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் தனது மகன் விஜய சிரஞ்சீவியை நாயகனாக்கியிருக்கிறார். படம் சூர்யா. இயக்கம், தயாரிப்பு அனைத்தும் அவரே.
விஜய சிரஞ்சீவி சின்ன வயதிலேயே தற்காப்பு கலை அனைத்தும் படித்து பல கறுப்பு பெல்ட்கள் கைவசம் வைத்திருக்கிறார். இந்த வித்தைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் படத்தில் பதிவு செய்திருக்கிறார், ஜாக்குவார். வாள் சண்டை, சிலம்பச் சண்டை என வகைக்கொரு சண்டை வைத்ததில் எண்ணிக்கை பதினொன்றை தொட்டுவிட்டது.
தற்காப்பு கலையில் வித்தகரான விஜய சிரஞ்சீவிக்கு காதல் காட்சிகளில் நடிக்கத்தான் கூச்சம். கீர்த்தி சாவ்லாவுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் மயக்கமே வந்துவிட்டதாம் இவருக்கு.
போருக்கு பயப்படாதவர் பெண்ணுக்கு பயப்படலாமா?