1930 ஆம் ஆண்டு பெர்லினில் வெளியான "தி ஜூஸ் ஆர் வாட்சிங் யூ" என்ற புத்தகத்தில் நாஜி கொடுங்கோலன் அடால்ஃப் ஹிட்லரின் கொலைப் பட்டியலில் உலக நகைச்சுவை மேதை சார்லி சாப்ளின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக பிரிட்டன் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
95 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் கொலை செய்யப்ப ட வேண்டியவர்கள் பட்டியலில் விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பெயரும் இருப்பதாக அந்த பத்திரிக்கை செய்தி குறிப்பிட்டுள்ளது.
தங்களுக்கு வேண்டாத யூதர்கள் பட்டியலில் சமூக ஊழியர்கள், வங்கி முதலாளிகள், பொருளாதார நிபுணர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியியலாளர்கள், மற்றும் கலைஞர்கள் பலரது பெயர்களும் அந்த புத்தகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
கறுப்புப் புத்தகம் என்று அழைக்கப்படும் இந்த நூலை எழுதியவர் டாக்டர் ஜொஹான் வான் லியர்ஸ். இவர் நாஜி எதேச்சதிகார காலக் கட்டத்தில் யூதர்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த நபர் என்று தெரிகிறது. இந்த நூல் அடுத்த வாரம் ஏலத்திற்கு வருகிறது.
இந்த நூலில் கலைத்துறை யூதர்கள் என்ற தலைப்பிடப்பட்ட பகுதியில் சார்லி சாப்ளினை போலி-யூதர் என்று குறிப்பிட்டுள்ளார் யூத விரோதியான வான் லியர்ஸ்.
webdunia photo
FILE
இந்த கொலைகாரப் புத்தகத்தின் நகல் சாப்ளினுக்கும் அனுப்பப்பட்டதாம். இதனை வாசித்த சாப்ளின் ஹிட்லரை கடும் கேலி செய்து "தி கிரேட் டிக்டேட்டர்" என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த புத்தகத்தில் உள்ள ஹிட் லிஸ்டில் குறிப்பிடப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் நாஜிகளால் ஏற்கனவே கொலை செய்யப்பட்டதால் சாப்ளின் அந்த காலக் கட்டத்தில் கடும் அச்சத்திற்குள்ளானார் என்று இந்த நூலை ஏலம் விடும் புத்தக வெளியீட்டாளர் வெஸ்ட் வுட் ப்ரூக்ஸ் தெரிவித்துள்ளார்.
நாஜிகள் சாப்ளினை தவறாக யூதர் என்று நினைத்திருந்தனர். ஏனெனில் அது போன்று குறிப்பிடப்படும் போதெல்லாம் சாப்ளின் அதனை மறுத்ததில்லையாம்.
இந்த புத்தகம் இம்மாதம் 6ம் தேதி ஏலத்திற்கு வருகிறது.