இடம் பொருள் ஏவல் படம் மலைக் கிராமத்தில் நடக்கும் கதை. எவ்வளவு மேக்கப் போட்டும் மனிஷாவுக்கு கிராமத்துப் பெண் தோற்றம் வரவில்லை. அதனால் வேறு கதாபாத்திரத்தில் நடிக்கச் சொன்னேன். அவர் ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்று தெரியவில்லை என விளக்கம் தந்தார்.
மனிஷா நடிகர் சங்கத்தை அணுகியிருப்பதாகவும், செக்ஸ் தொல்லை குறித்து புகார் தந்ததாகவும் சிலர் (நாம் அல்ல) எழுதினர்.
இந்த புகார் கிளம்பிய 24 மணி நேரத்தில் செலக்டிவ் அம்னீஷியாவால் தாக்கப்பட்ட மனிஷா யாதவ், செக்ஸ் தொல்லை என்ற புகாரை அடியோடு மறந்தார். நான் நடிக்க வேண்டிய வேடத்தை நந்திதாவுக்கு தந்து அவரது துணை கதாநாயகி வேடத்தில் என்னை நடிக்கச் சொன்னார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. படத்திலிருந்து விலகிவிட்டேன். அதுவும் இல்லாமல் கொடைக்கானல் குளிர் எனக்கு ஒத்துக்கலை என்றொரு நடுங்குகிற செய்தியையும் வெளியிட்டார். அதேபோல் சீனு ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையும் பேசி தீர்த்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
யார் எப்படி என்ன பேசி தீர்த்தார்கள் என்பது ரகசியம். அது நமக்கு வேண்டாம். ஆனால் இதுபோன்று புகார்கள் சீனு ராமசாமியை நோக்கி வைக்கப்பட்டது இது முதல்முறையல்ல.
சீனு ராமசாமியின் முதல் படம் கூடல் நகரின் போதே ஊடல்கள் ஆரம்பித்தன. அப்படத்தில் பாடல் எழுதிய தேன்மொழியிலிருந்து பிரச்சனை தொடங்கியது.
இரண்டாயிரத்தில் இசையில்லாத இலையில்லை என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டு இலக்கிய உலகிலும், சினிமா உலகிலும் ஒரே நேரத்தில் பிரவேசித்தார் தேன்மொழி.
அன்றைய ஃபிலிம்சேம்பர் திரையரங்கில் நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் நா.முத்துக்குமார், தன்னைப் போலவே அக்கா தேன்மொழிக்கும் இயக்குனர்கள் பாடல் எழுத சினிமாவில் வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். விழாவுக்கு வந்த பாரதிராஜா அப்போதே அதற்கு உடன்பட்டார். பிற்காலத்தில் அவரின் படத்தில் உதவி இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் தேன்மொழி பணியாற்றினார்.
தேன்மொழிக்கு ஆதரவு தந்த இன்னொருவர் இயக்குனர் சீமான். அவரது படத்தில் தேன்மொழி பாடல் எழுதிய போது சீனு ராமசாமி சீமானின் உதவியாளர். தேன்மொழியைப் போலவே சீனு ராமசாமியும் ஒரு கவிஞர். எப்போது படம் இயக்கினாலும் தேன்மொழியை வைத்து ஒரு பாடலாவது எழுதிக் கொள்ள வேண்டும் என்று அப்போதே உறுதிபூண்டார் சீனு. கூடல் நகரில் தேன்மொழி பாடல் எழுதினார்.
அந்த நெருக்கம் வளர்ந்து ஒரு சுப்ரபாதத்தில், கழுத்தில் தாலியுடன், நாங்க திருமணம் செய்து கொண்டோம் என தேன்மொழி வெளிப்படையாக பத்திரிகையில் பேட்டி கொடுப்பதில் முடிந்தது. தேன்மொழியுடனான காதலை மட்டுமே விரும்பிய சீனு ராமசாமி கிரேட் எஸ்கேப். மதுரைக்கு நழுவியவர் பெற்றோர்கள் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். வெறுத்துப்போன தேன்மொழியும், இந்த ஆண்களே மோசம். இவர்களுக்கு ஐந்தறிவுள்ள நாய்கள் எவ்வளவோ மேல் என்று அரை டஜன் நாய்களுடனும், தனது கவிதைகளுடனும் செட்டிலானார். சீனு ராமசாமி தென்மேற்குப் பருவக்காற்று படத்துடன் ரீஎன்ட்ரியானார்.
படத்துக்கு தேசிய விருது கிடைத்ததும் சீனு ராமசாமியின் மீது வெளிச்சம் பாய்ந்தது. சரியாகச் சொன்னால் வைரமுத்து வெளிச்சத்தை பாய்ச்சினார். முப்பது லட்ச ரூபாய் சம்பளத்தில் அடுத்து ரெட்ஜெயண்டில் படம் செய்ய உட்கார்ந்தார் சீனு.
நீர்ப்பறவை தொடங்கியது. அப்படத்தில் முதலில் ஒப்பந்தமானவர் பிந்து மாதவி. திடீரென ஒருநாள் பிந்து மாதவி படத்திலிருந்து நீக்கப்பட்ட செய்தி வெளியானது. பிந்து மாதவிக்கு நடிக்கத் தெரியவில்லை, அதுதான் அவரை மாற்றினோம் என்றார் சீனு.
பிந்து மாதவியோ, தேவையேயில்லாமல் என்னை ஸ்டோரி டிஸ்கஷனுக்கு கூப்பிடுகிறார் என்று சலித்துக் கொண்டார். பிந்து மாதவி இப்போது போல் அன்று பிரபல நடிகையில்லை. சீனு ராமசாமி தேசிய விருது வெளிச்சத்தில் இருந்த நேரம். அவர் படத்தை தயாரிப்பது அதிகாரமிக்க ரெட்ஜெயண்ட். பிந்து மாதவியின் புலம்பல் அன்று யாராலும் கண்டு கொள்ளப்படவில்லை.
மூன்றாவது படமான இடம் பொருள் ஏவலில் மனிஷா யாதவ் கிராமத்து ஜாடை வரவில்லை என்று நீக்கப்பட்டுள்ளார். பிந்து மாதவியைப் போல் மனிஷாவுக்கு நடிக்க தெரியலை என்று சொல்ல முடியாது. அறிமுகப்படத்திலேயே அனாயாசமாக நடித்து திறமையை நிரூபித்தவர். அவரை மேக்கப் போடாமல் பார்த்தாலே கிராமத்துப் பெண் போலதான் இருப்பார். மேக்கப் போட்டும் கிராமத்துப் பெண்ணாக்க முடியவில்லை என்பது தமிழ் சினிமா மேக்கப் கலைஞர்களுக்கே விடுக்கப்பட்ட சவால்தான். வெளுத்த வேதிகாவையே பாலா பரதேசியாக்கும் போது மனிஷாவை கிராமத்து பெண்ணாக்க முடியவில்லை என்பது ஏற்றுக் கொள்வது போல் இல்லை. நந்திதாவை மாற்ற முடியும் போது மனிஷாவை முடியாதா என்ன.
அடுத்து இயக்குகிற படங்களிலாவது நடிக்க தெரியலை, தோற்றம் சரியில்லை என்று நடிகைகளை நிராகரிக்கிற நிலைமை சீனு ராமசாமிக்கு ஏற்படாமல் இருக்கட்டும்.