போலீஸ்காரரான ஜாக்கிசான் தனது மகளை பார்க்க ஒரு பாருக்கு வருகிறார். அந்த பார் ஓனர் ஜாக்கிசான் மகளின் பாய்ஃப்ரெண்ட். அவனுடன் சகவாசம் வைத்துக் கொள்ளாதே என்கிறார் ஜாக்கி. மகள் கேட்பதாக இல்லை. தனது தாய் உயிருடன் இருந்த போது தன்னை அவர் சரியாக கவனிக்கவில்லை என அவளுக்கு கோபம். அங்கிருந்து ஜாக்கிசான் கிளம்புகையில் தாக்கப்படுகிறார்.
கண் விழிக்கும் போது தானும் தனது மகளும் மேலும் சில வாடிக்கையாளர்களும் பார் ஓனரால் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதை உணர்கிறார்.
அனைவரும் பிணைக்கைதிகள். போலீஸ் வருகிறது. பணம் பேரம் பேசப்படுகிறது. ஆனால், பார் ஓனர் (இனி அவரை வில்லன் என்று அழைப்போம்) பணத்துக்காக அவர்களை பிணைக்கைதியாக வைத்திருக்கவில்லை என்பதை ஜாக்கிசான் அறிந்து கொள்கிறார். சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி வில்லனின் கோரிக்கைபடி அழைத்து வரப்படுகிறான். ஜாக்கிசான், அவரது மகள், குற்றவாளி, மேலும் மூன்று பேர் தவிர்த்து மற்றவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள்.
கமலின் உன்னைப்போல் ஒருவனை நினைத்துக் கொள்ளுங்கள். வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுவித்து ஓரிடத்தில் ஒன்று சேர்க்கிறார். அந்த நிமிடம்வரை அவர்களை விடுவிக்கவே அதை அவர் செய்வதாகத் தோன்றும். ஆனால் அவர்களை கொலை செய்யவே விடுவித்தார் என்பது படத்தின் ட்விஸ்ட்.
இங்கும் அப்படியே. கமல் இடத்தில் வில்லன். குற்றவாளிகள் இடத்தில் ஜாக்கியும் மற்ற ஐவரும். வில்லனின் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்பு ஒன்றுக்கு இவர்கள் ஐவரும் காரணம். அவர்களை ஒரேயிடத்தில் கொலை செய்யவே ஐந்து வருடங்களாக அவன் திட்டம் தீட்டி வந்திருக்கிறான்.
இத்துடன் முடிந்திருந்தால் அசல் உன்னைப்போல் ஒருவன் என்று சொல்லிவிடலாம். ஆனால் இதற்குப் பிறகு வருடம் காட்சிகள் அப்படியே சீனை புரட்டிப் போடுகின்றன. ஜாக்கிசானின் படத்தில் இப்படியெல்லாம் சீரியஸ் கதைக்களத்தை, ட்விஸ்டை இதுவரை நாம் பார்த்ததில்லை. அதுதான் இந்தப் படத்தின் பலமும் பலவீனமும். வியப்பான ஒரு விஷயம் வில்லன் உள்பட யாரும் கெட்டவர்கள் கிடையாது. எல்லோருக்குமே அவரவருக்கான நியாயம் இருக்கிறது. ஜாக்கிசான் படத்தில் மட்டுமில்லை ஆக்ஷன் படங்களிலேயே இதுவும் புதுசுதான்.
ஜாக்கிசானின் போலீஸ் ஸ்டோரி சீரிஸை நாம் ஏன் விரும்பிப் பார்த்தோம்? ஜாக்கிசானின் துறுதுறு சண்டைக் காட்சிகள், காமெடிக் காட்சிகள், அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் இதற்காகதான். கதையெல்லாம் சும்மா, யூகிக்க கூடியது. இந்த அம்சங்கள் அனைத்தும் இதில் சுத்தமாக மிஸ்ஸிங். ஜாக்கி வயதான சோர்வான போலீஸ்காரர். வில்லனின் ஆளிடம் வீம்புக்கு சண்டையிட்டு மரண அடி வாங்குகிறார். அறுபது வயசுக்கு மேல் எழும்பி நடக்க முடியாத நம்ம ஹீரோக்கள் சினிமாவில் எகிறி அடிக்கையில் ஜாக்கிசான் அடி வாங்குவது பரிதாபம். பல காட்சிகளில் ஜாக்கியைவிட நாம் சோர்வடைந்து போகிறோம்.
இந்த உற்சாகமின்மையை ஈடுசெய்யும் வகையில் அழுத்தமான திருப்பங்களுடன் கூடிய கதை இருக்கிறது, கேரக்டர்கள் இருக்கின்றன. இருந்தாலும் சில விஷயங்கள் மாறாமலிப்பதுதான் நமக்கு பிடிக்கிறது. தேவதைகள் என்றால் வெள்ளை, வானவில் என்றால் வண்ணம், ஜாக்கிசான் என்றால் துறுதுறு.
வழக்கமான துறுதுறு ஜாக்கிசானை மறந்தால் போலீஸ் ஸ்டோரி 2013 ரசிக்கக் கூடிய க்ரைம் த்ரில்லர்.