Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வராகவனின் திரைக்காதல்கள்

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2014 (11:22 IST)
செல்வராகவனின் காதல் கொண்டேன் படத்தின் முதல்நாள் முதல் காட்சி இன்னும் நினைவிருக்கிறது. பதினெட்டிலிருந்து இருபத்தைந்து வயதுள்ள இளைஞர்களால் நிரம்பியிருந்த திரையரங்கு படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும்வரை ஆர்ப்பரித்தபடியே இருந்தது. அதுவரை அவர்கள் திரையில் பார்த்து வந்த தெய்வீக காதலுக்குப் பதிலாக முதல்முறையாக தங்களின் காமம் சொட்டும் காதலை அவர்கள் அனுபவப்பட்டனர்.
FILE

செல்வராகவனின் படங்களை தொகுத்துப் பார்க்கையில், அவரின் திரைக்காதல்கள் இரண்டு துருவங்களுக்கிடையே பயணிக்கிறது. அது விடலைப்பருவ காமத்தில் தொடங்கி தெய்வீக காதலில் முடிகிறது. விடலைத்தனத்தில் ஆரம்பித்து அதிலேயே முடித்தால் அந்த காதலுக்கு ஒரு அழுத்தம் கிடைப்பதில்லை, மேலும் கதையும் திரள்வதில்லை. அதனால் தெய்வீக காதலில் அதனை முடித்து வைக்கிறார் செல்வராகவன்.

நாம் குறிப்பிடும் இந்த தெய்வீகத்தன்மை என்பது தமிழ் சினிமா வடிவமைத்த கற்பனையான புனித காதலாகும். இந்த தெய்வீகத்தன்மை, காதலுக்காக காதலர்களில் யாராவது ஒருவர் இறப்பதற்கோ, தியாகத்துக்கோ துணிவதன் வழியாக சாத்தியமாகிறது.

காதல் கொண்டேன் படத்தில் தனது காதலுக்காக நாயகன் உயிர்விடுகிறான். 7 ஜி ரெயின்போ காலனியில் நாயகி (இதில் நாயகி விபத்தில் மரணமடைந்தாலும் அது காதலுக்காக மரணத்தை ஏற்றுக் கொண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவே இயக்குனரால் கையாளப்பட்டிருக்கும்) மயக்கம் என்ன படத்தில் காதலனின் நோய்க்கூறுக்காக நாயகி மேற்கொள்ளும் கடும் முயற்சிகள். எல்லாப் படங்களிலும் இதனை வெட்டியும் ஒட்டியுமே செல்வராகவனின் திரைக்காதல்கள் அமைவதைப் பார்க்கலாம்.
FILE

தனக்கு சொந்தமில்லாத பொருள்களின் மீது உருவாகும் ஈர்ப்பே செல்வராகவனின் திரைக்காதல்களின் அடிப்படை. இன்றைய இளைஞர்கள் ஏதோ ஒருவிதத்தில் இந்த மனோநிலையை நடைமுறையில் அனுபவப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். அதனால் சட்டென்று செல்வராகவனின் திரைக்காதல் அவர்களை ஈர்த்துவிடுகிறது.
FILE

காதல் கொண்டேனில் நாயகி நாயகனை காதலிப்பதில்லை. அவள் இன்னொருவனின் உடமையாக இருக்கிறாள். 7 ஜி ரெயின்போ காலனியில் நாயகி இன்னொருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண். மயக்கம் என்ன படத்தில் அவள் இன்னொருவனின் காதலி. தெலுங்குப் படமான ஆடவரி மாட்லகு அர்த்தலு வேறுலே படத்தில் அவள் நண்பனுக்கு நிச்சயிக்கப்பட்டவள். செல்வராகவனின் காதல் ஜானரிலிருந்து விலகிய புதுப்பேட்டையிலும் நாயகன் இன்னொருவன் திருமணம் செய்யப் போகும் பெண்ணை அதற்கு சில நொடிகள் முன்பாக தாலிகட்டி கவர்ந்து கொள்கிறான்.
FILE

செல்வராகவனின் காதல்களின்பால் உருவாகும் ஆரம்ப ஈடுபாடு அடுத்தவர் பொருள் மீதான மனிதனின் ஆசையில் கட்டமைக்கப்படுகிறது. அது எதிர்பால் ஈர்ப்பாக இருப்பதால் உடனடியாக ஒரு தீவிரத்தன்மையும் கிடைத்துவிடுகிறது.

மேலும், நாயகி மீதான நாயகனின் விருப்பத்தில் எப்போதும் காமம் சொட்டிக் கொண்டேயிருக்கும். காதல்கொண்டேனில் நாயகி இயல்பாக பேசிக்கொண்டே தோள்பட்டை பிராவை சரி செய்வது, காதலனுடன் தொலைபேசி கூண்டுக்குள் கட்டித் தழுவிக் கொள்வது போன்ற காட்சிகளை நாயகனின் பார்வையில் காட்டுவதன் வழியாக அவனது காமத்தை செல்வராகவன் வெளிப்படுத்துகிறார்.
FILE

7 ஜி ரெயின்போ காலனியில் இதனை அவர் அப்பட்டமாகவே தெரியப்படுத்தியிருப்பதை காணலாம். நாயகன் தன்னை பார்த்ததும் மேலாடையை சரி செய்வது, உள்ளே சென்று துப்பாட்டாவை எடுத்து மார்பை போர்த்திக் கொள்வது என நாயகனின் பார்வை நாயகியின் மார்பை எப்போதும் தீண்டிக் கொண்டேயிருக்கும். இதன் காரணமாகவே பேருந்தில் அவனது கை தனது மார்பகத்தில்பட்டதும் நாயகி பொங்கிவிடுகிறாள். இந்த காமம் அவரின் எல்லா காதல்களிலும் துலங்குவதை காணலாம். சராசரி பார்வையாளன் செல்வராகவனின் திரைக்காதல்களை அணுக்கமாக கருதுவதற்கு இந்த காமம் மிகப்பெரிய துணை செய்கிறது.
FILE

அடுத்தகட்டம் நாயகி நாயகன்பால் தனது பார்வையை திருப்புவது. எந்த பெண்ணும் ஒரு ஆண் உடல்ரீதியாக தன்னிடம் அத்துமீறுவதை - அதுவும் இன்னொருவரின் முன் - விரும்ப மாட்டாள். செல்வராகவனின் நாயகிகளின் முதல் ஆண்கள் இந்த தவறை தொடர்ந்து செய்கிறவர்கள். அதுவும் கதாநாயகனின் முன்பு. கதாநாயகனின் அன்புக்கும் கவனிப்புக்கும் முன்னால் இந்த அத்துமீறல்கள் நாயகிக்குள் சிறுமையை உணரச் செய்கிறது.

7 ஜி ரெயின்போ காலனியில் இதனை செல்வராகவன் அழுத்தமாக காட்சிப்படுத்தியுள்ளார். நாயகன் நாயகிக்காக எதையும் செய்ய தயாராக இருப்பவன். சதா அவள் நினைவில் நாளை கழிப்பவன். அப்படிப்பட்டவன், தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஆண் தன்னிடம் உடல்ரீதியாக அத்துமீறுவதை காண நேரும் போது நாயகி குறுகிப் போகிறாள். ஒருவகையில் நாயகனின் காதல் இந்த அத்துமீறலைவிட உயர்வானது. அவள் இப்போது அதனை - நாயகனின் காதலை - மதித்தே ஆக வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது. இந்தப் புள்ளியில்தான் அவளது மனமாற்றம் தொடங்குகிறது.
FILE

இந்த உடல்ரீதியான அத்துமீறல்களை காதல் கொண்டேன், மயக்கம் என்ன படங்களிலும் காணலாம். புதுப்பேட்டையில் இந்த அம்சங்களை எதிர்மறையாக செல்வராகவன் பயன்படுத்துகிறார். அதாவது நாயகனை தண்டிக்க. திருமணத்துக்குப் பின் நாயகி உறவின் போது இன்னொருவனை நினைத்துக் கொள்வேன் என்று நாயகனிடம சொல்லுமிடம். மேலும், பாலியல் தொழிலாளியான நாயகனின் விருப்பத்துக்குரிய பெண் உடல்ரீதியாக துன்புறுத்தப்படும் போதுதான் அவன் மனம் அவள் மீது அதிகப்படியாக சாயத் தொடங்குகிறது.
FILE

நாயகனின் பலவீனங்களையும், துயரங்களையும் அவனது காதலே - அதாவது அவனது காதலியே - துடைத்தெறிவதையும் நாம் கவனிக்கலாம். அனாதையான காதல் கொண்டேன் நாயகனுக்கு வெளிச்சமாக வருவது அவளது காதலிதான். பொறுக்கியான 7 ஜி ரெயின்போ காலனி நாயகனுக்கு பொறுப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தருவதும் அவனது காதலே. மயக்கம் என்ன படத்திலும் அப்படியே. செல்வராகவன் காதலில் விரும்பும் காவியத்தன்மைக்கு இந்த அம்சம் பேருதவியாக இருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
FILE

கடைசிகட்டம் தெய்வீகத்தன்மை. விடலைப் பருவ காமத்தில் தொடங்கி அதிலேயே முடித்தால் அது வெங்கட்பிரபுவின் படங்கள் தரும் அனுபத்துக்கே இட்டுச் செல்லும். செல்வராகவன் விரும்புவது காவியச்சுவை. அதற்கு சோகமும் தியாகமும்தான் சிறந்தது. காதலுக்காக சாதலை தேர்வு செய்தல்.

காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி இரண்டிலும் சாதலை தேர்வு செய்தவர் மயக்கம் என்ன படத்தில் கிட்டத்தட்ட அதேபோன்றதொரு தியாகத்தை காட்டுகிறார். சுருக்கமாக சொல்வதென்றால் காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராவது. காமத்தில் பரிணமித்த காதலை தெய்வீகத்தன்மையுடன் ஒரு முழுமையை எட்டச் செய்வது.
FILE

இந்த படிநிலைகளே செல்வராகவனின் திரைக்காதல்களை உருவாக்குகின்றன. சில நேரங்களில் அழுத்தமாக, சில நேரங்களில் மேலோட்டமாக. ஆனால் இவை இல்லாமல் - இதுவரையான அவரின் திரைக்காதல்கள் இல்லை.
FILE

விடலைக் காதலிலிருந்து காவியக்காதலுக்கு செல்லும் இந்த யாத்திரை ஆபத்தானது. விடலைக் காதல் என்பது கிட்டத்தட்ட ஈவ்டீஸிங் போன்றது. விருப்பமில்லாத பெண்ணை விடாமல் பின் தொடர்ந்து டார்ச்சர் தருவது. அதை செய்வது நாயகன் என்பதாலும், நாயகனுக்காக நேர்ந்துவிடப்பட்டவள்தான் நாயகி என்று தமிழ் சினிமாக்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளதாலும் பார்வையாளர்களான நமக்கு அது வெளிப்படையாக உறுத்துவதில்லை. பெண் என்பவள் எனக்கு உடமையானவள் என்ற ஆதிக்க மனப்பான்மையில் உருவாவதுதான் விடலைக்காதல். நான் உன்னை லவ் பண்றேண்டி என்று சினிமாவில் நாயகன் கத்துவதும் இதனால்தான்.
FILE

ஒரு பெண்ணை எத்தனை நாய்கள் வேண்டுமானலும் லவ் பண்ணும். பதிலுக்கு அவளும் லவ் பண்ண வேண்டும் என்று நினைப்பது பாசிசம். பெண் உடல்மீது ஆதிக்கம் செலுத்தும் எல்லா வன்முறைகளுக்கும் இந்த மனோபாவமே ஆதாரமாக இருக்கிறது. அதைத்தான் செல்வராகவனின் நாயகர்கள் கவித்துவமாக செய்கிறார்கள். இது எவ்வளவு ஆபத்தானதோ அதேஅளவுக்கு ஆபத்தானது அவர் காட்டும் காவியத்தன்மை.

காதலை அமரத்துவப்படுத்துவதன் வழியாக அவர் விடலைக்காதலை நியாயப்படுத்துகிறார். இந்த இரண்டு நிலைகளிலும் மனிதனின் மனோபாவம் ஏறக்குறைய ஒன்றாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். காதலின் ஒருபக்கம் கட்டற்ற உணர்ச்சியும், அன்பும், தியாகமும் என்றால் இன்னொரு பக்கம் பரஸ்பர புரிதலும், மரியாதையும். இரண்டாவது பக்கத்தை செல்வராகவனின் சினிமா தவிர்த்துவிடுகிறது. இந்த சமநிலை இல்லாத காதல் மனித வெடிகுண்டுக்கு சமம். தானும் அழிந்து உடனிருப்பவர்களையும் நாசமாக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!