ஜில்லா, வீரம் இரண்டில் ஜில்லாவுக்குதான் அதிக திரையரங்குகள். தமிழகம், கேரளா, மலேசியா, துபாய் என அனைத்து இடங்களிலும் ஜில்லாவுக்கே முதல் பந்தி. கேரளாவில் மோகன்லாலே வெளியிட்டதால் படத்தின் ரீச் பன்மடங்கு என்கின்றன கேரளாவிலிருந்து வரும் தகவல்கள். முந்நூறுறை தொடும் திரையரங்குகளின் பெயர்களை வரிசையாக வெளியிட்டு ஜில்லாவுக்கு விளம்பரம் தந்திருக்கிறார்கள் கேரளாவில்.
படத்தின் கதை இதுதான்:
மதுரை ஜில்லாவை அடக்கி ஆளும் மோகன்லாலின் வளர்ப்பு மகன் விஜய். விஜய்யின் தந்தை மோகன்லாலின் விசுவாச ஊழியர். லாலை காப்பாற்றும் போராட்டத்தில் உயிர் இழந்ததால் அவரின் மகனான விஜய்யை சிறுவனாக இருக்கும் போதே தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தனது தந்தையை கொன்றது ஒரு போலீஸ்காரர் என்பதால் காக்கியைப் பார்த்தாலே விஜய்க்கு அலர்ஜி. ஆனால் விதிக்கு தலைமீது அமர்ந்து சிரிப்பதுதானே வழக்கம். காஜல் அகர்வால் ஒரு போலீஸ்காரர் என்பது தெரியாமல் அவர் மீது காதல் கொள்கிறார். காஜல், சூரி, விஜய் என்ற முக்கூட்டணி இந்த காதல் எபிசோடில் கலகலப்பூட்டுகிறது.
விஜய்யின் பராக்கிரமத்தால் மதுரையின் முடிசூடா மன்னராக வாழும் மோகன்லாலின் சாம்ராஜ்ஜியம் நேர்மையான போலீஸ் அதிகாரியின் வரவால் ஆட்டம் காண்கிறது. போலீஸ்துறையில் நமக்கு ஒரு ஆள் வேண்டும் என்று விஜய்யை அசிஸ்டெண்ட் கமிஷனராக்குகிறார். லாலின் செய்கைகளால் அப்பாவிகள் பாதிக்கப்படுவதை பார்க்கிறார் விஜய். லோக்கல் தாதாக்களை கருவறுக்கும் அவரின் ஆபரேஷன் க்ளீன் லாலை எதிரியாக்குகிறது.
இதற்கு நடுவில் லாலின் நலம்விரும்பியாக வரும் அரசியல்வாதி சம்பத் விஜய், லால் மோதலுக்கு நடுவில் தனது பழைய கணக்கை தீர்க்கப் பார்க்கிறார். லாலின் மகன் மகத்தை கொலை செய்து பழியை விஜய் மீது போடுகிறார். அந்தப் பழியிலிருந்து எப்படி விஜய் மீண்டார் என்பதுடன் கிளைமாக்ஸ்.
விஜய் ரசிகர்கள் இன்னொரு போக்கிரி என்று படத்தை கொண்டாடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை படம் மரண மாஸ். விஜய்யின் ஸ்டைலிஷான நடிப்பும், மோகன்லாலின் இயல்பான நடிப்பும், சூரியின் காமெடியும் படத்தை ஹிட்டாக்கும் என்பதில் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
பொதுவான ரசிகர்களுக்கு ஜில்லா ஒரு மாஸ் படம் என்பதில் மாற்று கருத்தில்லை. மோகன்லால் போன்ற ஒரு நடிகரை வெறுமனே நான் சிவன்டா என்று பன்ச் பேச வைத்தே பாழாக்கியதாக சிலர் குறைபட்டுக் கொண்டனர். பவர்ஃபுல்லான காட்சிகள் படத்தில் குறைவு. கடைசி அரை மணி நேரம் கொஞ்சம் ஜவ்வாக இழுத்துவிட்டார்கள் என்பன பொதுவான ரசிகர்களின் குறைகள்.
சாய்குமார், சர்வானந்த் நடித்த பிரஸ்தானம் படத்தின் கதையை கொஞ்சம் வெட்டி ஒட்டி எடுத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது என்றார் உதவி இயக்குனர் ஒருவர். மொத்தத்தில், ஜில்லா தலைவாவுக்கு மேல் துப்பாக்கிக்கு கீழ் என்பதே விஜய் ரசிகர்களின் கருத்து.