நுரையீரல் புற்றுநோயை உண்டாக்கும் ஆஸ்பெஸ்டாஸ்

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2011 (21:06 IST)
கட்டடங்களின் கூரையாகப் போட பயன்படுத்தப்படும் ஆஸ்பெஸ்டாஸ் நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பது உறுதியாகத் தெரிந்துள்ளதால் அதன் பயன்பாட்டை இந்திய அரசு முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று சுற்றுச் சூழல் நிபுணர்களும், அறிவியலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆஸ்பெஸ்டாஸ் என்றழைக்கப்படும் மிருதுவான, நார் போன்ற இப்பொருள் சிலிகேட் கனிமப் பொருள் வகையைச் சார்ந்தாகும். இதனை கிரைசோலைட் என்றும் அழைக்கின்றனர். இந்த ஆஸ்பெஸ்டாஸ் பெரும்பாலும் கட்டடங்களின் கூரையாகவே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கூரையாக போடப்படும் ஆஸ்பெஸ்டாஸில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும் நார்கள் சுவாசத்தின்போது நுரையீரலிற்குச் சென்று தங்கிவிடுகிறது. இதுவே நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணமாகிறது என்று மருத்துவ அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆஸ்பெஸ்டாஸில் பல வகைகள் உள்ளன என்றாலும், அவை யாவும் ஆபத்தானவையே என்று கூறுகிறார் பேராசிரியர் எலிஹூ ரிச்டர். இவர் இஸ்ரேலின் ஹூப்ரூ பல்கலைக் கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியராவார்.

நுரையீரல் புற்று நோய் மட்டுமல்ல, மீசோதேலியோமா எனும் மற்றொரு வகை புற்றுநோயையும் ஆஸ்பெஸ்டாஸ் உருவாக்கக் கூடியது என்கி்ன்றனர் மருத்துவர்கள். மனித உடலின் உள்ளுருப்புகளைச் சுற்றியிருக்கும் ஒருவித பாதுகாப்பு தோல் போன்றது மீசோதேலியம் என்பது. ஆஸ்பெஸ்டாஸில் இருந்து வெளியேறும் மெல்லிழை போன்ற நார்கள் உள்ளே சென்று இவற்றோடு ஒட்டிக்கொண்டு மீசோதேலியோமா ( Malignant Mesothelioma) எனும் புற்று நோயை உண்டாக்குகின்றன என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

நுரையீரலுக்குள் மட்டுமின்றி, அதற்கு வெளியேயுள்ள வெற்றிடங்களிலும் ஆஸ்பெஸ்டாஸ் நார்கள் சென்று அடைந்துவிடும் என்றும், அதுவும் புற்றுநோயை உண்டாக்கவல்லது என்றும், இதனை மனிதனால் உண்டாக்கப்படும் கார்சினோஜன் என்றும் (கார்சினோஜன் என்பது உலகிலுள்ள எல்லா பொருட்களிலும் உள்ளதொரு, புற்றுநோயை உண்டாக்கவல்ல சத்தாகும்) புற்றுநோய் ஆய்விற்கான பன்னாட்டு முகமை ( International Agency for Research on Cancer - IARC) கூறுகிறது.

ஆஸ்பெஸ்டாஸில் பல்வேறு வகைகள் உள்ளன, ஆனால் பாதுகாப்பான ஆஸ்பெஸ்டாஸ் என்று ஏதுமில்லை என்கிறார் ஆய்வாளர் முனைவர் யேல் ஸ்டீன். இவரும் இஸ்ரேலின் ஹீப்ரூ பல்கலையைச் சேர்ந்தவர்தான்.
கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஆஸ்பெஸ்டாஸ் ஒழிப்பு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பல நிபுணர்கள் இப்பொருளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

கனடா நாட்டின் ஆண்டோரியோ நகரில் மட்டும் ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டினால் புற்றுநோய் ஏற்பட்டு ஒவ்வொரு ஆண்டும் 500க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்று கூறிய முனைவர் அலெக் ஃபர்குஹார், இந்தியாவில் இதன் பாதிப்பு 100 மடங்கு அதிகமாக இருக்கும் என்றார்.

“ஆஸ்பெஸ்டாஸ் பொறுத்தவரை பாதுகாப்பான பயன்பாடு என்றும் ஏதுமில்லை. நான் எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து கோரிக்கை விடுக்கிறேன், கனடாவில் நாங்கள் செய்துவரும் தவறை நீங்கள் (இந்தியர்கள்) செய்யாதீர்கள். ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டை நிறுத்துங்கள், இல்லையெனில், ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் இந்தியர்கள் நுரையீரல் புற்றுநோயால் மரணமடைவார்கள ்” என்று கூறியுள்ளார்.

ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாடு 52 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இதன் விற்பனையும் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் அதிகமாக ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தும் நாடு இந்தியா. 2008ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் மூன்றரை இலட்சம் டன் ஆஸ்பெஸ்டாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்பெஸ்டாஸை மக்களும் புறக்கணிக்க வேண்டும், நாடும் தடை செய்ய வேண்டும். நடக்குமா?
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ல் 1 குழந்தைக்கு உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறதா? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? என்ன ஆபத்து?

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

Show comments