அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு வந்தபோது ஜெயலலிதா பயன்படுத்திய காரையே பயன்படுத்தினார்.
கடந்த 5ஆம் தேதி ஜெயலலிதா காலமானதற்குப் பிறகு, கட்சியின் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்காக வியாழன் அன்று [29-12-2016] அதிமுக பொதுக் குழு கூட்டம் கூட்டபட்டு அதிமுகவின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார். அங்கு, அவரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்னர் சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா சமாதியில் பொதுக்குழு தீர்மான புத்தகத்தை வைத்து, அஞ்சலி செலுத்தினார். பின்னர், எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும், அண்ணா நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார்.
சிவப்பு நிற புடவை உடுத்தியிருந்த சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய காரின் முன் சீட்டில் அமர்ந்து மெரினா கடற்கரைக்கு வந்தார். சசிகலாவின் வருகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.