Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு 'முத்த'க் கலவரம்!

பேராசிரியர் சுப. வீரபாண்டியன்
வியாழன், 6 நவம்பர் 2014 (09:30 IST)
உணவகம் போன்ற பொது இடங்களில் 'முத்தம்' கொடுத்துக் கொள்ளலாமா என்று ஒரு புதிய சிக்கல் இந்தியாவில் இப்போது  எழுந்துள்ளது.
நம் மீனவர்களை இலங்கை அரசு தூக்கில் போடுவேன் என்கிறது. மீனவர்களின் படகுகளை அவர்கள் பிடித்து வைத்துக் கொள்ளலாம் என்கிறார், இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டு இந்த மண்ணின் மக்களுக்கே துரோகம் செய்யும் சு.சாமி. ஏழைகள் வாழ்வைப் பாதிக்கும் வண்ணம் பால் விலை கூடியிருக்கிறது. இன்னும் எத்தனை எத்தனையோ சிக்கல்கள். இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பொது இடத்தில் முத்தம் கொடுக்கலாமா கூடாதா என்பது குறித்து நாம் பேசிக் கொண்டிருப்பது நியாயமா என்னும் கேள்வி நியாயமானதுதான். ஆனால் இந்த முத்தப் போராட்டம் ஓர் 'எதிர்வினை' என்பதை நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
கேரளாவில் இது தொடங்கியது. கோழிக்கோட்டில் ஓர் உணவகத்தில் ஒரு காதல் இணையர்கள் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதனை ஒரு தொலைகாட்சி ஒளிபரப்பியது. உடனே புறப்பட்டுவிட்டனர் மத அடிப்படைவாதிகள். அடுத்த நாள் அந்த உணவகத்தைத் தாக்கிச் சேதப்படுத்தினர். அந்தப் 'பண்பாட்டுப் பாதுகாவலர்களால்தான்' தொடங்கியது முத்த யுத்தம்.
 
முகநூல் வழியாக ஒருங்கிணைந்த போராட்டக்காரர்கள் அடுத்த நாள் அதே உணவகம் முன் ஆயிரக் கணக்கில் குவிந்தனர். இந்து மத மற்றும் முஸ்லிம் மத அடிப்படைவாதிகளும் அங்கு கூடினர். காவல்துறை தலையிட்டுக் காதலர்களை மட்டும் கைது செய்தது. ஆனாலும் அவர்கள் விடவில்லை. காவல்துறை ஊர்திகளுக்குள்ளும், காவல் நிலையங்களிலும் முத்த மழை பொழிந்தனர். அன்று மகிழ்ச்சியாய் இருந்தவர்கள் கேரளக் காவல்துறையினர்தான்.
 
மேலும் அடுத்த பக்கம்..

மேலை நாடுகளில் கை குலுக்குவது போன்றதுதான் முத்தமிடுதலும் என்பதை நாம் அறிவோம். இங்கே ஆணும், பெண்ணும் கை குலுக்குதலே கூடக் கலாச்சார விரோதம்தான். ஆண்களும் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லிக் கொள்வதுதான் தமிழ்ப் பண்பாடு என்ற ஒரு கருத்து உண்டு. ஆனால் அதற்குள்ளே ரகசியமாகத் தீண்டாமை ஒளிந்திருக்கவும் கூடும்! மேலை நாடுகளில் ஆணும் பெண்ணும் பூங்கா போன்ற பொது இடங்களில் முத்தம் கொடுத்துக் கொள்வது முதலில் என் போன்றவர்களுக்கும் வியப்பாகத்தான் இருந்தது. ஆனால் அந்தக் காதலர்களுக்கு அருகில் உள்ளவர்கள் கூட அங்கு அதனைக் கண்டு கொள்ளாமல் இருந்ததுதான் பேரு வியப்பாக இருந்தது. அவரவர் அவரவர் வேலையைத்தான் அங்கு பார்க்கின்றனர். இவற்றைப் பற்றிய கவலையோ, விவாதமோ அங்கு இல்லை.
நாம் இங்கு எல்லாவற்றையும், பண்பாட்டுடன் இணைத்துப் பார்க்கிறோம். அது வெறும் பண்பாட்டுப் பார்வை இல்லை. அதற்குள் மதம் சார்ந்த பார்வையும், சாதி சார்ந்த பார்வையும் இருக்கிறது என்பதுதான் உண்மை. காதலர் தின எதிர்ப்பு தொடங்கி எல்லாவற்றிலும் சாதிப் பாதுகாப்பு பத்திரமாக இருக்கிறது.
 
காதலர்கள் இங்கு கவுரவக் கொலைக்கு ஆளாகின்றனர். கொலை செய்யும் 'பண்பாடு' இங்கு கடுமையாக எதிர்க்கப் படுவதில்லை. மேற்கு வங்கத்தில், அண்மையில் ஒரு தலித் பெண் இன்னொரு சாதிக்காரனைக் காதலித்தாள் என்பதற்காக அவளுக்கு 50000 ரூபாய் தண்டம் விதித்தார்கள். அதனை அந்தப் பெண்ணால் கட்ட முடியவில்லை. அதன்பின் விதிக்கப்பட்ட தண்டனையை நாடறியும். பொழுது விடிவதற்குள் அந்தப் பெண்ணோடு யார் வேண்டுமானாலும் பாலியல் வல்லுறவு கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்பட 13 பேர் ஒரே இரவில் அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொண்டனர். அடுத்த நாள் காலை அவள் குற்றுயிரும் குலை உயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். எந்தப் பண்பாட்டுக் காவலர்களும் அங்கு வந்து யாரையும் தாக்கவில்லை.
 
முத்தத்தை அவ்வளவு கொடுமையாக எதிர்ப்பவர்கள், பாலியல் வன்முறையை ஏன் எதிர்க்கவில்லை? விடை மிக எளியது. முத்தம் சாதிக்கு எதிராய்ப் போய்விட வாய்ப்புண்டு. பஞ்சாயத்துத் தண்டனைகள் சாதியைக் காப்பாற்றுவதற்காகவே விதிக்கப் படுகின்றன. ஆக மொத்தம், பண்பாட்டைக் காப்பது இவர்கள் நோக்கமில்லை. சாதியைக் காப்பதே சங் பரிவாரங்களின் விருப்பம்.
 
முத்தம் அன்பின் வெளிப்பாடு. சாதி, அடிமைத்தனத்தின் மூல வேர். பொது இடங்களில் சாதி இழிவைத் தூக்கிப் பிடிப்பதை விட, முத்தம் கொடுத்துக் கொள்வது அப்படி ஒன்றும் அநாகரிகமானது அன்று!
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!