Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொந்த மண்ணில் அடி மேல் அடி வாங்கும் ஆஸி. - தொடரை இழந்து பரிதாபம்

சொந்த மண்ணில் அடி மேல் அடி வாங்கும் ஆஸி. - தொடரை இழந்து பரிதாபம்
, செவ்வாய், 15 நவம்பர் 2016 (14:51 IST)
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இன்னின்ஸ் மற்றும் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


 

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஓவல் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 85 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதிகப்பட்சமாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 48 ரன்களும், அதற்கு அடுத்தப்படியாக ஜோ மின்னே 10 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே நடையைக் கட்டினர். ஆஸி. வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நடைபயிற்சி மேற்கொள்வதுபோல வருவதும், போவதுமாக இருந்தனர்.

1988ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணி குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் பிளாந்தர் 5 விக்கெட்டுகளையும், கெய்ல் அப்போட் 3 விக்கெட்டுகளையும், ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் குவித்தது. அற்புதமான இன்னிங்ஸை ஆடிய குவிண்டன் டி காக் 104 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக டெம்பா பவுமா 74 ரன்களும், ஹசிம் ஆம்லா 47 ரன்களும், பிளாந்தர் 32 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் 241 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலியா அணியில் மூன்று பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தை தாண்டினர்.

அதிகப்பட்சமாக உஸ்மான் கவாஜா 64 ரன்களும், டேவிட் வார்னர் 45 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 31 ரன்களும் எடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் உட்பட மூன்று பேர் டக் அவுட் ஆகி வெளியேறினர்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் கெய்ல் அப்போட் 6 விக்கெட்டுகளையும், ரபாடா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய கெய்ல் அப்போட் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

இரு அணிகளுக்கு இடையேயான பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 177 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்து ஆஸ்திரேலியா நிர்கதியாய் நிற்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென் ஆப்பிரிக்கா வீரரின் அபார பந்துவீச்சை காணுங்கள் [வீடியோ]