Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுளின் உண்மையான அதிகாரம் யாரிடம்?

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (14:59 IST)
கூகுள் நிறுவனத்தை 1998ல் கூட்டாக தொடங்கிய லாரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் ஆகியோர், 2015ல் தாங்கள் உருவாக்கி கூகுளின் தாய் நிறுவனமாக ஆக்கிய ஆல்பாபெட்டின் தலைமை பொறுப்புகளிலிருந்து டிசம்பர் மாதம் விலகினர்.
 
46 வயதான லாரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் ஆகிய இருவரும் ஆல்பாபெட்டின் தினசரி நடவடிக்கைகளில் இருந்து விலகியதுடன், தங்களைவிட ஒரு வயது மூத்தவரான, கூகுளின் தற்போதைய தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சையிடம் ஆல்பாபெட்டின் தலைமை பதவியை கூடுதலாக அளித்தனர். இது 2019ஆம் ஆண்டு தொழில்நுட்ப உலகில் நடந்த எதிர்பாராத மாற்றம்.
 
கூகுளின் நிர்வாக அமைப்பை எளிமையாக்குவதற்கான ஒரு நேரம் இது என்றும் ஆல்பாபெட் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு இனி இரண்டு நிர்வாக இயக்குநர்களும், ஒரு தலைவரும் தேவையில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
 
எனினும், கூகுள் நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களாகவும், பங்குதாரர்களாகவும், இணை நிறுவனர்களாகவும் தாங்கள் தொடர்ந்து செயல்படப் போவதாகவும் அவர்கள் அறிவித்தனர். தமிழகத்தை பூர்விகமாக கொண்ட சுந்தர் பிச்சைக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பலரும் வியந்து பாராட்டினர்.
 
முன்னணி நிறுவனமாக விளங்கும் கூகுள் நிறுவனத்தில் 2004ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த சுந்தர் பிச்சை, அடுத்த பதினோரு ஆண்டுகளிலேயே அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாகி துறை சார்ந்தவர்களை திகைக்க வைத்தவர்.
 
அதீத நினைவாற்றலுக்கும், அமைதியான, நிதானமான குணத்துக்கும் மட்டுமின்றி கடுமையான உழைப்புக்கும் பெயர்போன சுந்தர் பிச்சை, இந்த பதவிக்கு தகுதியானவரே என்று பல்வேறு சர்வதேச நாளிதழ்கள் அப்போது புகழாரம் சூட்டின.
 
ஆனால், இந்த முறை ஆல்பாபெட்டின் தலைமை செயலதிகாரி பதவியை சுந்தர் பிச்சை கூடுதலாக ஏற்றபோது வேறுபட்ட பார்வைகள் முன்வைக்கப்பட்டன. 2015ஆம் ஆண்டு கூகுளின் தலைமை செயலதிகாரியாக சுந்தர் பிச்சையை நியமித்த அதன் நிறுவனர்கள், ஆல்பாபெட் எனும் தாய் நிறுவனத்தை உருவாக்கி அதில் கூகுளால் தொடங்கப்பட்ட, கையகப்படுத்தப்பட்ட துணை நிறுவனங்களை மேலாண்மை செய்யும் பணிக்கு சென்றனர்.
 
அந்த காலகட்டத்தில், கூகுளின் விளம்பரம், யூடியூப், தனியுரிமை பாதுகாப்பு, நிர்வாக மேலாண்மை உள்ளிட்டவற்றில் நிலவி வந்த ஏகப்பட்ட பிரச்சனைகள் ஆரம்பத்தில் சுந்தர் பிச்சைக்கு அழுத்தத்தை கொடுத்தன.
 
இருப்பினும், கடந்த நான்கு ஆண்டுகளில், மேற்கண்ட பிரச்சனைகளுக்கு அமெரிக்க நாடாளுமன்ற குழு தொடங்கி, ஐரோப்பிய ஒன்றியம் வரை தனது சாதுர்யமான நகர்வுகளின் மூலம் அபராதம் மட்டுமே செலுத்தி, நிறுவனத்துக்கு பெரிய அளவில் பிரச்சனை ஏதுமில்லாமல் பார்த்து கொண்டார் அவர்.
 
அதே சமயம், கூகுள் மென்பொருட்களில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம், இயந்திர கற்றறிதல், இயற்கை மொழி முறையாக்கம், மேகக் கணினியகம் மட்டுமின்றி வன்பொருட்களில் கூகுள் ஹோம் வரிசைகள், பிக்சல் திறன் பேசிகள் உள்ளிட்டவற்றின் வாயிலாக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும், புதுமையும் ஏற்படுத்தி காண்பித்தார்.
 
இந்நிலையில், சுந்தர் பிச்சைக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த புதிய பொறுப்பு, அவருக்கு மேலதிக அழுத்தத்தை தருவதோடு மட்டுமல்லாமல், அவருக்கு உண்மையிலேயே கூகுளில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புவதாக சிஎன்பிசி உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
அதாவது, கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் ஆகியவற்றின் உச்சபட்ச பதவிகளை சுந்தர் பிச்சை வகித்தாலும், அந்நிறுவனத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அதன் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்கே ப்ரின் ஆகியோரிடம்தான் இன்னமும் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments