Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பன்றிகளின் உடல் உறுப்புகள், மனித உறுப்பு மாற்று சிகிச்சையின் எதிர்காலமாக இருக்குமா?

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (08:00 IST)
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, முன்பு இருந்ததைவிட இப்போது முன்னேறியுள்ளது. மரபணு மாற்றப்பட்ட பன்றிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட முதல் உறுப்புகள், மனிதர்களுக்கு வைக்கப்பட்டன. அதோடு, பன்றி இதயத்தைப் பெற்றவரால் இரண்டு மாதங்கள் உயிர் வாழ முடிந்தது.
 
உடல் உறுப்புகளுக்கு இருக்கும் உலகளாவிய பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு, உறுப்புகளுக்காக பன்றிகளைப் பயன்படுத்துவதில் நாம் எவ்வளவு நெருங்கி வந்துள்ளோம்?
 
அறுவை சிகிச்சை அரங்கில் அமைதி நிலவுகிறது. அறையில் பதற்றம் உருவாகிறது.
அறுவை சிகிச்சை நிபுணர்கள் பன்றியின் சிறுநீரகத்தை மனித உடலுடன் இணைத்துள்ளனர். சிறுநீரகத்தை இறுகப் பற்றியிருக்கும் கருவிகள் விடுவிக்கப்பட்டு, மனித ரத்தம் அதற்குள் பாய்கிறது.
 
மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவர் ஜேமி லாக், "நீங்கள் குண்டூசி விழும் ஓசையைக் கூட கேட்டிருக்கலாம்," என்கிறார்.
 
வெற்றி, தோல்வி என்பது நொடிப்பொழுதில் தீர்மானிக்கப்படும். அந்த நேரத்தில் அனைவருடைய மனதிலும் ஒரேயொரு கேள்வி மட்டுமே உள்ளது: "இளஞ்சிவப்பு நிறமா கருப்பு நிறமா?"
 
உடல் வேறு ஒரு வெளி உறுப்பின் (இங்கே பன்றியின் உறுப்பு) மீது பயங்கரமான தாக்குதலைக் கட்டவிழ்த்துவிடால், பன்றி திசுக்களில் உள்ள ஒவ்வொரு செல்லும் கிழிந்து, உறுப்பினுள்ளே ரத்தம் உறைந்துவிடும். அடுத்த சில நிமிடங்களில், பிளவுபட்டு, நீலமாக மாறி, பின்னர் முற்றிலும் கருப்பு நிறமாக மாறிவிடும்.
 
அந்த உறுப்பை உடல் நிராகரிக்கவில்லை என்றால், உறுப்பின் நிறம் ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் ஓட்டத்தோடு இளஞ்சிவப்பு நிறத்தில் மாறும்.
 
"அது அழகாகவும் இளஞ்சிவப்பு நிறமாகவும் மாறியது... நிம்மதி உணர்வு, மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை உணர்வு அறை முழுக்க நிரம்பியது," என்று அமெரிக்காவிலுள்ள அலபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் லாக் கூறினார்.
 
இந்த அறுவை சிகிச்சை மருத்துவ முன்னேற்றங்களின் வரிசையில் ஒன்று. இதை வேறு உயிரினங்களின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு வைக்கும் உறுப்பு மாற்றம் துறையில் (xenotransplantation) ஆர்வத்தைப் புதுப்பித்துள்ளது.
மனித உடலில் மற்ற உயிரினங்களின் உறுப்புகளைப் பயன்படுத்துவது பழைய யோசனையாகும். மேலும் சிம்பன்சிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட விதைப்பை முதல் மாற்று சிறுநீரகம் மற்றும் இதயம் வரை இதில் அடங்கும். ஆனால் இவ்வாறு உறுப்பு மாற்றம் செய்யப்பட்டபோது அது விரைவில் மரணத்தில் முடிந்தது. பிரச்னை என்னவெனில், நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பு, மாற்றப்படும் உறுப்பை ஒரு தொற்றுநோயாகக் கருதி, அதன் மீது தாக்குதலைத் தொடுக்கும்.
 
பன்றிகளின் உடல் உறுப்புகள் கிட்டத்த நம்முடைய உறுப்புகளின் அளவுக்குச் சரியாக இருப்பதால், இப்போது பன்றிகள் மீது அதிகமாகக் கவனம் செலுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, நாம் பல நூற்றாண்டுகளாக அவற்றை வளர்ப்பதில் அனுபவம் உண்டு.
 
ஆனால், உடல் மிகையாக நிராகரிப்பதில் இருக்கும் சவால், ஒன்றுதான். உறுப்புகளை கருப்பாக விடாமல், இளஞ்சிவப்பு நிறத்திலேயே வைத்திருக்க வேண்டும். நாம் நேரடியாக பண்ணைக்குச் சென்று ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதன் உறுப்புகளை மாற்ற முடியாது. பன்றிகளின் டி.என்.ஏ-வை மாற்றுவதற்கு மரபணு பொறியியலில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே பன்றிகளின் உறுப்புகள் நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்புகளுடன் மிகவும் இணக்கமாக உள்ளன.
 
சமீபத்திய சிறுநீரகம் மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "10-ஜீன் பன்றி"யிலிருந்து உறுப்புகள் எடுக்கப்பட்டன.
தானம் செய்யப்பட்ட உறுப்புகள், மனித வளர்ச்சி ஹார்மோன்களுக்கு எதிர்வினையாற்றுவதையும் கட்டுப்பாட்டை மீறி வளர்வதையும் தடுக்க, ஒரு மரபணு மாற்றத்தைக் கொண்டுள்ளது.
 
மற்றுமொரு முக்கிய மாற்றம், ஆல்ஃபா-கால் எனப்படும் சர்க்கை மூலக்கூறை நீக்குகிறது. இது பன்றி உயிரணுக்களின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டு, திசுவை முற்றிலும் அந்நியமானதாகக் குறிக்கக்கூடிய ஒரு பிரம்மாண்டமான ஒளிரும் நியான் அடையாளமாகச் செயல்படுகிறது.
 
பூர்த்தி அமைப்பு என்றழைக்கப்படும் நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பிரிவு, பாதுகாப்பு கண்காணிப்பின் ஒரு பகுதியாக ஆல்ஃபா-காலை உடல் முழுவதும் தேடுகிறது. அதனால் தான் உறுப்புகள் மாற்றப்பட்ட சில நிமிடங்களில் அது நிராகரிக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்ற நிலை ஏற்படுகிறது.
 
மற்ற இரண்டு "நியான் அடையாளங்கள்" மரபணு ரீதியாக அகற்றப்பட்டு, ஆறு மனித அடையாளங்கள் சேர்க்கப்படுகிறது. அவை, பன்றியின் அணுக்கள் மீது உருமறைப்பு வலை போல் செயல்பட்டு, நோய் எதிர்ப்பு மண்டலத்திலிருந்து அவற்றை மறைக்க உதவுகின்றன.
 
இதன் விளைவாக, மரபணு மாற்றப்படும் 10-ஜீன் பன்றிகள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்றதாக இருப்பதற்காக, மலட்டு நிலையில் வளர்க்கப்படுகின்றன.
 
சிறுநீரகம் மற்றும் இதயம்
செப்டம்பர் 2021-இல் ஜிம் பார்சன்ஸ் என்பவரின் மூளை செயலிழந்த உடலில் ஒரு ஜோடி பன்றி சிறுநீரகங்கள் மாற்றப்பட்டன.
 
அவர் உயிரிழந்தபோது, உறுப்பு தான செய்ய விரும்பினார். அவருடைய சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டபோது, அவருடைய குடும்பத்தின் அனுமதியுடன் பன்றி சிறுநீரகங்கள் அந்த இடத்தில் வைக்கப்பட்டன.
 
சிறுநீரகங்களில் ஒன்று, சிறுநீர் உற்பத்தியைச் சிறப்பாகச் செய்தது என்று மருத்துவர் லாக் விவரித்தார். மேலும், மனிதரற்ற மற்ற உயிரினங்களின் உறுப்புகளை மனிதர்களுக்கு மாற்றும் ஜீனோ ட்ரான்ஸ்பிளான்டேஷன் துறை, "உண்மையில் மக்களின் வாழ்க்கையை மாற்றும். அவர்களின் உயிரைக் காப்பாற்றும்," என்று கருதுகிறார்.
 
இந்த ஆண்டின் பிற்பகுதியில் மருத்துவ பரிசோதனைகளை தொடங்குவார் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
 
அந்த அறுவை சிகிச்சை மூன்று நாட்கள் நீண்டதாக இருந்தது. ஆனால், இதற்கிடையில், மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரு படி மேலே செல்ல விருந்தனர்.
 
அவர்களுடைய நோயாளி, 57 வயதான டேவிட் பென்னட், கடுமையான இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்புடையவராக இருக்கவில்லை. அவருடைய இதயம் மற்றும் நுரையீரலை ஆதரிக்கும் எகோம் இயந்திரம் மூலம் உயிருடன் வைக்கப்பட்டிருந்தார்.
 
பென்னட் ஒரு பன்றியின் இதயத்தை கடைசி வாய்ப்பு என்று விவரித்தார்.
 
ஜனவரி 7-ஆம் தேதி, 10-ஜீன் பன்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன் இதயம் டேவிட் பென்னட்டின் மார்புக்குள் வைக்கப்பட்டது. பென்னட்டின் நோயுற்ற இதயம் வீங்கியிருந்ததால் அறுவை சிகிச்சை, சிக்கலானதாகவும் ரத்த நாளங்களை சிறிய பன்றி இதயத்துடன் இணைப்பது சவாலாகவும் இருந்தது.
 
இதயம் வேகமாக நிராகரிக்கப்படுமா என்பதைப் பார்க்க மீண்டும் ஒரு பதட்டமான தருணம் நிலவியது. ஆனால், இதயம் துடித்தது. அதுமட்டுமின்றி, இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தது. மருத்துவமனையின் இதய மாற்று அறுவை சிகிச்சை துறை இயக்குநர் மருத்துவர் முகமது மொஹிதின், "என் வாழ்நாளில்" இதை நேரில் பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.
 
அந்த அறுவை சிகிச்சையின் ஒரு மாத நினைவு விழாவில் நான் அவரிடம் பேசியபோது, உறுப்பு நிராகரிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றார் பென்னட். ஆனால், பென்னட் இன்னும் பலவீனமாகத் தான் இருந்தார்.
 
"1960-களின் காரில் புதிய ஃபெராரி இன்ஜினை வைத்தோம். இன்ஜின் நன்றாக வேலை செய்கிறது. ஆனால், உடலின் மற்ற பகுதிகளைச் சரிசெய்ய வேண்டும்," என்று அவர் கூறினார்.
 
ஆனால், பென்னட் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு உயிரிழந்தார். உயிரிழப்புக்கான காரணமும் அதில் மரபணு மாற்று அறுவை சிகிச்சையின் பங்கும் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
 
பென்னட் அறுவை சிகிச்சைக்கு முன்பு மிகவும் பலவீனமாக இருந்தார். மேலும் புதிய இதயம் கூட போதுமானதாக இல்லை.
 
உறுப்பு நிராகரிப்பின் அறிகுறிகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இதயத்தின் விரிவான பகுப்பாய்வு நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கும் அறிகுறிகளைக் காட்டினால், 10-ஜீன் பன்றியின் உறுப்புகளை மனித உடலுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கு மேலும் அதில் மாற்றங்கள் தேவைப்படலாம்.
 
மாறாக, இது உடற்கூறியல் வரையும் கூட வரலாம். பன்றி இதயங்கள் மனித உடலில் வேலை செய்யாமல் இருக்கலாம். நாம் நான்கு கால்களைவிட இரண்டு கால்களில் நடப்பதால், பன்றியை விட நம் இதயங்கள் புவியீர்ப்பு விசையை எதிர்த்துப் போராட மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.
 
நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஸ்டெம் செல் உயிரியல் பேராசிரியரான கிறிஸ் டென்னிங், அதிகபட்ச நிராகரிப்பை சமாளிப்பது இதய மாற்று அறுவை சிகிச்சையின் "வெற்றியாக" கருதப்படும் என்று கூறினார். சிக்கல் பலவீனமானதாக இருந்தால், "எதிர்காலத்தில் ஜீனோட்ரான்ஸ்பிளான்டேஷன் வெற்றிகரமாக இருக்கும்." ஆனால், சிக்கல் உடற்கூறியல் வரை வந்தால், இந்த முயற்சியை முற்றிலும் தடுப்பதாக அந்தச் சிக்கல் இருக்கும்," என்று கூறினார்.
 
தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.
 
பிரிட்டனின் மிகச் சிறந்த மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் ஜான் வால்வொர்க்கின் கூற்றுப்படி, பன்றி இதயங்கள் இன்னும் அதிக எண்ணிக்கையிலான உயிர்களைக் காப்பாற்ற மனித இதயத்தைப் போல் சிறப்பாக இருக்க வேண்டியதில்லை. மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்து பலர் உயிரிழக்கின்றனர்.
 
உலகின் முதல் இதய-நுரையீரல்-கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை நடத்திய பேராசிரியர் வால்வொர்க், 100 பேருக்கு மனித இதயத்துடன் வாழும் 85% வாய்ப்பை வழங்குவதைவிட, 1,000 பேருக்கு பன்றி இதயத்துடன் உயிர் வாழ 70% வாய்ப்பு கொடுப்பது நல்லது என்கிறார்.
 
மேலும், "எனவே, இது மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையைப் போல் சிறப்பாக இல்லையென்றாலும், 1,000 நோயாளிக்கு ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட பெரிய நன்மையைச் செய்துள்ளோம்," என்றார்.
 
ஜீனோ ட்ரான்ஸ்பிளான்டேஷன் எப்போதும் மாற்று மருத்துவத்தில் அடுத்த பெரிய விஷயமாக உணரப்படுகிறது. தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்க அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தத் துறையும் அதன் மகத்தான கனவுகளும் வளர்ச்சியைச் சந்திக்குமா என்பதை மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மட்டுமே காட்டும்.
 
மேலும், மருத்துவர் லாக், "ஒரு 10-ஜீன் மரபணு திருத்தப்பட்ட பன்றி, சிறுநீரக செயலிழப்பு நோயாளி, கல்லீரல் செயலிழந்த நோயாளி, இதய செயலிழப்பு நோயாளி மற்றும் இறுதி கட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியை காப்பாற்ற முடியும் என்பதே எங்கள் குறிக்கோளாக இருக்கும்.
 
அதுவொரு குறிப்பிடத்தக்க சாதனையாக இருக்கும். அந்தச் சாதனையை எங்கள் வாழ்நாளில் நாங்கள் பார்ப்போன் என்று நான் நம்புகிறேன்."

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments