Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை ஏன்?- என்ன சர்ச்சை?

Prasanth Karthick
வெள்ளி, 22 நவம்பர் 2024 (14:11 IST)

கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவதற்கு செவ்வாய் அன்று (நவம்பர் 19) சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

 

அதேநேரம், 'எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரைப் பயன்படுத்தாமல் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது மற்றும் பணப் பரிசை வழங்குவதில் எந்த தடையும் இல்லை' என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

 

"எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து அவதூறு பரப்பிய ஒருவருக்கு அவர் பெயரில் விருது அளிப்பது சரியல்ல" எனக் கூறுகிறார், வழக்கு தொடர்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் ஸ்ரீனிவாசன்.

 

"தனது கட்டுரைகளைப் படித்தால் எம்.எஸ்.சுப்புலட்சுமி மீதான தனது அபிமானத்தைப் புரிந்து கொள்ள முடியும்," என்கிறார் டி.எம்.கிருஷ்ணா.

 

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை, கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவதில் என்ன சிக்கல்? நீதிமன்றம் சொன்னது என்ன?

 

சங்கீத கலாநிதி விருது
 

கர்நாடக இசையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படுகிறது.

 

கடந்த 1942-ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுவதாக மியூசிக் அகாடமியின் இணையதளம் தெரிவிக்கிறது.

 

2004-ஆம் ஆண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமி மறைந்தார். இதையடுத்து, 2005 ஆம் ஆண்டு முதல் சங்கீத கலாநிதி விருது பெறுபவர்களுக்கு, 'தி இந்து' குழுமம் கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரால் இன்னொரு விருதையும் வழங்கி வருகிறது.

 

வழக்கு தொடர்ந்த பேரன்
 

இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட உள்ளதாக கடந்த மார்ச் 17-ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் ஸ்ரீனிவாசன் தொடர்ந்துள்ளார்.

 

தனது பாட்டியின் பெயரிலான விருது டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட உள்ளதாக வெளியான அறிவிப்பு, தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக மனுவில் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

 

டி.எம்.கிருஷ்ணாவின் 2 கட்டுரைகள்
 

தனது பாட்டி குறித்து அவதூறான கருத்துகளை பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் டி.எம்.கிருஷ்ணா பேசி வருவதாக மனுவில் கூறியுள்ள ஸ்ரீனிவாசன், சில ஆங்கில செய்தி இணையதளங்களில் வெளியான டி.எம்.கிருஷ்ணாவின் கட்டுரைகளை மேற்கோள் காட்டியிருந்தார்.

 

 

ஒரு கட்டுரையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்து விமர்சன ரீதியிலான கருத்தை டி.எம். கிருஷ்ணா வெளிப்படுத்தியதை தன் மனுவில் குறிப்பிட்டுள்ள ஸ்ரீனிவாசன் இரண்டாவது கட்டுரையில், கர்நாடக இசை உலகில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் பெயர் மற்றும் புகழ் குறித்து சர்ச்சையான கருத்துகளை டி.எம். கிருஷ்ணா தெரிவித்ததாக கூறியுள்ளார்.

 

இத்தகைய கருத்துகளை வலியுறுத்தும் விதமாகவே, 2017-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் டி.எம்.கிருஷ்ணா பேசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதுபோன்ற அவதூறான கருத்துகளை தனது குடும்பத்தினர் கடந்து சென்றதாக கூறியுள்ள ஸ்ரீனிவாசன், "தன் பாட்டியை சிறுமைப்படுத்தியதைத் தவிர வேறு எதையும் செய்யாத ஒருவருக்கு அவர் பெயரில் விருது வழங்கி கௌரவிப்பது சரியா?" எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 

டி.எம்.கிருஷ்ணாவின் பதில் என்ன?
 

இந்தக் குற்றச்சாட்டுகளை டி.எம்.கிருஷ்ணா முழுமையாக மறுத்துள்ளார். கட்டுரையின் உள்ளடக்கத்தைத் தாண்டி இவை மேற்கோள் காட்டப்பட்டுள்ளதாக பதில் மனுவில் அவர் கூறியுள்ளார்.

 

இது முழுவதும் பொய்யான மற்றும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் நோக்கில் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் டி.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

 

"எந்த வகையிலும் சுப்புலட்சுமி மீது தான் தாக்குதலை மேற்கொள்ளவில்லை" எனக் கூறியுள்ள கிருஷ்ணா, "அவர் என் அபிமானத்துக்குரியவராக இருப்பதை பலமுறை வெளிப்படுத்தியுள்ளேன். எனக்கு உத்வேகம் கிடைப்பதற்காக அவரை சந்தித்துள்ளேன்" எனவும் மனுவில் கூறியுள்ளார்.

 

கட்டுரைகளில் உள்ள உண்மைத்தன்மைக்கு மாறாக தவறான பிம்பத்தை ஸ்ரீனிவாசன் வழங்கியுள்ளதாகவும் மனுவில் டி.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

 

"தனது கட்டுரைகளைப் படித்தால் மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி மீதும் அவரது இசையின் மீதும் எனக்குள்ள அபிமானத்தைப் புரிந்து கொள்ள முடியும்" எனவும் மனுவில் டி.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

 

இதுகுறித்து டி.எம்.கிருஷ்ணாவிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "கடந்த பத்து மாதங்களாக இந்த விவகாரம் குறித்து நான் எந்த விளக்கத்தையும் கூறவில்லை. அதைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.

 

மியூசிக் அகாடமி சொல்வது என்ன?

"இந்த வழக்கைத் தொடர்வதற்கு மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை" எனக் கூறி, மியூசிக் அகாடமி தரப்பில் நீதிமன்றத்தில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

 

'தி இந்து' ஆங்கில குழுமம் சார்பில் விருதுக்கு உரிய நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் தங்களுக்கு எந்த பங்களிப்பும் இல்லை எனவும் மனுவில் மியூசிக் அகாடமி தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து, தி மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளியிடம் பிபிசி தமிழ் பேசியது. "நீதிமன்ற தீர்ப்பு இன்னும் வெளியில் வரவில்லை. அது கைகளுக்கு வந்ததும் படித்துவிட்டுப் பேசுகிறேன்" என்றார்.

 

வியாழன் அன்று மீண்டும் என்.முரளியிடம் இந்த வழக்கு குறித்து பிபிசி தமிழ் கேட்டபோது, "நான் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார்.

 

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் உயில்
 

வழக்கின் விசாரணையின்போது, எம்.எஸ்.சுப்புலட்சுமி எழுதிய உயில் குறித்து விவாதிக்கப்பட்டது.

 

அதில், எம்.எஸ்.சுப்புலட்சுமியால் 1997-ஆம் ஆண்டு உயில் ஒன்று எழுதப்பட்டதாகவும் அதில் தனது பெயரில் நினைவுச் சின்னம் மற்றும் அறக்கட்டளைகளை உருவாக்கக் கூடாது எனக் கூறியிருந்ததாக மனுவில் ஸ்ரீனிவாசன் கூறியிருந்தார்.

 

அவரது பெயரில் விருது வழங்குவது என்பது அவரது விருப்பத்துக்கு எதிராக உள்ளதாகவும் மனுவில் ஸ்ரீனிவாசன் கூறியிருந்தார்.

 

இதனை உறுதிப்படுத்திய நீதிபதி ஜெயச்சந்திரன், 'இறந்த ஆன்மாவின் விருப்பத்துக்கு மதிப்பளித்து அவரைப் போற்றி கௌரவிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

 

மேலும், இந்த வழக்கைத் தொடர்வதற்கு மனுதாரருக்கு அனைத்து முகாந்திரங்களும் உள்ளதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

 

சங்கீத கலாநிதி விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவதற்குத் எந்த தடையும் இல்லை என கூறிய நீதிமன்றம், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரைப் பயன்படுத்தாமல் தி இந்து விருது மற்றும் அதற்கான பணப்பரிசை வழங்கலாம் என தீர்ப்பளித்தது.

 

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்! - அரசியல் தலைவர் அஞ்சலி!

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments