Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படுக்கை சுத்தமாக இருப்பது ஏன் அவசியம்? எத்தனை நாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவேண்டும்?

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (11:21 IST)
உங்கள் துணை, உங்கள் பெற்றோர் மற்றும் உங்களுடன் பணிபுரியும் நபர்களைவிட உங்களுக்கு நீண்ட காலத்திற்கு ஆதரவாக இருக்கப்போவது உங்கள் படுக்கைதான். ஏனென்றால் நம் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை படுக்கையில் செலவிடுகிறோம். நமக்கு சக துணையாகவே இருக்கும் அந்தப் படுக்கையை நாம் முறையாக கவனிக்கிறோமா? படுக்கையின் விரிப்பை எவ்வளவு காலத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்?
 
படுக்கை விரிப்பை முறையாக சுத்தம் செய்வது படுக்கையை அழகாக வைத்திருப்பதற்கு மட்டுமின்றி நம்முடைய உடல்நலத்திற்கும் நல்லது.
 
பல வாரங்கள் அல்லது மாதங்களுக்கு படுக்கை விரிப்பை மாற்றாமல் வைத்திருப்பது அதை அழுக்காக்குவதோடு, வெப்பமானதாகவும் மாற்றுகிறது. மேலும், அதில் பாக்டீரியா மற்றும் துர்நாற்றம் அதிகரிக்கவும் காரணமாக அமைகின்றது.
 
உங்கள் மெத்தையை சுத்தமாக வைத்திருக்க, படுக்கை விரிப்பை வாரந்தோறும் மாற்ற வேண்டும் என்கிறது தூக்கத்தின் தரத்தை ஆய்வு செய்யும் ஸ்லீப் பவுண்டேஷன் அமைப்பு.
 
அதேபோல தலையணை உறைகள் மற்றும் போர்வைகளையும் அதன் பயன்பாட்டை பொறுத்து அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
தலையணையை சுத்தம் செய்வதும் மிக முக்கியம். சுத்தம் செய்வதற்கு முன்பாக அதை இயந்திரம் கொண்டு சுத்தம் செய்ய முடியுமா என்று பார்த்துக் கொள்ளவும்.
 
இவை அனைத்தையும் சூடான நீரில் கழுவுவது சிறந்தது. அதன் மூலம் கண்ணுக்குத் தெரியாத தூசி பூச்சிகளிடம் இருந்து விடுபட முடியும்.
 
சூடான நீரில் கழுவுவதற்கு முன், அவ்வாறு செய்வதால் சுருக்கம், சேதம் அல்லது நிறமிழப்பு ஆகியவை ஏற்படுமா என்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
 
சில படுக்கை விரிப்புகளை அதன் வடிவமைப்பை பொறுத்து தலைகீழாகவும் மாற்றலாம்.
 
சில மெத்தைகள் குளிர்காலம் மற்றும் கோடை காலத்திற்கு ஏற்ப மாறுபட்ட துணிகளால் செய்யப்பட்டிருக்கும்.
 
எனவே ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்ப அவற்றை மாற்றலாம்.
 
தேவைப்பட்டால் பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். அதில் விரிப்புகளை நீண்ட நேரம் ஊற வைத்துவிட்டு, அதன் பிறகு துணி துவைக்கும் பிரஷ்கள் கொண்டு சுத்தப்படுத்தலாம்.
 
ஒவ்வொரு கறைக்கும் ஒவ்வோர் உத்தி
 
குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்யும் வழக்கமான சுத்தத்தை தாண்டி, சில கறைகளை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும். தவறினால் பாக்டீரியாக்கள் பெருக்கமடையவும், துர்நாற்றம் அதிகரிக்கவும் அவை வழிவகுக்கும். என்ன வகையான கறையாக இருந்தாலும், ஊற வைத்தல் மற்றும் தேய்த்தல் என இரண்டு விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். இது விரிப்பை மேலும் மோசமாக்கும்.
 
கையுறைகளை அணிந்து, கறையை ஒரு துணி கொண்டு நீக்க வேண்டும். அதன் மூலம் கறை மற்ற இடங்களுக்கு பரவாது. கறை நீங்கவில்லை என்றால் அவை நீங்கும் வரை தொடர்ந்து செய்யலாம். ஓரிடத்தில் இருக்கும் கறையை முழுமையாக அகற்றியதும் மற்ற இடத்தில் உள்ள கறையை நீக்கலாம்.
 
அனைத்து கறைகளையும் நீக்கியதும் நீரில் அலசலாம். ஆனால், கறையை அகற்ற நன்கு பிழிந்த துணி அல்லது துண்டை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 
மெத்தைகள் மற்றும் தலையணைகளில் காணப்படும் பொதுவான உமிழ்நீர் மற்றும் வியர்வை கறைகளை மெத்தைகளுக்கான சிறப்பு கறை நீக்கி கொண்டு சுத்தப்படுத்தலாம்.
சிறப்பு கறை நீக்கி பயன்படுத்தும் போது உங்கள் மெத்தை விரிப்புகளுக்கு அவை பொருத்தமாக இருக்குமா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
 
மெத்தையில் இருக்கும் நாள்பட்டகறைகளை நீக்க, சிறிதளவு நீர் கலந்து பேக்கிங் சோடாவை பேஸ்ட் வடிவில் உருவாக்கி பயன்படுத்தலாம். கறை உள்ள பகுதிகளில் பேஸ்ட்டை தடவி, 30 நிமிடங்கள்வரை உலர வைக்கலாம். அதன் பிறகு பிரஷ் கொண்டு மெதுவாக கறையை சுத்தம் செய்யலாம்.
 
சமீபத்திய கறையை நீக்க ஹைட்ரஜன் பெராக்சைடை பயன்படுத்துவது சிறந்த தீர்வாக இருக்கும். ஹைட்ரஜன் பெராக்சைடை கறை மீது தடவி அதை பஞ்சு அல்லது மென்மையான துணியால் உறிஞ்சி எடுக்கலாம். அதன் பிறகு, சுத்தமான நீரில் அலசி, பேக்கிங் சோடாவை அதன் மீது தடவலாம். பின்னர், சிறிது நேரத்திற்குப் பிறகு மென்மையான பிரஷ் கொண்டு கறையை நீக்கலாம்.
 
விரிப்பை மாற்றுங்கள்
 
சிறுநீர் கறைகளில் இருந்து மெத்தைகளை பாதுகாக்க முன்னெச்சரிக்கையாக நீர்ப்புகாத, துவைக்கக்கூடிய மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய விரிப்பான்களை பயன்படுத்தலாம். முழு மெத்தையையும் மறைக்காமல் குறிப்பிட்ட பகுதியை மட்டுமே மறைக்கக் கூடிய விரிப்புகள் உள்ளன.
 
படுக்கையில் வாந்தி எடுத்தால் அந்தக் கறையை உடனே நீக்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள ரசாயனம் மெத்தையை சேதப்படுத்திவிடும்.
 
சிறிது கை கழுவும் திரவம் அல்லது மெத்தை விரிப்பான்களுக்கான நுரையை வெதுவெதுப்பான நீரில் கரைத்து, சில துளிகள் அம்மோனியாவைச் சேர்க்க வேண்டும். விரிப்பானில் இருந்து அதிகப்படியான நீரை நீக்கிய பிறகு அந்தக் கலவையை ஒரு பஞ்சு அல்லது துணி கொண்டு அதன் மீது தடவ வேண்டும். பின்னர் ஆல்கஹால் அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற கிருமி நாசினிகள் கலந்த சுத்தமான தண்ணீரில் நனைத்து, உலர்ந்த துணி அல்லது உறிஞ்சும் காகிதம் கொண்டு நன்கு உலர வைக்குமாறு நுகர்வோர் மற்றும் பயனர்களின் அமைப்பு பரிந்துரைக்கிறது. எந்தச் சூழலிலும் விரிப்பான்கள் நன்கு உலரும் வரை மெத்தையில் விரிக்க கூடாது.
 
உற்பத்தியாளர்கள் வழக்கமாக 8 அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மெத்தை விரிப்பானை மாற்றும்படி பரிந்துரைக்கின்றனர். எனினும், இது சரியான அறிவியல் இல்லை.
 
உங்களுக்கு வேண்டியதை படுக்கை தரவில்லை என்றால் ஒவ்வோர் இரவும் இன்பம் அல்லது ஓய்வு கொடுப்பதற்குப் பதிலாக உங்களைத் தொந்தரவு செய்தால், இது வேறு வழிகளைத் தேட வேண்டிய நேரமாக இருக்கலாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு.. மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகளின் விவரங்கள்..!

இன்று காலை 10 மணி வரை வெளுத்து வாங்கும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

இன்று முதல் நாடாளுமன்ற கூட்டம்.. வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments