Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாங்காய் மாநாட்டில் இந்தியாவும் சீனாவும் பேசிக்கொள்ளப் போவது என்ன?

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (09:47 IST)
செப்டம்பர் 15-16 தேதிகளில் உஸ்பெகிஸ்தானின் வரலாற்று சிறப்புவாய்ந்த நகரமான சமர்கண்டில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், இந்திய சீன எல்லை மோதல்களுக்குப் பிறகு, முதல்முறையாக சந்திக்க உள்ளனர். 2020இல் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் நேரிட்ட மோதல்களுக்கு பிறகு இரு நாடுகளின் தலைவர்களும் மற்ற தலைவர்களுடன் ஒரே மேடையில் அமரப்போகின்றனர்.


உச்சி மாநாட்டின் போது இரு தலைவர்களுக்கும் இடையே இருதரப்பு சந்திப்பு நடந்தால், என்னென்ன விஷயங்கள் விவாதிக்கப்படும்?

கிழக்கு லடாக்கில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் திங்களன்று தத்தமது துருப்புக்களை திரும்ப பெறும் செயல்முறையை நிறைவு செய்தன. இதைத்தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. 2020 மே மாதம் முதல் லடாக்கின் பல்வேறு பகுதிகளில் நிலவிய ராணுவ தேக்கநிலை, தீர்க்கப்பட்டு விட்டதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்தியாவின் அழைப்பின் பேரில் டெல்லி வந்திருந்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் குறிக்கிறது. இந்திய-சீன உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளுக்கு தடைவிதிக்கும் ஐ.நா. தீர்மானத்தை சீனா இரண்டு முறை வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுத்தது குறித்து இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. இதுகுறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்கக்கூடும்.

டெல்லியில் உள்ள ஃபோர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் சீன விவகாரங்களில் நிபுணரான டாக்டர் ஃபைசல் அகமது, இரு தலைவர்களுக்கும் இடையேயான சந்திப்பு நடக்கும் என்று நம்புகிறார்.

அவர்களுக்கிடையே என்னென்ன விஷயங்கள் பரிசீலிக்கப்படும் என்பது குறித்துப்பேசிய அவர்," இந்த இருதரப்பு சந்திப்பில் இரண்டு அல்லது மூன்று விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். முதலில், எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படலாம். அதைத் தீர்க்க,பேச்சுக்கள் விரைவாக நடக்கவேண்டும் என்று இரு நாடுகளும் விரும்புகின்றன.

இரண்டாவதாக, வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு பற்றி நிச்சயமாக பேசப்படும்.

மூன்றாவது விஷயம், பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் இருக்கலாம். நேட்டோ அமைப்பு போல ஒரு மாற்று பாதுகாப்பு கட்டமைப்பு இருக்க வேண்டும் என்று இந்தியாவும், சீனாவும் விரும்புகின்றன," என்றார்.

"இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் சந்திப்பார்கள் என்று நான் ஏறக்குறைய உறுதியாக நம்புகிறேன். ஏனென்றால் நீண்ட காலத்திற்குப் பிறகு இருவரும் இதுபோன்ற ஒரு மேடையில் நேருக்கு நேர் வர உள்ளனர். சந்திப்பு நடக்கவில்லை என்றால் அது மிகவும் தவறான சமிக்ஞையை அனுப்பும். இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கவில்லையென்றால், மிகவும் வெற்றிகரமான மாநாடாக அது கருதப்படாது."என்று ஃபைசல் அகமது மேலும் கூறுகிறார்.

இந்தியாவும், சீனாவும் மாநாடு குறித்து இதுவரை அதிகமாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. "கோவிட் காரணமாக நீண்டகாலம் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் இருந்தது. எனவே இப்போது ஒருவரை ஒருவர் சந்திக்க உற்சாகமாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று சிங்கப்பூரைச் சேர்ந்த சீனாவில் பிறந்த அரசியல் ஆய்வாளரான சுன் ஷி குறிப்பிட்டார். இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றும் கோவிட் தொற்று அபாயம் இல்லை என்றால் அவர்கள் சந்திக்க முயற்சிப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். கடந்த மாநாட்டில் ஈரானுக்கு SCO (ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) உறுப்பினர் பதவியை அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்த முறை அதன் தலைவர் இப்ராஹிம் ரைசியும் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் பதவி இந்தியாவுக்கு கிடைக்குமா?

சமர்கண்ட் மாநாட்டிற்குப் பிறகு அடுத்த ஒரு வருடத்திற்கு எஸ்சிஓவின் தலைவர் பதவியை இந்தியா பெறும். எனவே அடுத்த ஆண்டு உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும். இந்தியாவின் தலைமையின் கீழ் சீனாவுடனான உறவுகள் மேம்படும் என்று சுன் ஷி நம்புகிறார். "எஸ்சிஓவின் முக்கியத்துவத்தை சீனா புரிந்துகொண்டுள்ளது. ஏனெனில் எஸ்சிஓ மூலம் சின்ஜியாங்கில் அதன் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் மற்றும் சீனாவின் எல்லைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது,"என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சமர்கண்ட் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள் பலதரப்பு ஒத்துழைப்பின் நிலையை ஆய்வு செய்யவுள்ளன என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் தற்போதைய சூழலில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமை்பின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கான முன்னுரிமைகள் மற்றும் நடைமுறை செயல்பாடுகளும் தீர்மானிக்கப்படும். எஸ்சிஓவின் பங்கை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்படும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தொடர்ச்சியான விரிவாக்கத்திற்கு அதிக கவனம் செலுத்தப்படும் என்று அலெக்சாண்டர் வொரொட்சோவ் கூறுகிறார். இதில் தற்போது எட்டு உறுப்பினர்கள் உள்ளனர். இப்போது இரானுக்கும் உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது. எகிப்து, கத்தார் மற்றும் செளதி அரேபியாவின் உறுப்பினர் விண்ணப்பங்களையும் அமைப்பு பரிசீலிக்கும். மேலும் பெலாரூஸின் உறுப்பினர் பதவி தொடர்பான பணியும் முறைப்படி தொடங்கும்.

வெள்ளிக்கிழமை மோதி-புதின் சந்திப்பு

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், அதிபர் புதினுக்கும், பிரதமர் மோதிக்கும் இடையே வெள்ளிக்கிழமை சந்திப்பு நடைபெறும் என்றும் அதில் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் முக்கியமாக விவாதிக்கப்படும் என்றும் உறுதி செய்தது. " இந்த ஆண்டின் முதல் பாதியில் இருதரப்பு வர்த்தகம் 1150 கோடி டாலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 120% அதிகம்," என்றும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்தது.

முன்பு ரஷ்யாவின் எண்ணெயை அரிதாகவே வாங்கிய இந்தியா, இப்போது சீனாவுக்கு அடுத்தபடியாக மாஸ்கோவின் இரண்டாவது பெரிய எண்ணெய் வாடிக்கையாளராக மாறியுள்ளது. இரு நாடுகளும் ரஷ்ய எரியாற்றலை பெருமளவு வாங்குகின்றன. யுக்ரேன் போர் காரணமாக விதிக்கப்பட்ட மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் விளைவுகளைத் தவிர்க்க இது மாஸ்கோவிற்கு உதவுகிறது.

மேலும் இரு ஆசியப் பொருளாதாரங்களும் மலிவான எரிசக்தியை பெறுவதன் மூலம் பயனடைகின்றன. மேற்கத்திய நாடுகளின் அதிருப்தி இருந்தபோதிலும், இந்தியாவும் சீனாவும் யுக்ரேனில் ரஷ்ய தாக்குதல்களை பகிரங்கமாக விமர்சிக்கவில்லை.

கடந்த ஆண்டு, தஜிகிஸ்தானின் தலைநகரான துஷான்பேயில் நடந்த உச்சிமாநாட்டில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா துருப்புக்களை விலக்கிக்கொள்வதால் ஏற்படும் சூழ்நிலை, உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் மீதான அதன் விளைவுகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் கடுமையான போர் மற்றும் அது தொடர்பான பிராந்திய பாதுகாப்பு பிரச்சனையும் இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்படலாம்.

ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே நடந்து வரும் போர் மற்றும் தைவான் மீதான சீனாவின் அணுகுமுறை காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. "யுக்ரேனைப் பற்றி பேசினால், நேட்டோவை புறக்கணிக்க முடியாது," என்று டாக்டர் ஃபைசல் அகமது கூறுகிறார்.

பிராந்தியத்தில் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஷங்காய் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டது. ஆனால் இதுவரை நேட்டோ போன்ற பிராந்திய பாதுகாப்பு அமைப்பு நிறுவப்படவில்லை என்று அவர் கூறுகிறார்." எஸ்ஸிஓவின் இரண்டு முக்கிய உறுப்பினர்களான ரஷ்யாவும் சீனாவும் நேட்டோ தொடர்பாக பாதுகாப்பின்மையை உணர்கின்றன.

இந்தியாவும் நேட்டோ தொடர்பாக மிகவும் மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் முழு பிராந்தியத்திலும் அதாவது ஆசியா முழுவதற்குமான(நேட்டோவுடன் ஒப்பிடும்போது) ஒரு மாற்று பாதுகாப்பு உள்கட்டமைப்பை நிறுவ முயற்சி செய்யவேண்டும். நேட்டோவுக்கு எதிர் சமநிலை (counter balance) அளித்தே ஆகவேண்டும்,"என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இந்தப்பிராந்தியத்தில் நேட்டோவைப் போன்ற பாதுகாப்பு அமைப்பு சாத்தியமில்லை என்கிறார் சுன் ஷி. "கசப்பான உண்மை என்னவென்றால், நேட்டோவைப் போன்ற பாதுகாப்பு உள்கட்டமைப்பை இந்த பிராந்தியத்தில் அமைக்க முடியாது. ஏனென்றால் சமூக விழுமியங்கள் மற்றும் கலாசாரங்களில் நாம் மிகவும் மாறுபட்டவர்கள். மேலும் பிராந்திய உறுப்பினர்களிடையே இன்னும் மோதல்கள் உள்ளன," என்று அவர் கூறுகிறார்.

மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அகாடமி ஆஃப் சயின்ஸின் ஓரியண்டல் ஸ்டடீஸ் அமைப்பில் அலெக்சாண்டர் வொரொட்சோவ், "ரஷ்ய- யுக்ரேன் போர், தைவான் மற்றும் சீனாவின் அறிக்கைகளின் பின்னணியில் இந்த ஆண்டு SCO உச்சிமாநாடு அதிக கவனத்தை ஈர்த்துள்ளது" என்று கூறுகிறார்.

அதுபோக, "உலகில் SCO இன் வலு மற்றும் முக்கியத்துவம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் பல நாடுகள் அதில் சேர விரும்புகின்றன. இந்த ஆண்டு உலகளாவிய நிலைமை மோசமாகிவிட்டது. புதிய சவால்கள் உருவாகியுள்ளன. தலைவர்கள் இதை புறக்கணிக்க முடியாது,"என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments