Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்விட்டரை எச்சரித்த இந்திய அரசு: "எங்கள் சட்டத்துக்கு கட்டுப்படுங்கள்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (14:19 IST)
இந்தியாவில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு, இங்கு தொழில் செய்யும் எந்தவொரு நிறுவனமும் கட்டுப்பட்டே தீர வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திடம் இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் அஜய் பிரகாஷ் சாஹ்னே புதன்கிழமை கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.
 
ட்விட்டரின் வேண்டுகோளின் பேரில், இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளர், ட்விட்டர் நிறுவனத்தின் உலகளாவிய பொதுக் கொள்கைப்பிரிவு துணைத் தலைவர் மோனிக் மெச்சே, துணை பொது ஆலோசகர் மற்றும் சட்டப்பிரிவு துணைத் தலைவர் ஜிம் பேக்கர் ஆகியோருடன் காணொளி காட்சி வாயிலாக பேசினார்.
 
'விவசாயிகள் இனப்படுகொலை' என்ற பெயரில் பகிர அனுமதிக்கப்பட்ட ஹேஷ்டேக் மற்றும் காலிஸ்தான் அனுதாபிகள் மற்றும் பாகிஸ்தானின் ஆதரவுடன் கூடிய ட்விட்டர் கணக்குகளை நீக்குமாறு இந்திய அரசு ட்விட்டருக்கு உத்தரவிட்ட நிலையில், இந்த சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது.
 
இதில் பகிரப்பட்ட விவரங்களை இந்திய அரசு புதன்கிழமை இரவு வெளியிட்டிருக்கிறது. அது குறித்து மத்திய அரசு உயரதிகாரி விவரித்தார்.
 
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர், ட்விட்டர் பிரதிநிதிகளிடம், இந்தியாவில் நாங்கள் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறோம், விமர்சனங்களை மதிக்கிறோம், ஏனெனில் அது நமது ஜனநாயகத்தின் ஒரு பகுதி. பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வலுவான முறையை இந்தியா கொண்டுள்ளது, இது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(1)இன் கீழ் மக்களின் அடிப்படை உரிமைகள் என்று மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் கருத்துச் சுதந்திரம் என்பது முழுமையானதாக இல்லாமல், அது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19(2) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதே யதார்த்தம். உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் அவ்வப்போது இதை உறுதிப்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டார்.
 
இந்தியாவில் வர்த்தகம் செய்ய ட்விட்டரை வரவேற்கும் அதே சமயம், இந்தியாவில் காணப்படும் சாதகமான வணிகச் சூழல் காரணமாக, வெளிப்படையான இணையம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உறுதியான அர்ப்பணிப்புக்கான ஒரு தளமாக கடந்த சில ஆண்டுகளில் ட்விட்டர் கணிசமாக வளர்ந்துள்ளது.
 
இதை சுட்டிக்காட்டிய இந்திய அரசுத்துறை செயலாளர், இந்தியாவில் தொழில் செய்யும் ஒரு வணிக நிறுவனமாக, இந்திய சட்டங்களையும் ஜனநாயகத்தையும் ட்விட்டர் நிறுவனம் மதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
 
ட்விட்டர் நிறுவனம் பிற வணிக நிறுவனத்தை போலவே தனக்கென சொந்த விதிகளையும் வழிகாட்டுதல்களையும் வகுக்க தடையில்லை. ஆனால் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட இந்திய சட்டங்கள் ட்விட்டரின் சொந்த விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கடந்தும் பின்பற்றப்பட வேண்டும் என்று அரசுத்துறைச் செயலாளர் வலியுறுத்தினார்.
 
விவசாயிகள் இனப்படுகொலை' என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்துவதற்கான பிரச்னையை ட்விட்டர் நிர்வாகிகளிடம் எடுத்துரைத்த அவர், அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகே அதை நீக்க ட்விட்டர் எடுத்த தாமதமான நடவடிக்கைக்கு கடும் அதிருப்தியை வெளியிட்டார்.
 
இத்தகைய பொறுப்பற்ற உள்ளடக்கம் பிரச்னையைத் தூண்டும் மற்றும் ஆதாரமற்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி தவறான தகவல்களைப் பரப்புவது இந்திய அரசியலமைப்பின் 19ஆவது பிரிவின் கீழ் தவறு என்பதும் ட்விட்டர் நிர்வாகிகளிடம் நினைவூட்டப்பட்டது. அத்தகைய செயல்பாடு ஊடக சுதந்திரமோ கருத்துச் சுதந்திரமோ ஆகாது என்றும் அரசுத்துறைச் செயலாளர் குறிப்பிட்டார்.
 
இவ்வளவு நடந்த பிறகும் சர்ச்சைக்குரிய அந்த ஹேஷ்டேக்கை தொடர ட்விட்டர் அனுமதித்தது மிகவும் துரதிருஷ்டவசமானது என்ற கவலையும் ட்விட்டர் நிறுவனத்திடம் பகிரப்பட்டது.
 
அமெரிக்காவின் கேப்பிடல் ஹில் சம்பவத்தின்போது ட்விட்டர் எடுத்த நடவடிக்கை குறித்து அதன் நிர்வாகிகளிடம் நினைவுகூர்ந்த அரசுத்துறைச் செயலாளர், இந்தியாவின் செங்கோட்டையில் ஏற்பட்ட இடையூறு மற்றும் அதன் பின்விளைவுகளுடன் ஒப்பிட்டு இரு வேறு விவகாரங்களில் ட்விட்டரின் செயல்பாடு வெவ்வேறு விதமாக இருந்தது குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
 
இந்த விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனம் கருத்துச் சுதந்திரத்தின் பக்கம் இருக்காமல் அந்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி பொது ஒழுங்குக்கு பங்கம் விளைவிக்க முற்பட்டவர்களுக்கு துணை நின்றதா என்றும் அரசின் சார்பில் ட்விட்டர் நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
 
இந்தியாவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தை தூண்டக்கூடிய வகையில் அமைந்த ஒரு ஆவணத்தொகுப்பின் இன்டர்நெட் இணைப்பு, வெளிநாட்டில் திட்டமிடப்பட்டதாகவும், இந்தியாவின் இறையாண்மையை குலைக்கும் வகையில் அதை பகிர ட்விட்டர் தளம் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்றும் வினவிய செயலாளர், அந்த செயல் ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கை என்றும் கூறினார்.
 
சட்டபூர்வமாக பிறப்பிக்கப்படும் எந்தவொரு ஆணையையும் , இந்தியாவில் தொழில் செய்யும் எந்தவொரு வணிக நிறுவனமும் இங்குள்ள சட்டத்துக்கு உட்பட்டுக் கட்டுப்பட்டே தீர வேண்டும். அந்த ஆணைக்கு உடனடியாக கீழ்படிய வேண்டும்.
 
ஆனால், சர்ச்சைக்குரிய இடுகைகள் பகிர்வு விவகாரத்தில் இந்திய அரசு உத்தரவிட்ட பிறகும், மிகவும் அலட்சியத்துடன் மிகவும் தாமதமாக ஆணையின் ஒரு சில பகுதிகள் மட்டுமே செயல்படுத்தப்பட்ட போக்குக்கு தனது ஏமாற்றத்தை அரசுத்துறைச் செயலாளர் பதிவு செய்தார். இப்படி தாமதமாக பின்பற்றப்படும் நடவடிக்கை, அர்த்தமற்றதாகி விடும்.
 
இந்தியாவில் இங்குள்ள சட்டங்களே பிரதானம். இங்கு சட்டத்தின் ஆட்சியின்படி பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை ட்விட்டர் நிறுவனம் மதிப்பது அவசியம் என்றும் அவரிடம் வலியுறுத்தப்பட்டது.
 
போலியான, சரிபார்க்கப்படாத, அனாமதேய மற்றும் தானியங்கியாக இயங்கும் கணக்குகளை ட்விட்டர் தளம் அனுமதிப்பது குறித்த கவலையையும் இந்திய அரசு ட்விட்டர் நிர்வாகிகளின் கவனத்துக் கொண்டு சென்றது.
 
இதைத்தொடர்ந்து இந்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்க ஒத்துழைப்பு வழங்குவதாக அரசுத்துறை செயலாளரிடம் ட்விட்டர் நிறுவன நிர்வாகிகள் கூறியதாக மத்திய அரசு உயரதிகாரி தெரிவித்தார்.
 
சந்திக்க மறுத்த ரவிசங்கர் பிரசாத்
 
முன்னதாக, ட்விட்டர் இந்திய பிரிவு நிர்வாகிகள், இந்த விவகாரம் தொடர்பாக துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாதை சந்தித்துப் பேச அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், அவர்களை நேரில் பார்ப்பதை ரவிசங்கர் பிரசாத் தவிர்த்ததால், துறைச் செயலாளரை மட்டும் அவர்கள் சந்தித்து விட்டுச் சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்! - அரசியல் தலைவர் அஞ்சலி!

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments