Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் 140 ஆண்டு பழமையான முதல் அரபு மதரஸாவை மூட உத்தரவு - என்ன நடந்தது?

Sinoj
செவ்வாய், 30 ஜனவரி 2024 (21:14 IST)
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மதரஸாவை (அரபுக் கல்லூரி) தற்காலிகமாக மூடுமாறு, முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. அங்கு கற்கும் மாணவர் ஒருவரை, ஆசிரியர் மிகக் கடுமையாகத் தாக்கியதையடுத்து, மதரஸாவை தற்காலிகமாக மூடுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
 
"மாணவர் தாக்கப்பட்ட விஷயம் தமது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கிணங்க மதரஸாவின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களை விசாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். அந்த விசாரணை முடியும் வரையில், ஜனவரி 19-ம் தேதி முதல் மதரஸாவை தற்காலிகமாக மூட வேண்டும்" என்று மதரஸாவுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அனுப்பி வைத்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளது.
 
1884-ம் ஆண்டு இலங்கையில் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட பாரி மதரஸா (Baari Arabic College) தொடர்பாகவே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்டத்திலுள்ள வெலிகம பிரதேசத்தில் இந்த மதரஸா அமைந்துள்ளது. அங்கு அதிபர், ஆசிரியர்கள் 20 பேர் உள்ளனர். 180 ஆண் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 12 முதல் 15 வயதுக்குள் அந்த மதரஸாவில் சேரும் மாணவர்கள், 7 ஆண்டுகள் கற்று, மௌலவி பட்டத்துடன் வெளியேறுகின்றனர்.
 
,
மாணவரின் உடலில் இருந்த காயங்கள்
 
பாரி மதரஸாவில் கற்கும் 12 வயதுடைய அப்பாஸ் எனும் மாணவரை இம்மாதம் 16-ம் தேதி, அங்கு பணியாற்றும் இபாம் எனும் ஆசிரியர் மிகக் கடுமையாகத் தாக்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது. அம்மாணவர், குர்ஆனை மனனத்தின் அடிப்படையில் சரியாக ஓதி, பாடம் கொடுக்கவில்லை என்பதற்காகவே, ஆசிரியர் இபாம், மரக்கிளையினால் அந்த மாணவரை மிகவும் மோசமாக அடித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் மாணவரின் உடலில் காயங்களும் தழும்புகளும் ஏற்பட்டன.
 
இந்த சம்பவம் 16-ம் தேதி காலையில் நடந்ததாக தெரியவருகிறது. தாக்குதலுக்குள்ளான மாணவர், அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர். அவர் மாலை வேளையில் மதரஸா நிர்வாகத்தினரிடம் கூறாமல் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவரின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் தழும்புகளைப் பார்த்து கவலையும் ஆத்திரமும் அடைந்த அவரின் வீட்டார், மாணவரின் உடலிலுள்ள காயங்களை வீடியோவாக எடுத்து சமூக ஊடகமான பேஸ்புக்கில் பதிவிட்டனர். அதன் பிறகுதான் இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
 
 
பாரி மதரஸா நூற்றாண்டு விழாவையொட்டி இலங்கை அரசு வெளியிட்ட முத்திரை
 
மாணவர் அப்பாஸ் தாக்கப்பட்டது தொடர்பாக பொதுமக்கள் தரப்பிலிருந்து சமூக ஊடகங்களில் கண்டனங்கள் எழும் வரை, பாரி மதரஸாவின் நிர்வாகம், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மாணவரின் மாமா (தாயின் சகோதரர்) றிப்டீன் பிபிசி தமிழிடம் கூறினார்.
 
“அப்பாஸின் தந்தை வெளிநாடொன்றில் வேலை செய்கிறார். மதரஸாவில் அப்பாஸ் தாக்கப்பட்டதையடுத்து, அவருக்கு ஏற்பட்ட காயங்களை வீடியோவாக எடுத்து பேஸ்புக்கில் அவரின் வீட்டார் வெளியிட்டனர். அதனைப் பார்த்த காவல்துறையினர், அப்பாஸையும் அவரின் தாயாரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து, நடந்தவை குறித்து விசாரித்துள்ளனர். பின்னர் அப்பாஸுக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக, அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவருக்கு ஒருநாள் முழுவதும் ‘வார்ட்’டில் வைத்து சிகிக்சையளிக்கப்பட்டது” என, மாணவரின் மாமா றிப்டீன் விவரித்தார்.
 
குறித்த மதரஸாவை மூடுவதில் மாணவரின் தாய்க்கு உடன்பாடு இல்லை என்றும் தாக்கிய ஆசிரியரை வேலையிலிருந்து நிறுத்த வேண்டும் என்பதுதான் மாணவரின் தாயுடைய நிலைப்பாடாக உள்ளது எனவும் றிப்டீன் கூறினார். மாணவர் அப்பாஸை தாக்கிய ஆசிரியரை பணியிலிருந்து நிறுத்தியுள்ளதாக, பாரி மதரஸா நிர்வாகம் அப்பாஸின் தாயாரிடம் தெரிவித்துள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
 
முகம்மது பைசல், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்
 
இந்த விவகாரம் தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ. முகம்மது பைசலுடன் பிபிசி தமிழ் பேசியபோது, மாணவர் தாக்கப்பட்டமை தொடர்பாக தமது அலுவலர்கள் மூலம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வெலிகம காவல்துறையினருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். காவல்துறை அறிக்கையினை வைத்தே, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.
 
அதேவேளை மாணவரைத் தாக்கிய ஆசிரியருக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின், தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாரி மதரஸாவை திறப்பதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனைகளும் இல்லை என்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.
 
மாணவர் தாக்கப்பட்டமை தொடர்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, பாரி மதரஸா நிர்வாகம் சரியான தகவல்களை வழங்கி ஒத்துழைக்கவில்லை என்றும் அதன் காரணமாகவே மதரஸாவை தற்காலிகமாக மூட வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டதாகவும் பணிப்பாளர் பைசல் கூறினார்.
 
"பாரி மதரஸாவில் மாணவர் ஒருவர் இவ்வாறு தாக்கப்பட்டமை பற்றி, மதரஸா நிர்வாகம் தமக்குக் கடைசி வரை தெரியப்படுத்தவில்லை, சமூக ஊடகங்களில் இவ்விஷயம் குறித்து வெளியான தகவல்கள் மூலமே சம்பவத்தை அறிந்துகொண்டோம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
“இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 317 மதரஸாக்கள் உள்ளன. 2019-ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவானது, மதரஸாக்களின் எண்ணிக்கையை ஐம்பதாக குறைக்குமாறு பரிந்துரைத்துள்ளது. வேறோரு இடத்தில் 75-ஆக குறைக்குமாறு கூறியுள்ளது. ஆனால், அவ்வாறு குறைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. அதனால் இதுகுறித்து பாதுகாப்பு அமைச்கத்துடன் பேசி வருகிறோம்” எனவும் அவர் கூறினார்.
 
”அரச பாட சாலைகளையும் அவற்றில் நடைபெறும் விஷயங்களையும் கண்காணிப்பதற்கென ஓர் அமைச்சகம் மற்றும் திணைக்களம் என பெரிய அமைப்புகள் உள்ளன. ஆனால், மதரஸாக்களை கண்காணிப்பதற்கு அவ்வாறான அமைப்புகள் இல்லை. சுமார் 50 பணியாளர்களைக் கொண்ட முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தை வைத்துக்கொண்டு மதரஸாக்களை கண்காணிப்பதென்பது சிரமமமான காரியமாகும்” எனவும் அவர் தெரிவித்தார்.
 
மாணவர் மரணித்த சாய்ந்தமருது மதரஸா
 
இலங்கையில் பள்ளிவாசல்களின் விஷயங்களைக் கையாள்வதற்கு வக்பு சட்டம் உள்ளமை போன்று, மதரஸாக்களை கையாள்வதற்கான சட்டங்கள் எவையும் இல்லை என்றும் அதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் பணிப்பாளர் பைசல் வலியுறுத்தினார்.
 
ஆரம்பத்தில் கல்வியமைச்சகத்தின் கீழேயே மதரஸாக்கள் இருந்தாகவும் 1981-ம் ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் அப்போதிருந்த 81 மதரஸாக்களும் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
 
“கற்பிக்கும் கலை (Art of Teaching) என்பது வித்தியாசமான ஒரு துறை. அரச பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளைப் போன்று, அரபு மதரஸாக்களின் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கும் நடைமுறைகள் இல்லை. அதேவேளை, குறித்த சில பயிற்சிகளை நிறைவு செய்யாது விட்டால் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட மாட்டாது என்கிற நிபந்தனைகள் அரச பாடசாலைகளில் உள்ளன.
 
ஆனால், மதரஸாக்களில் உள்ள ஆசிரியர்களுக்கு சம்பளத்தை அரசு வழங்குவதில்லை. குறித்த மதரஸாக்களுக்கு கிடைக்கும் வருமானம் மற்றும் அன்பளிப்பு ஆகியவற்றிலிருந்தே அதன் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கப்படுகின்றன. அதுவும் மிகக் குறைந்த தொகையே அவர்களுக்கு சம்பளமாகக் கிடைக்கின்றது. எனவே, உயர்ந்த கல்வித் தகைமைகளையும் பயிற்சிகளையும் கொண்டவர்கள், மதரஸாகளில் வேலைக்குச் சேர்வதில்லை. அவர்களுக்கான அதிக சம்பளத்தை மதரஸாக்களால் கொடுக்க முடியாமையே அதற்கான காரணமாகும்” என்று, நிலைமையினை அவர் விளக்கினார்.
 
 
சாய்ந்தமருது மதரஸா மாணவரின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நிர்வாகி
 
இதேவேளை மாணவர் அப்பாஸை தாக்கிய ஆசிரியர் இபாம் என்பவரை, மாணவர் தாக்கப்பட்ட மறுநாளே (17-ம் தேதி) பணியிலிருந்து நிறுத்தி விட்டதாக பாரி அறபுக் மத்ரஸாவின் அதிபர் அப்துல் ரஹ்மான் பிபிசி தமிழிடம் கூறினார்.
 
பாரி மதரஸாவில் உள்ள ஆசிரியர்களில், மேற்படி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஆசிரியரே, தொடர்ச்சியாக அதிக காலம் (26 வருடங்கள்) அங்கு பணியாற்றி வருவதாகவும் அவருக்கு எதிராக இதற்கு முன்னர் இவ்வாறான குற்றச்சாட்டுகள் எவையும் பதிவாகவில்லை என்றும் அதிபர் தெரிவித்தார்.
 
பாதிக்கப்பட்ட மாணவரும் தாக்கிய ஆசிரியரும் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
ஆசிரியர் இபாம் என்பவர் ‘மௌலவி’ பட்டம் பெற்றவரல்ல என்பதும் அவர் ஒரு ‘ஹாபிஸ்’ (குர்ஆனை மனனம் செய்தவர்) என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 
”இது முதன்முறையல்ல”
மதரஸாக்களில் மாணவர்கள் இவ்வாறு ஆசிரியர்களால் மிக மோசமாகத் தாக்கப்படுகின்றமை தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகமாவே உள்ளன. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் இயங்கி வந்த மதரஸா ஒன்றில் தங்கியிருந்து படித்து வந்த மாணவர் ஒருவர், டிசம்பர் மாதம் 5-ம் தேதி இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
 
ஆனால், குறித்த மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்து, அந்த மதரஸாவின் நிர்வாகியாக செயற்பட்டவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதனையடுத்து, அந்த நிர்வாகி தற்போது வரை நீதிமன்ற உத்தரவின்படி காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
அந்த மாணவரின் மரணத்தையடுத்து, அவர் படித்துவந்த மதரஸா மூடப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட நிர்வாகி தொடர்பாக விசாரிக்கப்பட்ட போது, அவர் மௌலவி பட்டதாரி அல்ல என்றும், போலி சான்றிதழ் ஒன்றின் மூலமாக அவர் தன்னை ஒரு மௌலவி என அடையாளப்படுத்தி வந்தமையும் அம்பலமாகியுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும் குறித்த நிர்வாகியின் தகைமை மோசடியை உறுதிப்படுத்தியுள்ளார்.
 
 
இந்த விஷயங்களையெல்லாம் கவனத்தில் கொண்டு, மதரஸாக்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் (இவர்களில் அதிகமானோர் மௌலவிகள்) அங்குள்ள மாணவர்களை கடுமையாகத் தாக்குவதன் உளவியல் காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ளும் பொருட்டு, மனநல மருத்துவர் யூ.எல். சரப்டீனிடம் பிபிசி தமிழ் பேசியது.
 
ஆசிரியர் ஒருவரின் நடத்தையில் அவரின் ஆளுமைப் பண்புக் காரணிகளான குணாதிசயங்கள், மனோபாங்கு மற்றும் உளக் காரணிகள் போன்றவை தாக்கம் செலுத்துவதாக, மருத்துவர் சரப்டீன் கூறுகின்றார்.
 
ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான இடைவினை ஆக்கமும் (interpersonal relationships) கற்றல் - கற்பித்தலில் தாக்கம் செலுத்துவாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
 
அந்த வகையில் ஆளுமைப் பண்பில் குறைபாடு கொண்ட ஆசிரியர்கள், எடுத்துக்காட்டாக கோபத்தை அடக்க முடியாத, மாணவர்களைப் புரிந்து கொள்ள முடியாத ஆசிரியர்கள், மாறுபட்ட பண்புகளை வெளிப்படுத்துவார்கள் என அவர் தெரிவிக்கின்றார்.
 
“இவ்வாறானவர்கள் மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாகவும், ஒத்துணவர்வு (Empathy) மற்றும் அனுதாபம் (Sympathy) போன்றவற்றை வெளிப்படுத்த முடியாதவர்களாகவும் இருப்பர். இவர்கள் வன்முறை மற்றும் விரக்தியை வெளிப்படுத்துவதோடு, எளிதாக பிரச்னைகளைத் தீர்க்க முடிாதவர்களாகவும் இருப்பர். இவ்வாறான ஆசிரியர்கள்தான் மாணவர்களை உடல் ரீதியாக தாக்குகின்றனர்” என, வைத்தியர் சரப்டீன் விளக்கினார்.
 
மாணவர்களுக்கு பாடமொன்று விளங்கவில்லை என்றால், ஏன் அவருக்கு அந்தப் பாடம் விளங்கவில்லை என்பதை, ஆசிரியர்கள் விஞ்ஞானப்பூர்வமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் வைத்தியர் சரப்டீன். பாடங்களை விளங்கிக் கொள்ளாமைக்காக மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது என அவர் வலியுறுத்துகின்றார்.
 
”மாணவர்களின் கல்வியில், அவர்களின் உள நலத் தன்மைகள், அவர்களின் சூழல் உள்ளிட்ட பல விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன. இவற்றினைப் புரிந்துகொள்ளாத ஆசிரியர்கள், தாம் எதிர்பார்க்கும் விஷயங்களை மாணவர்கள் செய்யாத போது விரக்தியடைகின்றார்கள். அந்த விரக்தி அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும், அந்தக் கோபம் வன்முறையாக மாறும். அப்போது அந்த ஆசிரியர்கள், உடல் ரீதியாக மாணவர்களைத் தண்டிப்பார்கள்” என அவர் விவரித்தார்.
 
மாணவர்களை உடல் ரீதியாக ஆசிரியர்கள் தண்டிக்கின்றமை, ஆசிரியர்களிடமுள்ள பிரச்னையாகும் என மருத்துவர் சரப்டீன் கூறுகிறார். மாணவர்களை உடல் ரீதியாகத் தண்டிக்கும் ஆசிரியர்கள், தமக்குள் ஏற்படும் விரக்தியை அல்லது தமக்குள் ஏற்படும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
 
மாணவர்கள் முரண்படும் போது, ஏன் அவர்கள் முரண்படுகிறார்கள் என்பதைச் சிந்திக்காமல், முரண்பாடுகளுக்கு எதிரான நடத்தையை வெளிப்படுத்தும் ஆசிரியர்கள்தான், உடல் ரீதியாக மாணவர்களை தண்டிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
 
“இதனால்தான் ‘கல்வி உளவியல்’ (Educational psychology) எனும் பாடம் ஆசிரியர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. ‘மாணவர்களுக்கு கல்வி ஊட்டுவதில் உளவியல் பங்குநிலையை எவ்வாறு பயன்படுத்துவது’ என்பதைத்தான் அந்தப் பாடத்தில் கற்றுக் கொடுக்கின்றனர்”.
 
”ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான தொடர்பில், மாணவர் மீது ஆசிரியருக்கு ஓர் ஒத்துணர்வு (Empathy) இருக்க வேண்டும். மாணவர்களின் நிலைமையை ஆசிரியர்கள் சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும்”.
 
”இவ்வாறான புரிதல்கள் கல்வி நிறுவனங்களிலுள்ள ஆசிரியர்களிடத்தில் சரியான முறையில் இல்லாமல் போகும் போதுதான், அங்குள்ள மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படுகின்றன” என மருத்துவர் சரப்டீன் விளக்கமளித்தார்.
 
”மாணவர்களை உடல் ரீதியாக ஆசிரியர்கள் தண்டித்தமையை, சமூகம் அங்கீகரித்த ஒரு காலம் இருந்ததது. ஆனால், நாம் விரும்பிய விளைவை, உடல் ரீதியான தண்டனைகள் ஏற்படுத்தவில்லை என்பதைப் புரிந்துகொண்ட போதுதான், அந்தத் தண்டனை முறை பிழை என்கிற முடிவு எட்டப்பட்டுள்ளது” எனவும் அவர் கூறினார்.
 
எனவே, மதரஸாக்களிலுள்ள ஆசிரியர்களுக்கு உடல் ரீதியான தண்டனை மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களுக்கு கல்வி உளவியலைக் கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் மருத்துவர் சரப்டீன் சிபாரிசு செய்கின்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் நடத்துவதா? சு வெங்கடேசன் எம்பி ஆவேசம்..!

பொங்கல் தினத்தில் சென்னை கிண்டியில் குதிரைப் பந்தயம்.. லட்சக்கணக்கில் பரிசுகள்..!

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்..!

80 மாணவிகளின் சட்டையை அவிழ்த்த தலைமை ஆசிரியர்.. ஆத்திரத்தில் பொங்கிய பெற்றோர்..!

சென்னை புத்தகக் காட்சி இன்று கடைசி.. மக்கள் குவிவார்கள் என எதிர்பார்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments