Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நெருக்கடி: கோட்டாபய சிங்கப்பூருக்கு சென்றது ஏன்? அவரை நீக்க சபாநாயகரால் முடியுமா?

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (22:22 IST)
கோட்டாபய ராஜபக்ஷ,அவரது மனைவி, இரண்டு பாதுகாவலர்களுடன் மாலே சர்வதேச விமான நிலையத்தில இருந்து சிங்கப்பூர் நோக்கிச் செல்லும் விமானம்
 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை விட்டு மாலத்தீவுக்கும் பிறகு சிங்கப்பூருக்கும் சென்றுள்ள நிலையில், இதுவரை அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பவில்லை. முன்னதாக, இந்த மாதம் 13ஆம் தேதி பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ஜூலை 9ஆம் தேதி தனக்கு அறிவித்திருந்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில், நேற்று நள்ளிரவுக்கு முன்பதாக ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் தனக்கு கிடைக்கும் என்றும் சபாநாயகர் நம்பிக்கை வெளியிட்டார்.
 
ஆனால், எதிர்பார்த்தபடி ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
 
தான் இந்த சந்தர்ப்பத்தில் கடும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும், விரைவில் பதவி விலகல் கடிதத்தை கையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்துள்ளதாக மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
 
இதற்கிடையே, தற்போது பொறுப்பு ஜனாதிபதி ஆக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகல் கடிதத்தை அளிக்காத பட்சத்தில், அவர் பதவி விலகியதாகக் கருதி, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சட்ட ஷரத்துக்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
 
இத்தகைய சூழலில், ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகியதாகக் கருதி, அவரை பதவி விலக்கு செய்ய அரசியலமைப்பில் இடமில்லை என்று அரசியலமைப்பு தொடர்பான வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஜனாதிபதி பதவியில் இருப்பவரை பதவி விலக்க வேண்டுமென்றால், அவருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்டு, அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கினரின் பெரும்பான்மை பலத்தைப் பெறுவது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
கோட்டாபய பயன்படுத்திய அரசியலமைப்பு பிரிவு 37 (1)
 
கோப்புப்படம்
 
இலங்கையிலிருந்து மாலத்தீவுக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் வெளிநாடு சென்றுள்ளதாக சபாநாயகரிடம் கூறியிருக்கிறார்.
 
இது குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஊடகங்களிடம் பேசியபோது, ''அரசியலமைப்பு 37வது ஷரத்தின் முதலாவது பிரிவின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால், அந்த பதவியின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பொறுப்பு ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக என்னிடம் கூறினார்" என்று தெரிவித்தார்.
 
அரசியலமைப்பின் 37 (1) பிரிவு - ஜனாதிபதி, சுகவீனம் காரணமாக, இலங்கையில் இல்லாத நிலை அல்லது வேறெதேனும் காரணமாக தமது பதவிக்குரிய தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும் புரிவதற்கும் நிறைவேற்றுவதற்கும் இயலாதிருப்பதாகக் கருதுவாரெனில், அத்தகைய காலத்தின்போது ஜனாதிபதி பதவியில், அவருக்குரிய பதவிக்குரிய தத்துவங்களையும், கடமைகளையும் பணிகளையும் பிரயோகிப்பதற்கும் புரிவதற்கும் நிறைவேற்றுவதற்கும் பிரதமரை அவர் நியமிக்கலாம். அத்தகைய காலத்தின் போது பிரதமர் பதவியில் பதில் கடமை ஆற்றுவதற்கென ஏனைய அமைச்சர்களில் ஒருவரையும் நியமிக்கலாம்" என அரசியலமைப்பின் 37 (1) பிரிவில் கூறப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், ஜனாதிபதி 'சுகவீனம்' என்ற அடிப்படையிலேயே, நாட்டை விட்டு அவர் சென்றுள்ளதாக தற்போதைய சூழ்நிலையில் கருத முடிகின்றது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
சிங்ப்பூருக்கு ஏன் செல்கிறார்?
 
 
மாலத்தீவு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்து சிங்கப்பூருக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக பிபிசி அறிந்துள்ளது. ஆனால், அவர் சிங்கப்பூரை தேர்வு செய்வதற்கான காரணம் என்ன?
 
கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி ஆக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி பதவியேற்றார்.
 
அவர் பதவியேற்ற நாள் முதல், நாட்டை விட்டு தற்போது சென்றுள்ள காலப் பகுதி வரை அவர் சிகிக்கைகளுக்காக சிங்கப்பூர் சென்று வந்ததை அவதானிக்க முடிந்தது.
 
இந்த நிலையில், அரசியலமைப்பின் 37(1) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சை என்ற அடிப்படையிலேயே சிங்கப்பூரை நோக்கி பயணம் செய்வதாகவும் அத்தைய மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை சிங்கப்பூர் ஏற்றுக் கொள்வதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சைகளை பெற்ற பிறகு, அதற்கான ஆவணங்களை சபாநாயகருக்கு அனுப்புவதன் ஊடாக அவர் மருத்துவ விடுமுறையை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மருத்துவ விடுமுறைக்கான கோரிக்கையை மூன்று மாத காலத்திற்குள் கையளிக்க வேண்டும் என்பதுடன், அதன் பின்னர் அந்த விடுமுறையை நீடித்துக்கொள்வதற்கான நடைமுறையும் உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இவ்வாறு மருத்துவ சிகிச்சைகளுக்காக செல்லும் போது, பொறுப்பு ஜனாதிபதி, நாட்டின் ஜனாதிபதியாக செயல்படுவார் என்பதே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஷரத்தாகும்.
 
ஜனாதிபதி பதவி விலகியதாக கருத முடியுமா?
 
 
கோப்புப்படம்
 
''ஜனாதிபதி பதவியை அவர் உதறி விட்டு நாட்டை விட்டுப் போனதாக இதுவரை கூறவில்லை. தான் நாட்டை விட்டுச் செல்வதாக சபாநாயகர் மற்றும் பிரதமரிடம் மட்டுமே கூறியுள்ளார். ஜனாதிபதி வெளியேறியுள்ளதால், பொறுப்பு ஜனாதிபதி பொறுப்பேற்கப்பட்டமை தொடர்பில் வர்த்தமானி ஒன்றும் வெளியாகியுள்ளது.
 
அப்படி என்றால், பதவியை விட்டு விலகி அவர் வெளிநாடு சென்றதாக கருத முடியாது. எனினும், ஜனாதிபதி பதவியை விட்டு, விட்டுச் சென்றதாக அரசியலமைப்பின் ஊடாக ஏற்றுக்கொள்ளகூடிய சில ஷரத்துக்கள் உள்ளன. ஆனால், அது ஜனாதிபதி எந்தவொரு விடயத்தையும் அறிவிக்காமல், காணாமல் போனதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது ஜனாதிபதி அரசியலமைப்புக்கு விதிகளுக்கு உட்பட்டு உரிய தரப்பிடம் தெரிவித்த பிறகே அவர் நாட்டை விட்டுச் சென்றுள்ளார்" என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய அரசியலமைப்பு நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான இளையதம்பி தம்பையா.
 
ஜனாதிபதி விலகினால், புதிய ஜனாதிபதி தெரிவு எப்படி நடக்கும்?
 
 
இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் தனது பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக பதவி விலகுவாராயின், எஞ்சியுள்ள அவரது பதவிக் காலத்திற்கு மற்றுமொரு ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பிலான ஷரத்து, அரசியலமைப்பின் 40 (1) (அ)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
''ஜனாதிபதியின் பதவி அவரது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக வருவதாக இருந்தால் நாடாளுமன்றம், ஜனாதிபதி என்ற பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகைமையுடையவராயுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஜனாதிபதி பதவிக்கு அங்ஙனம் வருகின்ற ஆள் எவரும், பதவியை வறிதாக்கிச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் முடிவுறாதெஞ்சியுள்ள காலத்துக்கு மட்டுமே பதவி வகித்தல் வேண்டும்" என அரசியலமைப்பின் 40 (1(அ)இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13ஆம் தேதி அதிகாலையில் மாலத்தீவு செல்வதை, தமக்கு அறிவித்ததாக பிரதமர் தனது விசேட உரையில் உறுதிப்படுத்தியதுடன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் ஊடக சந்திப்பொன்றை நடத்தி அதே தகவலை வெளியிட்டுள்ளார்.
 
இந்த நிலையில், சபாநாயகர் மற்றும் பிரதமர் ஆகியோரிடம் அறிவித்த பிறகே அவர் பதவி விலகியதாகக் கருத முடியாது என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில், யுத்த குற்றச்சாட்டுக்கள் கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ளமையினால், ஜனாதிபதி பதவியை இந்த சந்தர்ப்பத்தில் தக்க வைத்துக் கொள்வது முக்கியமானது எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோல்வியுற்ற ஜனாதிபதியாக பதவி விலக போவதில்லை என கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்த நிலையிலேயே, தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
 
இந்த நிலையில், இன்று அல்லது நாளை ரணில் ஜனாதிபதியாக பதவியேற்கும் சாத்தியம் உள்ளதாக அலுவல்பூர்வமற்ற தகவல்கள் வெளிவருகின்றன.
 
ஆய்வுப்பார்வை: கோட்டாபயவுக்கு அடைக்கலம் தருவது யார்? - டெஸ்ஸா வோங், பிபிசி
 
 
 
கோட்டாபய ராஜபக்ஷ அடுத்து எங்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளார் என்று பலரும் கேட்கின்றனர். ஆனால் மிக முக்கியமான கேள்வி: அவரை யார் தங்க அனுமதிப்பார்கள்?
 
மத்திய கிழக்குக்கு செல்லும் வழியில் சிங்கப்பூரை ஒரு இடைநிறுத்த நாடாகவோ தென்கிழக்கு ஆசியாவில் எங்காவது ஒரு தீவில் அவர் தங்கியிருக்க விரும்புகிறாரா என்பதும் அவர் எவ்வளவு காலம் போகும் இடத்தில் தங்கியிருப்பார் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், சிங்கப்பூர் அரசு அவரை நீண்ட காலம் தங்க அனுமதிப்பது சந்தேகமே என்று வட்டாரங்கள் கூறுகின்றன.பணக்கார நாடான சிங்கப்பூர், கடந்த காலத்தில் தெய்ன் செயின், ராபர்ட் முகாபே மற்றும் கிம் ஜாங்-உன் போன்ற தலைவர்களுக்கு அடைக்கலம் தந்து உபசரித்துள்ளது.
 
ஆனால், கோட்டாபயவுக்கு அந்த நாட்டு அரசு நீண்ட காலத்திற்கு அடைக்கலம் கொடுக்கும் அளவுக்கு அந்த நாடு எல்லை மீறாது என்றே தோன்றுகிறது.
 
கோட்டாபய இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்களில் குற்றம்சாட்டப்பட்டவர். சர்வதேச அளவில் அவரது செயல்பாடுகள் தீவிர ஆய்வுக்கு உட்பட்டுள்ளன. தமது நாடு பொருளாதார சரிவை நோக்கிச் செல்லும்போது அவர் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். அதனால் சர்வதேச விமர்சனத்துக்கு உள்ளாவது சிங்கப்பூருக்கு உரிய மதிப்பைத் தராது. சிங்கப்பூர் பொதுமக்களின் எதிர்வினையை அதிகாரிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுபோன்ற விவகாரங்களில் சிங்கப்பூர் மக்களும் கடுமையாகவே குரல் கொடுத்து வருகிறார்கள். இதே சிங்கப்பூரில் கணிசமான தமிழ் மக்கள்தொகையும் உள்ளது, அவர்களில் பலர் இலங்கை தமிழ் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இலங்கை உள்நாட்டுப் போரின்போது பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது அதனுடன் தொடர்புடையவராக கோட்டாபய மீது குற்றம்சாட்டப்பட்டது. அந்த காலகட்டத்தில் கோட்டாபய நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தார். எனவே சிங்கப்பூரிலேயே கோட்டாபய தொடர்ந்து இருப்பாரேயானால், அது அங்குள்ள மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்துவதுடன் இதுநாள்வரை அரும்பாடுபட்டு இந்த நாட்டில் நிலைநாட்டு வரும் அமைதிக்கும் குந்தகம் ஆகலாம்.
 
சுருங்கச் சொன்னால், கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் எவ்வளவு காலம் தங்குகிறாரோ, அந்த நாட்கள் முழுவதும் சிங்கப்பூர் ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலி இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

அடுத்த கட்டுரையில்
Show comments