Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுறவு மூலமும் பரவும் குரங்கம்மை - அறிகுறிகள், பரவும் வழிகள் பற்றிய முழு விவரம்

Prasanth Karthick
சனி, 17 ஆகஸ்ட் 2024 (13:43 IST)

ஆப்பிரிக்க கண்டத்தில் பரவி வரும் குரங்கம்மையை (M-Pox) உலகளாவிய சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது உலக சுகாதார மையம்.

 

 

எம்-பாக்ஸ் அல்லது குரங்கம்மை என்று அழைக்கப்படும் இந்த நோய் காங்கோ ஜனநாயக குடியரசில் குறைந்தது 450 நபர்களின் இறப்புக்குக் காரணமாக அமைந்தது.

 

உலகளாவிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், குரங்கம்மை ஆப்பிரிக்க கண்டம் தாண்டியும் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தத் தொற்றுநோய் எப்படிப் பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

 

குரங்கம்மை(M-Pox) என்றால் என்ன?

 

சின்னம்மையை ஏற்படுத்தும் வைரஸின் குடும்பத்தில் உள்ள மற்றொரு வகை வைரஸே குரங்கம்மையைத் தோற்றுவிக்கிறது. ஆனால் அது அவ்வளவு ஆபத்தானது அல்ல.

 

ஆரம்பத்தில் விலங்குகளிடம் இருந்து இந்தத் தொற்று மனிதர்களிடம் பரவியது. தற்போது இது மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுகிறது.

 

எம்-பாக்ஸ் அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை ஆரம்பக்கால நோய் அறிகுறிகளாகும்.

 

காய்ச்சல் வந்தவுடன், தடிப்புகள் ஏற்படும். உடலின் மற்ற இடங்களில் பரவுவதற்கு முன்பு முகத்தில்தான் தடிப்புகள் ஏற்படும். உள்ளங்கை, கைகள் மற்றும் உள்ளங்கால்களிலும் இந்த அம்மை பரவும்.

 

இந்தத் தடிப்புகள் அரிப்பையும் வலியையும் ஏற்படுத்தும். பல்வேறு கட்டங்களைக் கடந்து இறுதியாக அம்மை கொப்புளங்களாக உருமாறும். இறுதியில் இது உதிர்ந்துவிடும். இவை வடுக்களாகப் பின்னால் மாறிவிடும்.

 

இந்தத் தொற்று 14 முதல் 21 நாட்கள் கழித்து அதுவாகவே சரியாகிவிடும்.

 

ஆனால் சில நேரங்களில் இவை உயிரைக் கொல்லும் தொற்றாகவும் மாறிவிடும். குறிப்பாக குழந்தைகள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு அதிக அச்சுறுத்தலை இந்த அம்மை நோய் ஏற்படுத்தும்.

 

அதிகம் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் எங்கும் புண்கள் ஏற்படும். வாய், கண்கள் மற்றும் பிறப்புகளிலும் இந்தப் புண்கள் ஏற்படும்.

 

எந்தெந்த நாடுகளில் எம்-பாக்எம்-பாக்ஸ் பரவுகிறது?

 

குரங்கம்மை(M-Pox) பொதுவாக மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் ஜனநாயக காங்கோ குடியரசு போன்ற நாடுகளில் உள்ள வெப்பமண்டல மழைக்காடுகளில் இருக்கும் கிராமங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் குரங்கம்மை தொற்று இருந்து வருகிறது.

 

ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான நபர்கள் குரங்கம்மையால் பாதிக்கப்படுகின்றனர். 15 வயதுக்குக் குறைவான, தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.

 

காங்கோ மற்றும் அதன் அண்டை நாடுகளில் பல்வேறு நோய்த் தொற்றுகள் தற்போது ஏற்பட்டு வருகிறது.

 

புருண்டி, ருவாண்டா, உகாண்டா, கென்யா போன்ற நாடுகளில் தற்போது குரங்கம்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த நாடுகளில் இந்த நோய்த் தொற்று அதிகம் ஏற்பட்டதில்லை.

 

குரங்கம்மையின் வகைகள்?

 

இரண்டு வகையான குரங்கம்மைகள் உள்ளன. க்ளாட் 1 என்பது மிகவும் தீவிரமான தொற்று. மற்றொரு வகை க்ளாட் 2 ஆகும்.

 

க்ளாட் 1 வகை வைரஸ், காங்கோவில் பல ஆண்டுக் காலமாக இந்தத் தொற்றை ஏற்படுத்தி வருகிறது. க்ளாட்-1 வைரஸின் சில வகைகள் இளைஞர்களைக் காட்டிலும் குழந்தைகளை அதிகமாகத் தாக்குகிறது.

 

கடந்த ஆண்டு பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கு க்ளாட் 1பி (Clade 1b) என்ற புதிய வகை வைரஸால் குரங்கம்மை(M-Pox) ஏற்பட்டுள்ளது. இது அதிக அளவில் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

 

இந்தப் புதிய வகை வைரஸ் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளதாகக் குறிப்பிடும் நிபுணர்கள், இது அதிகமாகப் பரவி தீவிரமான தொற்றை உருவாக்குவதாகக் கூறுகின்றனர்.

 

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் ஜூலை மாதம் வரை 14,000 பேருக்கு குரங்கம்மை நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அதில் 450 நபர்கள் இறந்துள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவிக்கிறது.

 

கடந்த 2023ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நோய்த் தொற்று 160% வரை அதிகரித்துள்ளது, இறப்பு விகிதமும் 19% வரை அதிகரித்துள்ளது.

 

இதற்கு முன்பு 2022ஆம் ஆண்டு க்ளாட்-2 வகையால் ஏற்பட்ட குரங்கம்மை(M-Pox) தொற்றைத் தொடர்ந்து, பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது.

 

இந்த வைரஸை காண முடியாத ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் உட்பட 100 நாடுகளுக்கு இந்தத் தொற்று பரவியது. தடுப்பூசிகள் மூலம் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

 

குரங்கம்மை எப்படி பரவுகிறது?

 

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களோடு உடலுறவு வைத்துக்கொள்வது, தொட்டுப் பேசுதல், அருகே அமர்ந்து பேசுதல் மற்றும் சுவாவசித்தலால் இந்தத் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது.

 

காயங்கள் வழியாகவும், மூச்சுக்குழல் வழியாகவும், கண்கள், மூக்கு அல்லது வாய் வழியாகவும் இந்த வைரஸ் ஒருவரின் உடலுக்குள் செல்கிறது.

 

இந்த வைரஸ் ஒட்டியிருக்கும் படுக்கைகள், ஆடைகள் மற்றும் துண்டுகள் போன்றவற்றைத் தொடுவதன் மூலமும் இந்தத் தொற்று ஏற்படுகிறது.

 

பாதிப்புக்கு ஆளான குரங்கு, எலி, அணில் போன்றவற்றைத் தொடுவதாலும் இந்தத் தொற்று பரவுகிறது. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட தொற்று பெரும்பாலும் உடலுறவால் ஏற்பட்டது.

 

தற்போது காங்கோவில் ஏற்பட்டிருக்கும் பெருந்தொற்றுப் பரவலுக்கும் பாலுறவு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உடனான நெருங்கிய தொடர்பு ஆகியவை காரணமாக இருக்கிறது.

 

யார் அதிக ஆபத்தில் உள்ளனர்?

குரங்கம்மை(M-Pox) நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எளிதில் இந்தத் தொற்று ஏற்படும்.

 

தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் பாலுறவு கொள்வது இளைஞர்கள் மத்தியில் இந்த நோய்த் தொற்று பரவுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

 

யாருக்கு அதிக ஆபத்து உள்ளது என்பதைத் தற்போதைய சூழலைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தி வருகின்ற பருவத்தில், குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படக் கூடிய நபர்களாக இருக்கின்றனர். இந்தப் பிராந்தியத்தில் பலரும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கொண்டிருப்பதால் நோயை எதிர்த்துப் போராடுவது கடினமாகிறது.

 

குழந்தைகள் விளையாடுவது மற்ற குழந்தைகளுடன் நெருக்கமாகப் பழகுவது போன்றவற்றால் அவர்களுக்கு எளிதில் தொற்று ஏற்படுவதாகச் சில நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட சின்னம்மை தடுப்பூசிகளையும் இவர்களால் பெற இயலாது. இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட பெரியவர்களுக்கு குரங்கம்மை தொற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கலாம்.

 

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கு இந்தத் தொற்று எளிதில் ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்களுக்கும் இதனால் ஆபத்து இருக்கலாம்.

 

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபர்களுடனான தொடர்பைத் தவிர்க்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் பகுதியில் நோய்த் தொற்று இருக்கும் பட்சத்தில் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.

 

உடலிலுள்ள புண்கள் ஆறும் வரை நோய்த் தொற்று உள்ளவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.

 

தொற்றில் இருந்து மீண்ட பிறகும் 12 வாரங்களுக்குப் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

 

குரங்கம்மைக்கு தடுப்பூசிகள் உள்ளனவா?

 

தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் தொற்று அபாயத்தில் உள்ளவர்கள் அல்லது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே இதைப் பெற இயலும். உண்மையான கவலை என்னவென்றால் தேவைப்படும் இடங்களுக்கு இந்தத் தடுப்பூசிகளை வழங்கப் போதுமான நிதி இல்லை.

 

உலக சுகாதார மையம், மருந்து உற்பத்தியாளர்களிடம் உள்ள தடுப்பு மருந்துகளை அவசரத் தேவைகளுக்காக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. முறையாக ஒப்புதல் இன்னும் வழங்கப்படாமல் இருந்தாலும், அதையும் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 

ஆப்பிரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், கண்டம் தழுவிய பொது சுகாதார அவசர நிலையாக இதை அறிவித்துள்ளது. அங்குள்ள நாடுகளின் அரசுகள் இது தொடர்பாக ஒருங்கிணைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மருந்துகளைத் தடையின்றி அனுப்பி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

உலக அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தத் தொற்று ஆப்பிரிக்க கண்டம் தாண்டியும் பரவும் ஆபத்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் தீபத்திருவிழா: 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

ஈவிஎம் மெஷின்களில் குளறுபடிகள்! மகாராஷ்டிரத்தில் மறு தேர்தல் வேண்டும்: சிவசேனா கோரிக்கை

இன்று காலை 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

இரவில் பெய்த திடீர் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகள் விடுமுறை?

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்