Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடி அரசாணை: ஆபாசத்தை தடுக்க நடவடிக்கையா? ஊடக சுதந்திரத்தில் தலையீடா?

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (14:35 IST)
இணையதளங்களில் பதிவேற்றப்படும் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் ஓடிடி திரைப்படங்கள் போன்றவற்றை இந்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பு வரம்புக்குள் கொண்டு வருவதற்கான அரசாணையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டிருக்கிறார்.

ஆனால், அரசின் இந்த நடவடிக்கை, சமூக ஊடகங்கள், இன்டர்நெட் உலகில் இதுவரை நிலவி வந்த கருத்து, பேச்சு சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பதாக மாறுகிறதா என்ற சர்ச்சையை இந்திய அரசின் நடவடிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில், இந்திய பத்திரிகை கவுன்சில் அச்சு ஊடகங்களை ஒழுங்குபடுத்துகிறது. செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் (ஐபிஏ) செய்தி சேனல்களை கவனிக்கிறது. விளம்பர தர நிர்ணய கவுன்சில் ஊடக விளம்பரங்களைக் கண்காணிக்கிறது.

இதேபோல, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சிபிஎப்சி) படங்களை மேற்பார்வையிட்டு சான்றிதழ் வழங்குகிறது.

ஆனால், இன்டர்நெட் உதவியுடன் வெளிவரும் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஆன்லைன் செய்தி இணையதளங்கள் போன்றவற்றில் இடம்பெறும் படங்கள், தொடர்கள், செய்திகள் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான எந்தவொரு சட்டமோ அல்லது ஒழுங்குமுறை அமைப்போ இந்தியாவில் இல்லை.

ஓ.டி.டி தளங்களில் சினிமா நிகழ்ச்சிகள், தொடர்கள் ஆகியவை வெளியிடப்பட்டு வந்த நிலையில், கொரோனா காலத்தில் அதிகளவு படங்களும் வெளிவந்தன. 

உச்ச நீதிமன்ற தலையீட்டுக்கு பிறகு நடவடிக்கை

திரையரங்கிற்கு செல்லும் முன்னர் படம் தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்படுகிற நிலையில்,ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்படும் படங்களுக்கு இத்தகைய ஒழுங்குமுறை கிடையாது.

இதனால் ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்படும் படங்களில் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று உச்ச நீதிமன்றமும் கேள்வி எழுப்பியிருந்தது.

ஏற்கனவே, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது குறித்து பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இணையதளங்களில் பதிவேற்றப்படும் சினிமா செய்திகள், நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் அனைத்தையும் இந்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஓ.டி.டி இணைய தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள், தொடர்கள், ஆணவப் படங்கள் ஆகியவற்றை வெளியிடும் முன்பாக உரிய அனுமதியைப் பெறுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை விரைவில் மத்திய அரசு வெளியிடவிருக்கிறது.

இந்த நிலையில், ஓ.டி.டி தளங்கள் வாயிலாக வெளியிடப்படும் புதிய படங்கள், வெப் சீரிஸ் எனப்படும் தொடர்கள் - புதிய கட்டுப்பாடுகளால் எத்தகைய பின்னடைவுகளை எதிர்கொள்ளும் என்பதை சமூக ஊடகவியலாளர் வெங்கடேஷ் விளக்குகிறார்.

"மத்திய அரசின் இந்த அணுகுமுறை என்பது ஒட்டுமொத்தமாக டிஜிட்டல் ஆன்லைன் மீடியாவை கொண்டது என்றாலும் ஓடிடி தளங்களே முதலாவதாக கவனத்தில் கொள்ளப்படுகிறது. ஓடிடி தளங்களில் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள், வெப் சீரிஸ் முதலானவை அடங்கும்.

இந்தியாவில் ஏற்கனவே வெளியான படங்களில் இந்த தளத்தில் ரிலீஸ் செய்யப்படும்போது, மத்திய அரசின் அனுமதிச் சான்றிதழ் பெற்றிருக்கும் என்பதால், அவற்றுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால், இனி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் அமேசான், ஹாட்ஸ்டார் போன்ற ஓ.டி.டி தளங்களில் நேரடியாகப் படங்களை ரிலீஸ் செய்யும்போது, இனி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் அமைப்பு மூலம் அனுமதி பெற கட்டாயம் ஏற்படலாம் என்பதே முக்கிய பின்னடைவாகக் கருதப்படுகிறது" என்று வெங்கடேஷ் கூறுகிறார்.

"இது, ஒரிஜினல் வெப் சீரிஸ், குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் டாக் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்.அச்சு, தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் ரேடியோ ஆகிய ஊடகங்களை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கண்காணித்துக் கட்டுப்படுத்தக் கூடிய அமைப்புகள் உள்ளன. ஆனால் இதுவரை இந்தியாவில் ஓ. டி. டி தளங்களுக்கென தனியாக அரசின் கீழ் இயங்கும் தன்னிச்சை அமைப்பு முறைப்படுத்துவது நடைமுறையில் இல்லை."

இதனால், ஓடிடி தளங்கள் சுதந்திரத்தோடு செயல்பட்டு வந்தன. அது இனி தடைபடும். இனி, தங்களுடைய படைப்புகளுக்கு முன் அனுமதியும் சான்றிதழும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கிழ் பெறவேண்டிய நிலை ஏற்படும். இந்த நடைமுறையே ஓ.டி.டி தளங்களுக்கு சிக்கலாக அமையும். அரசியல் சார்ந்த சர்ச்சைக்குரிய விஷயங்களைக் கொண்ட படைப்புகளைத் தயாரித்து வழங்குவதில் பிரச்சனைகள் ஏற்படலாம்." என்கிறார் வெங்கடேஷ்.

சைபர் க்ரைமில் பணியாற்றும் தினேஷிடம் இது குறித்து பிபிசி தமிழ் பேசியபோது, "ஓடிடி தளங்களில் சென்சார் இல்லாமல் வெளியிடப்படும் அடல்ட் கண்டென்ட்டுகளை பார்க்கும் சிறுவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு இருந்தது. தற்போது ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள கட்டுப்பாடு வரவேற்கத்தக்கது. இதனால் குற்றச் சம்பவங்கள் குறையும்" என்று தெரிவித்தார்.

இத்தகைய சூழலில்தான் ஓ.டி.டி தளங்களின் உள்ளடக்கம் தொடர்பான நெறிமுறைகளும் விதிமுறைகளையும் மத்திய அரசு விரைவாக வெளியிடும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்