Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2020: தொடங்குகிறது திருவிழா - முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (11:50 IST)
கொரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் நடக்கவேண்டிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர், தாமதங்கள் மற்றும் இடர்பாடுகளையும் தாண்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்பதாலும், கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் களமிறங்கும் முதல் தொடர் என்பதாலும், நடப்பு ஐபிஎல் தொடரின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

அதேவேளையில், இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களுக்கும், 2020 ஐபிஎல் தொடருக்கும் பல வித்தியாசங்கள் உண்டு.

ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடப்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் புதியது.

ஐபிஎல் என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது மைதானத்தில் ஒலிக்கும் ஆரவார கோஷங்களும், நடனங்களும் தான். ஆனால், கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளால், இந்த தொடரில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை. இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விளையாட்டு வீரர்களுக்கும் பாதிப்பை தரக்கூடும்.

இழப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்ல
தங்களின் பெளண்டரி, சிக்ஸர்களுக்கு ரசிகர்கள் எழுப்பும் கரகோஷமும், விக்கெட் வீழ்த்தும்போது மைதானத்தில் எழும் ஆரவாரமும் இம்முறை கிடைக்க போவதில்லை என்ற நிலையில் , புதிய சூழலுக்கு ஏற்ப விரைவாக தங்களை மாற்றிக் கொண்டு பங்களிப்பவர்களாலேயே இத்தொடரில் சாதிக்க முடியும்.

அதேபோல், தொலைக்காட்சியில் ஐபிஎல் போட்டியை காணும் ரசிகர்களுக்கும் ஆளில்லாத மைதானத்தில் விளையாடப்படும் போட்டி புதிய அனுபவத்தை தரக்கூடும்.

தொலைக்காட்சி வர்ணனையாளர்களின் பங்கு இந்த தொடரில் அதிக முக்கியத்துவம் பெறும். ரசிகர்கள் இல்லாத அரங்கத்தில் நடப்பதை சுவாரஸ்யமாக எடுத்துக்கூறி போட்டியின் பரபரப்பை அவர்களால் மட்டுமே ரசிகர்களிடம் எடுத்துச்செல்லமுடியும்.

ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் வழக்கமான சுவராஸ்யத்தை தருமா என சில ரசிகர்கள் சமூக ஊடகங்களில் விவாதித்து வந்தனர். ஆனால், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடக்கும் தொடர் என்பதே 2020 ஐபிஎல் போட்டி தொடருக்கு பலமாக அமையும் என்று ரசிகர்களில் ஒரு சாரார் கூறுகின்றனர்.

மீண்டும் நீயா- நானா போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ்


இந்நிலையில், ஐபிஎல் தொடர்களில் அதிக அளவு சாம்பியன்ஷிப் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் போட்டியில் (சனிக்கிழமை) சந்திக்கவுள்ளன.

கடந்த (2019) ஐபிஎல் தொடரின் இறுதியாட்டத்தில் இவ்விரு அணிகளே மோதின. மிகவும் பரபரப்பான அந்த போட்டியின் இறுதி பந்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா தனது அணிக்கு கோப்பையை உறுதி செய்தார்.

இதுவரை 4 முறை ஐபிஎல் இறுதி போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியுள்ள நிலையில், அதில் மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் அணியும், 1 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வென்றுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் வலுவான பேட்டிங் வரிசை கொண்டது. பொலார்ட், ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா ஆகியோரால் அதிரடியாக விளையாடி விரைவாக ரன்கள் குவிக்க முடியும். ஜஸ்ப்ரீத் பூம்ரா மற்றும் டிரண்ட் போல்ட் போன்ற உலகத்தரம் மிக்க வேகப்பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு அந்த அணிக்கு பெரிதும் உதவும்.

அதேவேளையில் மற்றொரு அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த தொடருக்காக தயாராகிக் கொண்டிருந்தபோது பல சர்ச்சைகள் மற்றும் விலகல்களால் நெருக்கடியை சந்தித்தது.

அந்த அணி மூன்று முறை கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த எம்.எஸ். தோனி கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில் எந்த அழுத்தமும் இல்லாமல் தற்போது விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில் சூழலை பயன்படுத்தும் வகையில் இம்ரான் தாஹீர் உள்ளிட்ட சிறந்த சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பது அணிக்கு சாதகமான அம்சம். மேலும் பிராவோ, வாட்சன் ஆகியோரின் அனுபவம் அணிக்கு மற்றொரு பலம்.

எதிர்பாராத திருப்பங்கள், இன்ப அதிர்ச்சிகள், கடும் அதிர்ச்சி தோல்விகள் என எல்லாம் கலந்த கலவையே விளையாட்டு. ஒரு சில வினாடிகளில் வெற்றியும், தோல்வியும் தீர்மானிக்கப்படும் விளையாட்டுதான் கிரிக்கெட். குறிப்பாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்.

ஏராளமான தடைகள், கட்டுப்பாடுகள் மற்றும் சர்ச்சைகளை தாண்டி இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரும் அந்த வரிசையில் இடம்பெறும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments