Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவில் நிலம் வாங்கி அங்கு பிக்னிக் செல்ல காத்திருக்கும் ஐதராபாத் தொழிலதிபர்

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (18:33 IST)
சந்திரயான்-2 பயணத்தைத் தொடங்கியதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய நிலைக்கு இந்தியா சென்றுவிட்ட நிலையில், நிலவில் தனக்கு சிறிது நிலம் சொந்தமாக இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் ஐதராபாத் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் பாக்டி.


 
நிலவில் தன்னுடைய நிலத்துக்கு 2003 ஆம் ஆண்டில் ராஜீவ் பதிவு செய்துள்ளார். 140 அமெரிக்க டாலர்களுக்கு அதை அவர் வாங்கியுள்ளார். நிலவில் ’மரே இம்பிரியம்’ என்ற இடத்தில் தாம் வாங்கியிருக்கும் நிலத்துக்கு உண்மையான மற்றும் சட்டபூர்வ உரிமையாளர் என்று பதிவு செய்திருக்கிறார். நியூயார்க் சிட்டியில் உள்ள நிலவு பதிவு அலுவலகத்தில் இந்தச் சொத்தை அவர் பதிவு செய்து, ஆவணப்படுத்தியிருக்கிறார்.
 
தன்னிடம் உள்ள ஆவணத்தின் சட்டபூர்வ அந்தஸ்து பற்றி தமக்கு எந்தக் கவலையும் இல்லை என்று ராஜீவ் கூறுகிறார்
ராஜீவ் மட்டுமல்ல. ஷாரூக் கான், சுஷந்த் சிங் ராஜ்புத் போன்ற பாலிவுட் நடிகர்களும் நிலவில் நிலம் வாங்கியிருக்கின்றனர். சுஷந்த் நேரடியாக தாமே நிலம் வாங்கியிருக்கிறார். ஷாருக் கானுக்கு வேறொருவர் இந்த நிலத்தைப் பரிசாக வழங்கியிருக்கிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் (2018) மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் (2009) பத்திரிகைகளில் இதுகுறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.


 
நிலவுக்கு விண்கலம் அனுப்பியிருப்பதன் மூலம், தன்னுடைய குடும்பத்துடன் தானும் ஒரு நாள் நிலவுக்கு பிக்னிக் செல்ல முடியும் என்று நம்பிக்கை வந்திருப்பதாக ராஜீவ் கூறுகிறார். வாய்ப்பிருந்தால் நிலவில் குறிப்பிடும்படியான ஏதாவது ஒரு கட்டமைப்பை உருவாக்க முடியும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நிலவுக்குச் சொந்தக்காரர் யார்?
 
நிலவில் நிலம் விற்பதாக நிறைய இணையதளங்கள் கூறுகின்றன. ஆனால், உண்மையில் நிலவின் உரிமையாளர் யார்? ஒரு சொத்தை விற்பதாகவோ அல்லது வாங்குவதாகவோ இருந்தால், முதலில் அது யாருக்காவது சொந்தமானதாக இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. எனவே, நிலவின் உரிமையாளர் யார்?


 
1967ல் உருவாக்கப்பட்ட வெளிப்புற விண்வெளி ஒப்பந்தம் என்பது தான் அனைத்து ஒப்பந்தங்களிலும் முக்கியமான ஒப்பந்தமாக உள்ளது. இந்தியா உள்பட 100 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. நிலவு மற்றும் பிற விண்வெளி அங்கங்கள் உள்பட வெளிப்புற விண்வெளியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக அரசுகளின் செயல்பாடுகளை வரையறை செய்யும் கோட்பாடுகள் இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 
இந்த ஒப்பந்தத்தின் பிரிவு 1 பின்வருமாறு கூறுகிறது: ``நிலவு மற்றும் பிற விண்வெளி அங்கங்கள் உள்பட வெளிப்புற விண்வெளியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது மற்றும் பயன்படுத்துவது என்பவை அனைத்து நாடுகளின் நன்மை கருதியதாக இருக்க வேண்டும். அந்த நாடுகளின் பொருளாதார அல்லது அறிவியல் வளர்ச்சியில் நிலவும் அந்தஸ்தில் பாரபட்சம் இல்லாமல், மனிதகுலத்தின் நன்மைக்கான செயல்பாடுகளாக இருக்க வேண்டும்.''


 
சந்திரயான்-2 நிலவில் செலவிடப் போவது எத்தனை நாள் தெரியுமா?
 
சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
``நிலவு மற்றும் இதர விண்வெளி அங்கங்கள் உள்ளிட்ட, வெளிப்புற விண்வெளியானது சமத்துவம் என்ற அடிப்படையில் எந்த வகையிலான பாரபட்சமும் இன்றி அனைத்து நாடுகளும் சர்வதேச சட்டத்திற்கு உள்பட்டு ஆய்வு நடத்தும் சுதந்திரம் உண்டு. விண்வெளியில் அங்கமாக உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைத்திலும் ஆய்வு நடத்த சுதந்திரம் உண்டு. நிலவு மற்றும் இதர விண்வெளிப் பகுதிகள் உள்ளிட்ட வெளிப்புற விண்வெளியில் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு சுதந்திரம் உண்டு. இதுபோன்ற ஆராய்ச்சிகளில் அரசுகள் ஒத்துழைப்பு அளித்து சர்வதேச அளவில் ஊக்கம் அளிக்க வேண்டும்.''
 
ஒப்பந்தத்தின் 2வது பிரிவு பின்வருமாறு கூறுகிறது: ``நிலவு மற்றும் இதர விண்வெளி அங்கத்தினர் உள்ளிட்ட வெளிப்புற விண்வெளி, இறையாண்மை கேட்புரிமை அடிப்படையில் தேசம் சார்ந்ததாக இருக்காது. கையகப்படுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் இது அமையாது.''
 
கடல்கள் யாருக்கும் சொந்தமில்லை என்பதைப் போல, நிலவும் யாருக்கும் சொந்தமானதல்ல என்று விண்வெளிச் சட்டத்துக்கான சர்வதேச இன்ஸ்டிடியூட்டின் கவுரவ இயக்குநர் ஸ்டீபன் இ. டாயல் விளக்கியுள்ளார்.


 
பிபிசி தெலுங்கு செய்திப் பிரிவுக்குப் பேட்டியளித்த அவர், ``தேசத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படுதல் அல்லது தனியார் ரியல் எஸ்டேட் சொத்து வைப்பதை அனுமதிக்கும் சட்டப் பிரிவுகள் எதுவும் அதில் கிடையாது. நிலவின் மேற்பரப்பில் உள்ள பொருள்களை சேகரித்து பயன்படுத்தலாம். கடலில் இருந்து மீன்களைப் பிடிப்பதைப் போல, இதையும் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். பொருள்களை எடுத்து பயன்படுத்துவது, அதன் மீதான உரிமையை நிலைநாட்டுகிறது. ஆனால் அங்கே மீதமிருக்கும் பொருள்களுக்கு சொந்தம் எதுவும் கொண்டாட முடியாது'' என்று கூறினார்.
 
ராஜீவ் பாக்டி போன்றவர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள சொத்து ஆவணங்களுக்கு சட்டபூர்வ மதிப்பு ஏதும் உண்டா என்று கேட்டதற்கு, ஒப்பந்தத்தின் 2வது பிரிவின்படி, ``நிலவில் எந்த ஒரு எல்லைக்கும் சொந்தம் கொண்டாடுவது என்பது போலியானது மற்றும் ஏற்கத்தக்கதல்ல. அதற்கு எந்த அர்த்தமும் கிடையாது. நிலவில் நிலம் விற்பதாகச் சொல்பவர்கள் மோசடியாளர்கள். அவர்களிடம் அந்தச் சொத்து கிடையாது. இது சரி என்று இருந்தால் கடலின் சில பகுதிகளையும் அவர்கள் விற்கலாம்'' என்று அவர் பதில் அளித்தார்.
 
சந்திரயான்-2: தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய தகவல்கள்
நிலவில் தாவரம் முளைத்தது - வரலாற்றில் முதல் முறை
இதுபோன்ற நிறுவனங்கள் மீது ஏதும் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளனவா அல்லது அவை விசாரணையில் உள்ளனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நிலவு ரெஜிஸ்ட்ரி, நிலவு நிலம் போன்ற நிறுவனங்களை அணுகி ஆவணங்கள் சட்டபூர்வமாக செல்லத்தக்கவையா என நாம் விசாரித்தபோது, இந்தக் கட்டுரை எழுதப்படும் வரையில் அந்த நிறுவனங்கள் பதில் அளிக்கவில்லை.


 
இருந்தபோதிலும், தாங்கள் சட்டபூர்வமாக செயல்படுவதாக அவர்களுடைய இணையதளங்கள் தெரிவிக்கின்றன. ``நமது சூரிய குடும்பத்துக்கு உள்பட்ட வான்வெளி சொத்துகளுக்கு தங்களுக்கு பல பத்தாண்டுகளுக்கு சட்டபூர்வ டிரேட்மார்க் மற்றும் காப்பிரைட் இருப்பதாக'' நிலவு நிலம் (Lunar Land) இணையதளம் தெரிவிக்கிறது.
 
நிலவு பதிவு அலுவலக தளம் (Lunar Registry) அடிக்கடி எழும் கேள்விகளுக்கான பதில்கள் பகுதியில், ``நிலவின் சொந்தக்காரராக தாங்கள் இல்லை என்றாலும், நிலவில் முதன்மையான சில அமைவிடங்களில் சொத்துரிமைக்குப் பதிவு செய்வதற்கான தரமான நடைமுறைகளை செய்து கொடுப்பதாக'' தெரிவித்துள்ளது.
 
 
இருந்தபோதிலும் விண்வெளி குடியேற்றத்தில் தனியார் சொத்து உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும், விண்வெளி குடியேற்ற முன்முயற்சி போன்ற முயற்சியாளர்கள், ``விண்வெளி குடியேற்றம் என்ற தொழில்முனைவு வாய்ப்பை உருவாக்க, பெரிய முதலீடுகள் செய்ய வேண்டியதை நியாயப்படுத்துவதற்கு, லாபம் ஈட்டும் வாய்ப்பை உருவாக்குவதற்காக சொத்துரிமை என்ற விஷயம் முன்வைக்கப்படுகிறது'' என்று கூறுகின்றனர்.
 
பிபிசி தெலுங்கு செய்திப் பிரிவுக்குப் பேட்டியளித்த வின்வெளி குடியேற்ற இன்ஸ்டிடியூட் நிறுவனத்தைச் சேர்ந்த ஆலன் வாஸ்ஸர், ``நிலவில் வாழும் மக்களால் மட்டுமே, உண்மையான நிரந்தரக் குடியேற்றத்துக்கு நிலவின் நிலத்துக்குச் சொந்தம் கொண்டாட முடியும் என்று இந்த நிறுவனம் நம்புகிறது'' என்று கூறினார். இருந்தபோதிலும் தற்போது விற்கப்பட்டுள்ள சொத்து ஒப்பந்தங்கள் எதற்கும் சட்டபூர்வ அந்தஸ்து கிடையாது.


 
ராஜீவ் போன்றவர்கள் இப்போதோ அல்லது வேறு எப்போதுமோ நிலவில் நிலத்துக்கு உரிமை கொண்டாட முடியாது. ``நிலவு யாருக்கும் சொந்தமானதல்ல. சர்வதேச ஒப்பந்தத்தின்படி, எந்த நாடும், எந்தக் காலத்திலும் நிலவை உரிமையாக்கிக் கொள்ள முடியாது. ``நிலவு நில விற்பனை ஒப்பந்தங்களை'' விற்கும் நிறுவனங்கள், புதுமையான விற்பனைப் பொருளாக விற்கிறார்கள். அவர்களுக்கு அது சொந்தம் இல்லை என்பதால் அதற்கு சட்டபூர்வ அந்தஸ்து கிடையாது. எனவே அந்த விற்பனை ஒப்பந்தங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் எதுவும் இல்லை'' என்று கூறினார்.
 
தூக்கியெறியும் சிகரெட் துண்டுகள் தாவரத்தின் வளர்ச்சியை தடுக்கும்
பக்ஷிராஜனாக மாறி திரும்பி தாக்கும் பறவைகள் - நிஜ சம்பவம்
எனவே, நிலவில் சொத்து வாங்குவதற்காக செலுத்திய பணம் எங்கே போனது? பண மோசடி செய்பவரிடம் தரப்பட்ட பணத்தைப் போன்றது தான் அது என்று ஸ்டீபன் டாயல் கூறுகிறார்.
 
இதற்கிடையில், தன்னிடம் உள்ள ஆவணத்தின் சட்டபூர்வ அந்தஸ்து பற்றி தமக்கு எந்தக் கவலையும் இல்லை என்று ராஜீவ் கூறியுள்ளார். நிலவில் மனிதர்களை குடியேறச் செய்யும், மனிதகுலத்துக்கு நன்மை தரக் கூடிய ஒரு திட்டத்தில் தாம் முதலீடு செய்திருப்பதாக அவர் நம்புகிறார். ``மக்கள் என்னை முட்டாள் என்று கூறினார்கள். அதுபற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. மனிதகுல முன்னேற்றத்திற்கு நிலவு உதவும் என்ற தொலைநோக்கு பார்வையும் நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. அதை நனவாக்குவதற்காக நான் முதலீடு செய்திருக்கிறேன். அந்த ஆவணம் மதிக்கப்படாமல் போய், நான் நிலத்துக்கு உரிமையாளராக முடியாமல் போனால் அதுபற்றி எனக்குக் கவலை கிடையாது. ஆனால் ஒரு நாள் நிலவுக்கு மனிதன் செல்ல முடியும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைவேன்'' என்கிறார் ராஜீவ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பாஜக கூட்டணியும் புறக்கணிப்பு..!

சிந்து நதியில் தங்கம் புதைந்து கிடக்கின்றதா? தோண்டி எடுக்க குவியும் மக்களால் பரபரப்பு..!

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்கள்: சீமான்

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் கைது: போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

கனடா பிரதமர் பதவி.. பின்வாங்கினார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா இந்திரா!

அடுத்த கட்டுரையில்
Show comments