Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தஞ்சாவூர் முதல் தான்சானியா வரை: தனி ஆளாக உலகம் சுற்றும் தமிழ் டிரெக்கர் யூடியூபர்!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (10:17 IST)
தஞ்சாவூர் முதல் தான்சானியா வரை: தனி ஆளாக உலகம் சுற்றும் தமிழ் டிரெக்கர் யூடியூபர்!
 
இலங்கையில் கடுசா கொண்டா (Katusa Konda- ஓனான் முதுகு )என்ற மலைப்பகுதியில் மலையேற்றம் செல்வதற்காகத் தயாராகிக் கொண்டே நம்மிடம் அவர் கடந்து வந்த பாதையை பகிர்ந்துகொண்டார், புவனி தரன்.
 
இன்று தன்னுடைய பயணங்களைக் காணொளியாக தமிழ் டிரெக்கர் யூடியூப் சேனலில் வெளியிட்டு கலக்கி வரும், தஞ்சாவூரைச் சேர்ந்த புவனி தரன் படித்தது ஒன்பதாம் வகுப்பு வரை தான். ஆனால், இன்று ஆப்பிரிக்கா, வளைகுடா நாடுகள், என்று பல உலக நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார். உலக மக்களோடு உறவாட மொழி ஒரு தடையே இல்லை என்பதற்கான சான்றாக அவர் திகழ்ந்து வருகிறார்.
"நான் முதன்முதலில் வாங்கிய ராயல் என்ஃபீல்ட் புல்லட்டில், அவ்வப்போது கல்லணை, ஊட்டி என்று சிறு சிறு பயணங்கள் சென்றுகொண்டிருந்தேன். அது தான் என் ஊரை விட்டு நான் வெளியே கிளம்பிய முதல் பயணம்.
 
ஆனால், வாங்கிய ஒன்றரை ஆண்டில் அது திருட்டுப்போகவே, அடுத்த ஓராண்டுக்காலம் வேறு எங்குமே பயணிக்கவில்லை. மனதுக்குள் பயணம் தந்த குதூகலிப்பு துடித்துக் கொண்டேயிருந்தது.
 
கவுச் சர்ஃபிங் (Couch Surfing) என்றோர் இணையதளம் உண்டு. அதில், உலகம் முழுக்க பயணிப்பவர்கள், அவர்கள் செல்லும் இடத்தில் தங்குவதற்கு யார் வேண்டுமானாலும் இடம் கொடுக்கலாம். அந்த இணையதளத்தின் மூலம் எங்கள் ஊருக்கு வரும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த, நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நான் தங்க இடம் கொடுத்துக் கொண்டிருந்தேன்" என்று கூறும் அவருக்கு ஒருநாள் தானும் இதுபோன்ற பயணங்களில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. கூடவே அந்தப் பயணங்களை காணொளிகளாகப் பதிவு செய்து யூடியூபில் ஒரு சேனல் தொடங்கி அதில் வெளியிடவும் முடிவு செய்தார்.
இணைய உதவியோடு பட்ஜெட் பயணங்களைப் பற்றித் தெரிந்துகொண்டவர், முழுநேரப் பயணியாக மாறுவதற்கும் அதையே தன்னுடைய வேலையாக மாற்றிக்கொண்டு வருமானம் ஈட்டவும் தயாராகிக் கொண்டிருந்தார்.
 
"ஷூ கூட போடாமல் மணாலிக்கு சென்றேன்"
அவருடைய முதல் பயணம் தஞ்சாவூரிலிருந்து மணாலிக்கு ஏழு நாட்கள் திட்டமிட்டுக் கிளம்பினார். "மொழி தெரியாது, தமிழ்நாட்டைத் தாண்டி தனியாக இதுவரை சென்றதே இல்லை. இருந்தும், எந்த தைரியத்தில் அப்போது கிளம்பினேன் என்று இப்போதும் தெரியவில்லை.
 
முதல்முறை மணாலிக்குச் செல்லும்போது, அங்கிருக்கும் குளிரில் செருப்பு மட்டுமே போதாது என்பது எனக்குத் தெரியவில்லை. நம் ஊரில் போடுவது போன்ற சாதாரண காலணியோடு தான் முதலில் அங்கு இறங்கினேன். இறக்கிவிட்ட டிரைவர் சொல்லித்தான் அங்கு ஒரு ஷூ வாங்கி மாட்டிக்கொண்டேன்.
 
அங்கு பட்ஜெட் பயணிகளுக்கு என்றே இருக்கும் தங்கும் விடுதியில் தங்கினேன். ஒரு நாளைக்கு 230 ரூபாய் தான் செலவானது. அங்குதான் பட்ஜெட் பயணம் குறித்து யூடியூபிற்காக முதல் காணொளியை எடுக்கத் தொடங்கினேன்."
 
இப்படியாகத் தொடங்கிய அவருடைய திட்டத்தில் ஒரு மாற்றம் நடந்தது. ஏழு நாட்கள் பயணமாகத் திட்டமிட்டுச் சென்றவருடைய பயணக் காலம் 60 நாட்களாக மாறியது. மணாலியோடு நிற்காமல், டெல்லி, ஜெய்பூர் என்று பயணித்தார். அங்கிருந்து வழியில் வரும் வாகனங்களில் லிஃப்ட் கேட்டே சென்னை வரை வந்து சேர்ந்தார்.
 
"ஜெய்பூரிலிருந்து சென்னைக்கு வரலாம் என்று முடிவெடுத்த நேரத்தில் என் கையில் 500 ரூபாய்க்கும் குறைவாகவே இருந்தது. அதனால் தான் பட்ஜெட் பயண வழிகாட்டுதல்களில் சொல்லப்பட்டிருந்த லிஃப்ட் கேட்டு பயணிக்கும் வழியை முயன்று பார்த்தேன். அப்படிச் செய்தபோது அதையே காணொளியாகவும் பதிவு செய்து வெளியிட்டேன்.
 
லிஃப்ட் கொடுத்தவர்களிலேயே யாரேனும் சாப்பிடுவதற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள். டென்ட் அமைத்து உறங்கிக்கொள்ள இடம் கொடுப்பார்கள். சில நாட்களில் பெட்ரோல் பங்குகளில் தங்கினேன். அப்போது அங்குப் பணியாற்றுவோரே உணவு கொடுப்பார்கள். இப்படியாக 12 நாட்கள் பயணித்து, சென்னையை வந்தடைந்தேன்."
 
60 நாட்களில், மணாலி, டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா என்று பயணம் செய்து சென்னையை வந்தடைந்தார். அதோடு, அந்தப் பயணத்தின்போது மனிதத்தின் ஒவ்வொரு துளியை ருசித்துக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்.
 
அதற்குப் பிறகு மீண்டும் பயணத்தைத் தொடங்க கையில் பணம் இல்லை. ஆகவே, வீட்டிலிருந்தபடியே பயணம் தொடர்பான வழிகாட்டுதல் குறிப்புகளை காணொளியாகப் பதிவு செய்து வெளியிட்டுக் கொண்டிருந்தவருக்கு, அடுத்த பயணத்திற்கான நேரம் நெருங்கியது.
 
"பாகிஸ்தானில் குருத்வாரா கோயிலுக்குச் செல்வதற்காக, ஆண்டில் ஒருநாள் மட்டும் இந்தியா - பாகிஸ்தான் எல்லையைத் திறந்துவிடுவார்கள். அந்த ஒருநாள் பாகிஸ்தான் பயணிக்கத் திட்டமிட்டேன். என்னுடைய யூடியூப் பாதையில் கிடைத்த முதல் திருப்பம் அதுதான்.
 
டேரா டாபா நானக் என்ற கிராமத்தின் வழியே இந்திய எல்லையிலிருந்து அந்தக் கோயிலுக்கு வரும் இந்தியர்களைச் சந்திப்பதற்காக, பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமியர்களும் அங்கு வருவார்கள். அவர்களைப் போலவே, அங்கு வரும் பாகிஸ்தான் மக்களைச் சந்திக்க நான் அங்குச் சென்றேன்."
அன்று மாலை 4 மணிக்கு மீண்டும் இந்திய எல்லைக்குள் வந்தவர், அங்கிருந்து பூனே வரை மீண்டும் லிஃப்ட் கேட்டு வந்தார். அதுவே தன்னுடைய முதல் சர்வதேசப் பயணம் என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார். அதோடு, அடுத்ததாக மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணித்தவர், "என்னுடைய 28 நாட்கள் பயணத்தில் பயணச் செலவு உட்பட அனைத்து செலவுகளையும் 54,000 ரூபாயில் முடித்துவிட்டேன்," என்கிறார்.
 
வாழ்க்கையை மாற்றிய ஆப்பிரிக்க பயணம்
 
இப்படியாக கொரோனா பேரிடர் தொடங்கும் வரை உலகம் சுற்றும் வாலிபனாகப் பறந்துகொண்டிருந்த புவனி தரன், அனைவரையும் போலவே ஊரடங்கின்போது வீட்டிற்குள் முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஊரடங்கு முடியும் வரை காத்திருந்தவர், ஆப்பிரிக்காவிற்கு விமானப் பயணங்கள் அனுமதிக்கப்பட்டவுன், அங்கே பறந்தார்.
 
"ஆப்பிரிக்கப் பயணம் தான் என் வாழ்க்கையையே மாற்றியது. கென்யாவுக்கு இந்தியர்கள் பயணிக்கலாம் என்று கேள்விப்பட்டு அங்குக் கிளம்பினேன். யூடியூப் சேனலும் அதன்பிறகு நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியது. தனித்துவமாக ஒன்றைச் செய்யும்போது அதற்கான வரவேற்பு எப்படியிருக்கும் என்பதைக் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது.
 
இந்தப் பயணமும் முதல் பயணத்தைப் போன்றதுதான். ஒரு மாதம் என்று திட்டமிட்டு கிளம்பியவருடைய பயணக் காலம் 8 மாதங்கள் 20 நாட்களாக நீண்டது. அந்தக் காலகட்டத்தில், கென்யா, உகாண்டா, எத்தியோபியா, துபாய், உஸ்பெகிஸ்தான், தான்சானியா, எகிப்து ஆகிய நாடுகளுக்குப் பயணித்துள்ளார்.
 
"ஆப்பிரிக்கா என்றாலே, சினிமாக்களில் வருவதைப் பார்த்துப் பழகியதால் ஓர் அச்சம் இருந்தது. ஆனால், மக்கள் அவ்வளவு அன்பானவர்கள். நைரோபியில் நான் பார்த்த மக்கள் அனைவருமே நட்போடு நடந்துகொண்டார்கள்.
 
ஆப்பிரிக்கா, பூர்வகுடி மக்களுக்குப் பெயர்போனது. நானும் அங்குச் சென்று பல பூர்வகுடிகளைச் சந்தித்தேன். மசாய் மாராவில் வாழும் மசாய் பூர்வகுடிகளோடு வாழ்ந்தேன். அவர்கள் மாட்டின் கழுத்தில் அம்பு வைத்து அடித்து, அதில் வரும் ரத்தத்தை அப்படியே குடிப்பார்கள். மசாய் என்பது அந்த மக்களின் இனக்குழு பெயர், மாரா என்றால் காடு என்று பொருள். அது மசாய் மக்களுடைய காடு என்ற பொருளில், மசாய் மாரா என்று அழைக்கப்படுகிறது.
 
உகாண்டாவில் வாழும் பழங்குடிகளுடைய வாழ்வியலில் பண்டமாற்று முறைதான், நம்மைப் போன்ற நாணயப் பரிமாற்றம் இல்லை. அங்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வேலை நடக்கும். ஒருவர் உணவு சமைப்பார், ஒருவர் மதுபானம் தயாரிப்பார், இப்படியாக வீட்டுக்கொரு வேலை நடக்கும். இறுதியில் பண்டமாற்று முறையில், அவரவருக்குத் தேவையான பொருளை ஒருவரிடமிருந்து மற்றொருவர் வாங்கிக் கொள்வர். இதெல்லாமே புதிதாக இருந்தது" என்கிறார் புவனி தரன்.
 
"விரும்பியதைச் செய்ய நம்பிக்கையோடு கிளம்பினேன்"
 
யூடியூப் சேனல் தொடங்கியபோது, அவருடைய ஒருநாள் பயண பட்ஜெட்டே அதிகபட்சமாக 300 ரூபாய் தான். இன்று தன்னுடைய சேனலின் மூலமாக ஒரு லட்சத்திற்கும் மேலாக வருமானம் ஈட்டுகிறார். அதில் 75 சதவீத வருமானத்தை பயணத்திற்காக செலவு செய்கிறார்.
 
புவனி தரன், குறைந்த செலவில் இவ்வளவு பயணங்களை மேற்கொள்வது, நம்முடைய மக்களுக்குப் புதுமையான, இதுவரை பார்த்திராத மக்களை, இடங்களை காட்சிப்படுத்தியது என்று தனித்துவமான அம்சங்களைக் கையில் எடுத்தார். "யூடியூபில் எந்த சேனலைத் தொடங்கினாலும், அதில் நாம் எதுகுறித்துப் பதிவிடுகிறோமோ அதில் புதுமையாகச் செய்யும்போது மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள்.
 
2018-ம் ஆண்டு ஜனவரியில் யூடியூப் சேனலுக்காக என்று பயணத்தைத் தொடங்கியபோது, தனிப்பட்ட முறையில் கடன்களும் மாதா மாதம் அவற்றுக்காக ஒரு தொகையை ஒதுக்கவேண்டிய கட்டாயமும் எனக்கு இருந்தது. அதையெல்லாம் பார்த்துக்கொள்வோம் என்ற துணிவோடு விரும்பியதைச் செய்யக் கிளம்பினேன்.
 
யூடியூப் என்பது கணிக்கமுடியாதது. எப்போது வேண்டுமானாலும் வரவேற்பு கிடைக்கலாம். சிலருக்கு உடனே கிடைக்கும், சிலருக்கு நாட்கள் பிடிக்கும். என்னுடைய யூடியூப் சேனலில் பார்வையாளர்கள் அதிகமாகி, வருமானம் ஈட்ட ஆறு மாதங்கள் ஆனது. ஒரு காணொளி திருப்புமுனையாக அமையும், எனக்கு பாகிஸ்தான் பயணமும் கென்யா பயணமும் அப்படி அமைந்தது. எதைச் செய்தாலும் அதில் தனித்துவமான அணுகுமுறை இருந்தால் நிச்சயம் வெற்றியடைய முடியும்" என்று நம்பிக்கையோடு கூறினார் புவனி தரன்.
 
8 மாதங்கள் 20 நாட்கள் பல நாடுகளுக்குப் பயணித்துவிட்டு கடந்த மாதம் தஞ்சாவூர் வந்து சேர்ந்தவர், இப்போது மீண்டும் இலங்கையில் இருக்கிறார்.
 
"நான் யூட்யூப் தொடங்கியபோதும்கூட இத்தனை நாடுகளுக்குப் பயணிப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால், இன்று அதைச் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறேன், அதையே ஒரு வாழ்க்கையாக மாற்றிக்கொண்டு, லட்சங்களில் வருமானம் ஈட்டிக்கொண்டிருக்கிறேன். இப்போது, இலங்கையிலிருந்து ஊருக்குத் திரும்பிப் போகும் எண்ணம் இல்லை. அடுத்த பயணத்தைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்," என்றபடி மலையேற்றத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேஸ் சிலிண்டருக்கு ரூ.1.50 கூடுதல் வசூல்! 7 ஆண்டுகளாக நடந்த வழக்கு! - தீர்ப்பு என்ன தெரியுமா?

டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டல்.. பயத்தில் விஷம் குடித்து உயிரை விட்ட அரசு பள்ளி ஆசிரியை..!

மக்கள் போராட்டங்களை கண்டு நடுங்குகிறது ஸ்டாலின் மாடல் அரசு: ஈபிஎஸ் விமர்சனம்..!

டங்ஸ்டன் விவகாரத்தில் நாடகமாடும் திமுக: அண்ணாமலை கண்டனம்..!

நாங்க போராட அனுமதி இல்லை.. நீங்க மட்டும் போராட்டம் நடத்தலாமா? - திமுகவிற்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments