Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் எஸ்பி பாலியல் புகார்: "சிறப்பு டிஜிபியை ஒரு எஸ்பி அச்சமின்றி விசாரிக்க முடியுமா?"

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (23:47 IST)
தமிழ்நாட்டில் காவல்துறை பெண் கண்காணிப்பாளரை காவல்துறை சிறப்பு தலைமை இயக்குநர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் சம்பவத்தை மாவட்ட கண்காணிப்பாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரித்தால் நியாயம் எப்படி கிடைக்கும் என தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
 
இந்த விவகாரம் தொடர்பான தகவல் ஊடகங்களில் வெளிவந்த நிலையில், அதை தாமாக முன்வந்து விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இந்த வழக்கை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு விசாரித்து வருகிறது.
 
இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் விசாரணை நிலவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் "மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பாலியல் புகார் தொடர்பாக இதுவரை 68 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் வாக்குமூலங்கள் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 161வது பிரிவின்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலாவது நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி, இரண்டாம் நபராக குற்றம்சாட்டப்பட்டவரும் சிறப்பு டிஜிபி உத்தரவின்பேரில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் எஸ்பி வந்த காரை போலீஸ் படையுடன் சென்று வழிமறித்தவருமான மற்றொரு மாவட்ட எஸ்பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி உள்ளிட்டோர் விசாரணைக்காக நேரில் அழைக்கப்பட்டு அவர்களின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.
 
"சிறப்பு டிஜிபி மீது ஏன் நடவடிக்கை இல்லை?"
 
மாநில குற்றப்பிரிவு சிஐடி விசாரித்து வரும் இந்த வழக்கு, ஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி மேற்பார்வையில் டிஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி கண்காணிப்பில் நடந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த அறிக்கையை கவனத்தில் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, "சம்பந்தப்பட்ட புகாரின் தீவிரம் கருதியே இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதில் சிறப்பு டிஜிபிக்கு உதவியதாகக் கூறப்படும் எஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், முதலாவது நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறப்பு டிஜிபி காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டது ஏன்? வழக்கு நியாயமாக விசாரிக்கப்பட வேண்டுமானால், அவரும் பணியில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டிருக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.
 
"மேலும், காத்திருப்பு பட்டியலில் ஒரு அதிகாரி வைக்கப்பட்டிருப்பதை அவருக்கான தண்டனையாக கருத வாய்ப்பில்லை என்றும், அவர் தனது காத்திருப்பு காலத்தில் அனைத்து ஊதிய படிகளையும் பெறுகிறார். அந்த அதிகாரி பதவியை வகிக்கும் காலகட்டத்தில், அவருக்கு மிகவும் கீழ் நிலையில் இருக்கும் மாவட்ட கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரி எப்படி விசாரிக்க முடியும்? விசாரணையின்போது அந்த சிறப்பு டிஜிபி, மாவட்ட எஸ்பியை மிரட்ட வாய்ப்பு அமையாதா அல்லது தனது மேலதிகாரியிடம் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் அந்த எஸ்பியால் கேள்வி எழுப்ப முடியுமா? இந்த போக்கு விசாரணை வலுவாக நடத்தப்படுவதை தடுக்காதா?"
 
 
"இதுவரை தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களை பரிசீலிக்கும்போது, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரிகிறது. இதுவே ஒரு கீழ்நிலையில் இருக்கும் அதிகாரி மீதான புகார் என்றால் அவர் இந்நேரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பார். சிறப்பு டிஜிபிக்கு உதவியதாக கூறப்பட்ட எஸ்பியின் செயலை மிகத் தீவிரமானதாகக் கருதி அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார் என்றால், ஏன் அந்த சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை? அதே அளவுகோலைத்தானே அரசு கடைப்பிடித்திருக்க வேண்டும். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தி வரும் உணர்வுக்கு மாநில அரசு உரிய மதிப்பு தரவில்லை என்று தோன்றச் செய்கிறது. எனவே, இது தொடர்பான அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் விசாரணை நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்," நீதிபதி குறிப்பிட்டார்.
 
இதையடுத்து அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அடுத்த விசாரணையை காணொளி வாயிலாக நடத்துமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அடுத்த விசாரணையை வரும் 23ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்து அன்றைய தினம் வழக்கின் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்