Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லீலாவதி கொலை வழக்கு: '2k கிட்ஸ்' தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (14:00 IST)
தமிழ்நாட்டில் நடந்த அரசியல் கொலைகளுக்காக ஒரு பட்டியல் தயார் செய்தால், அதில் லீலாவதி கொலை வழக்குக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு.

 
அவ்வப்போது, லீலாவதி கொலை வழக்கு என்று இணையத்தில் பேசப்படும் இந்த வழக்கு என்ன? யார் இந்த லீலாவதி? ஏன் அவரது கொலை வழக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகும் பேசப்படுகிறது?
 
ஏப்ரல் 23, 1997. தன் கணவருடன் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக கடைத்தெருவுக்கு சென்றிருந்தார் லீலாவதி. உடன் வந்திருந்த லீலாவதியின் கணவர் குப்புசாமி கட்சித் தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
 
இதற்கிடையில், யாரென்று தெரியவில்லை. அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை வெட்ட வருவதைக் கண்ட லீலாவதி தடுக்கும் நோக்கில், கையை உயர்த்த கைவிரல்கள் துண்டாகிக் கீழே விழுந்தன. தொடர்ந்து மர்ம நபர்கள் அவரை வெட்டிச் சாய்த்தனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் லீலாவதி.
 
அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் அதிகம் கவனிக்கப்பட்ட, பேசப்பட்ட, பரபரப்பை ஏற்படுத்திய கொலை இது. காரணம், பட்டப்பகலில் ஒரு பெண் மீது நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதல் அரசியல் காரணங்களுக்காக நிகழ்த்தப்பட்டிருந்தது.
 
யார் இந்த லீலாவதி?
 
அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டார் என்றால் யார் இவர்? எந்த கட்சியின் அரசியல்வாதி? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் (சுருக்கமாக மார்க்சிஸ்ட் கட்சி) முழுநேரத் தொண்டர்தான் இந்த லீலாவதி. இவரது கணவர் குப்புசாமியும் அதே கட்சிதான்.
 
மதுரை வில்லாபுரம் பகுதியில் தனது மூன்று மகள்களுடன் வசித்து வந்த இந்த கம்யூனிஸ்ட் தம்பதி, அரசியல், சமூக செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டது. மதுரை மாநகராட்சியின் 59ஆவது வார்டு கவுன்சிலராகவும் இருந்தார் லீலாவதி.
 
1996, அக்டோபரில் நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் வென்று கவுன்சிலரானார் லீலாவதி. அதே வார்டில், திமுக நிர்வாகி அண்ணாதுரையின் மனைவி வள்ளி திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இது அண்ணாதுரை மனதில் விரோதத்தை வளர்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
 
வில்லாபுரம் பகுதியின் பெரும் பிரச்னை அங்கு நிலவிவந்த குடிநீர் பிரச்னைதான். இதற்கு முறையான நடவடிக்கை எடுத்து தீர்வும் கண்டதன் விளைவாக பகுதி மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானார் லீலாவதி. இதுவும் அரசியல் பகை வளர காரணமாக அமைந்தது.
 
இதற்கு முன்னதாக, தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்டபோதே வெற்றி சான்றிதழைப் பெறவிடாமல் திமுகவைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மற்றும் அண்ணாதுரை இருவரும் தகராறு செய்ததாக செய்திகள் உள்ளன. இதைத் தொடர்ந்து லீலாவதியின் வீட்டிலும் தகராறு செய்துள்ளனர். லீலாவதி கொலைக்கு இந்தப் பகையே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.
 
தீர்ப்பு என்ன?
 
இந்த கொலை வழக்கு தொடர்பாக, முத்துராமலிங்கம், அண்ணாதுரை, முருகன், சூங்கு முருகன், மீனாட்சிசுந்தரம், நல்லமருது ஆகிய 6 பேர் குற்றம் சாட்டப்பட்டு அடுத்த இரு நாள்களில் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
ஏன் இந்த வழக்கு பிரபலம்
 
தமிழ்நாட்டில் சமூக, அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டது இதுதான் முதல்முறை என்று 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்ட 'மக்கள் சேவையில் மடிந்த வீராங்கனை லீலாவதி' என்ற நூல் தெரிவிக்கிறது.
 
லீலாவதி கொலை செய்யப்பட்ட விதம் தமிழ்நாடு முழுவதும் பரவ, பல்வேறு தலைவர்கள் நேரடியாக வந்து லீலாவதி குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தனர். அரசியலுக்காக நிகழ்த்தப்பட்ட இந்தக் கொலையில், தண்டனை பெற்று வந்தவர்களில் மூவர் 2008ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டனர்.
 
விமர்சனங்கள்
 
திமுக - கம்யூனிஸ்ட் கூட்டணி வைக்கும் போதெல்லாம் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு விமர்சனங்கள் எழுவது வழக்கம். அண்மையில் நடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் நல்லமருதுவின் சகோதாரரும் திமுக மாவட்டச் செயலாளாருமான எஸ்.ஆர்.கோபியை சந்தித்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இன்று லீலாவதியின் நினைவு நாள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments