Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ்: ’’எங்களிடமிருந்து தொற்று ஏற்படுவதை போல பார்க்கிறார்கள்’’ - தமிழக தூய்மை பணியாளர்கள் வேதனை

Webdunia
வியாழன், 14 மே 2020 (15:43 IST)
எவ்வளவு பெரிய பெருந்தொற்று வந்தாலும், பாதாளச் சாக்கடை தூய்மை செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டும் ஓய்வென்பதே இல்லை. குறிப்பாக கொரோனா நோய்த் தொற்று காரணமாக வீடுகளிலேயே மக்கள் முடங்கி இருப்பதால், இந்த தூய்மை பணியாளர்களின் சேவை அத்தியாவசியமாகியுள்ளது.

மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, உயிரை பணயம் வைத்து இந்த தொழிலாளர்களுக்கு கிடைப்பது என்ன என்பது விவாதத்துக்குரிய விஷயம்.

இருப்பினும் கடந்த 50 நாட்களாக எந்த முகச்சுழிப்பும் இன்றி தொடர்ந்து இயங்கி வரும் பாதாள சாக்கடை தூய்மை செய்யும் பணியாளர்கள் இருவரிடம் அவர்களின் தற்போதைய சூழல் குறித்து பிபிசி தமிழ் கேட்டறிந்தது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்த்த பாதாளச் சாக்கடை தூய்மை செய்யும் தொழிலாளர் ரவி என்பவர், இந்த பணியைக் கடலூர் மாவட்டத்திலிருந்து, புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வரை சென்று செய்து கொண்டிருக்கிறார்.

’கழிவு நீர்த் தொட்டியில் ஏற்பட்ட அடைப்புகளால் மிகவும் சிரமப்படுகிறோம். உடனே சரிசெய்து தர முடியுமா என கேட்பார்கள். அவர்களும் வீட்டில் குழந்தைகள், முதியவர்களை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியும்.

அதனால்தான் காசு கிடைக்கிறதோ, இல்லையோ? வேலைக்காக யார் அழைத்தாலும் தட்டிக்கழிக்காமல் சென்று விடுவோம். கிராமப்புறங்களில் கூட ஓரிரு நாட்களுக்கு சமாளித்துக் கொள்வார்கள். ஆனால் நகர் பகுதிகளில் உடனடியாக அடைப்புகளை அகற்றியாக வேண்டி இருக்கும்.’’ என்கிறார் ரவி.

நேரம், காலம் பார்க்காமல் இந்த வேலையை பார்க்க நாங்கள் தயாராக இருந்தாலும், காவல்துறையினர் சில நேரம் அனுமதிப்பதில்லை எனக் கூறும் ரவி, அவர்களையும் சமாளித்து தான் தினசரி பிழைப்பை நடத்த வேண்டி இருக்கிறது என வருத்தப்படுகிறார்.

உயிரை பணயம் வைத்து சாக்கடையில் இறங்கி வேலை பார்க்கும் எங்களிடமும் கூலியில் பேரம் பேசுகிறார்கள். இந்த கொரோனா தொற்று காலத்தில், சுத்தம் செய்த பின்னர் கழிவு நீரை வெளியே சென்று அகற்றுவது சிரமமாக இருக்கிறது. யாரும் இதற்கு அனுமதிப்பதில்லை. இதையும் தாண்டி பலரிடம் திட்டு வாங்கி இந்த வேலைகளை செய்து முடிக்கிறோம். ஆனால் இதற்காக கிடைக்கும் கூலி வெகு சொற்பம் தான். இருந்தாலும் வேலையை முழுமையாகச் செய்த பின்னரே வருவோம். ’’ என கூறுகிறார் ரவி.

தனது 15 வயதிலிருந்து இந்த பணிகளை செய்து வரும் ரவி, சில சமயங்களில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் போது விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையையும் அடைந்திருக்கிறார். குடும்பத்தை காப்பாற்ற வேறு வழி தெரியாமல்தான், ஆபத்து இருப்பது தெரிந்தும் இதை செய்கிறோம் என்கிறார் ரவி.

இதே சூழ்நிலையில் பணியாற்றி வரும் மற்றொரு தொழிலாளரான தீனா, என்னதான் நாங்கள் மக்களுக்காக பணியாற்றினாலும், மக்கள் எங்களை மரியாதை குறைவாகவே நடத்துவது வருத்தமளிக்கிறது என்கிறார்.

’’பல சிரமங்களுக்கு இடையில் பணிபுரிந்தாலும், எங்களிடம் இருந்து கொரோனா பரவி விடுமோ என்பது போல மக்கள் எங்கள் பார்க்கிறார்கள். சில நேரங்களில் நாங்கள் வேலை செய்யும் வீடுகளுக்கு அருகில் இருப்பவர்கள், எங்களிடம் சண்டைக்கு வருகிறார். இதில் எங்கள் தவறு என்ன இருக்கிறது?.

சில இடங்களில் ஒரு படி மேலே போய், கழிவு நீர் சிறிது கீழே கொட்டிவிட்டாலும், அதைப்பார்த்து, எங்களது ஆட்களை அடிக்கவும் செய்கின்றனர்.கைகளை நீட்டி சைகைகளால், ஒருமையில் பேசி எங்களை கீழ்த்தரமாகவும், குற்றவாளிகள் போலவும் நடத்துகின்றனர். ’’ என தாங்கள் படும் துயரங்களை விவரிக்கிறார் தீனா.

மேலும், ‘’எங்களைப் போன்ற நிலை அவர்களுக்கு ஏற்பட்டால் என்ன செய்வார்கள்? நாங்களும் மனிதர்கள்தான் என்பதை அவர்கள் ஒருபோதும் உணர்வதில்லை.இதைத்தவிர கொரோனா நோய் தொற்றினால் தடை செய்யப்பட்ட சில பகுதிகளில் நாங்கள் பணி செய்துவிட்டு வீட்டுக்கு வரும் போது, எங்கள் மூலம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என அச்சமாக இருக்கிறது. ’’ எனக் கூறுகிறார் தீனா.

ஆபத்துகளுக்கு இடையில் பணியாற்றும் தங்களுக்கு இப்போது வரை எந்த பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை என வேதனை தெரிவிக்கிறார்கள் இந்த தூய்மை பணியாளர்கள். ’’வருமானம் குறைவாக இருக்கும் காரணத்தினால் வேறு வேலைக்கு செல்லலாம் என்றாலும் கூட, எங்களை நம்பி யாரும் வேலை கொடுப்பதில்லை.எங்கள் வாழ்வனைத்தும் இந்த வேலையை நம்பி தான் வாழ்கிறோம். அதற்காகவே ஓடிக் கொண்டிருக்கிறோம்.’’ என தெரிவிக்கிறார் மற்றொரு தூய்மை பணியாளரான செந்தில்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments