Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா vs அமெரிக்கா: உலகின் சுற்றுச்சூழல் மாசுக்கு முக்கிய காரணம் யார்?

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (15:13 IST)
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்கனவே பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன. இதில் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னையும் அடங்கும்.
 
கடந்த செப்டம்பர் மாதம், சீனா சுற்றுச்சூழலுக்கு மிகுந்த கேடு விளைவிப்பதாக அமெரிக்கா ஒரு பட்டியலை வெளியிட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக சீனாவும், அமெரிக்கா எவ்வாறெல்லாம் சுற்றுச்சூழலை நாசப்படுத்துகிறது என்று கூறி ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் எந்த நாடு, இந்த உலகிற்கு அதிகளவில் மாசை ஏற்படுத்துகிறது என்பதை பிபிசி ரியாலிட்டி செக் குழு ஆராய்ந்தது.
 
கார்பன் உமிழ்வு:
சீனாவின் கூற்று: அமெரிக்காவின் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்வுகள், சீனாவை விட மூன்று மடங்கு அதிகமானது. 1750ஆம் ஆண்டில் இருந்து (கார்பன் உமிழ்வுகள் இல்லை என கருதப்பட்ட காலம்) 2018ஆம் ஆண்டு இறுதிவரை சீனா சுமார் 210.20 பில்லியன் டன் கார்பனை உருவாக்கியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
 
இதே காலகட்டத்தில் அமெரிக்கா 404.77 பில்லியன் டன் கார்பனை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா நிலக்கரியில் இருந்து, இயற்கை எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றை நோக்கி நகர்வதால், சமீப காலங்களில் அந்நாட்டின் கார்பன் உமிழ்வுகள் குறைந்து கொண்டு வருகின்றன.
 
ஆனால், சீனாவின் மொத்த ஆற்றல் தொடர்பான உமிழ்வுகள், அமெரிக்காவை விட இருமடங்கு அதிகம் என்றும், உலகில் மூன்றில் ஒரு பங்கு கார்பனை சீனா வெளியேற்றுகிறது என்றும் அமெரிக்கா கூறுகிறது. ஓர் ஆண்டில் சீனாவின் கார்பன் உமிழ்வுகள், அமெரிக்காவை விட இரு மடங்கு அதிகம் என்று ஐ.நாவின் தரவுகள் கூறுகின்றன.
 
கடந்த ஆண்டு மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு கார்பன் உமிழ்விற்கு சீனா காரணமாகியுள்ளது. அதே நேரத்தில் உலகின் ஒட்டுமொத்த கார்பன் உமிழ்வில் அமெரிக்காவின் பங்கு 13 சதவீதமாக இருக்கிறது.
 
காடுகளை அழித்தல்:
சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவது மற்றும் காடுகளை அழிப்பது அமெரிக்காவில் அதிகம் இருப்பதாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவது "பரவலாக" இல்லை என்று உலக வனஉயிரினங்கள் நிதியம் (World Wildlife Fund) கூறுகிறது.
 
மேலும் 2010 முதல் 2020 வரை, ஆண்டு தோறும் சராசரி காடழிப்பு செய்த நாடுகள் பட்டியலில் முதல் 10 இடங்களில்கூட அமெரிக்கா இல்லை. ஆனால், மரப் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் நாடாக அமெரிக்கா இருப்பது, உலகின் மற்ற பகுதிகளில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என்று WWF அமைப்பு கூறுகிறது.
 
அமெரிக்காவின் கூற்று: "உலகில் அதிகளவில் சட்டவிரோத மரப்பொருட்களை நுகர்கிறது சீனா" ஆய்வுகள்படி இந்தக் கூற்று உண்மைதான். "உலகின் அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளில் இருந்து அதிகளவில் சீனா கட்டுமானத்துக்கு பயன்படும் மரம் மற்றும் மரப் பொருட்கள் குறிப்பிடத்தகுந்த அளவு இறக்குமதி செய்வது சட்டவிரோதமாக வெட்டப்பட்டதுதான்" என சுற்றுச்சூழல் புலனாய்வு அமைப்பு கூறுகிறது.
 
இந்நிலையில் டிசம்பர் 2019ல் "சட்டவிரோதமாக வாங்கப்படும் மரக்கட்டைகளை" வர்த்தம் செய்ய தடை விதித்து சீனா உத்தரவிட்டது. ஆனால், இது வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் சட்டவிரோத மரக்கட்டைகள் வர்த்தகத்தில் என்ன தாக்கம் ஏற்படுத்தியது என்பது தெளிவாக தெரியவில்லை.
 
பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றுமதி:
சீனாவின் கூற்று: "உலகில் திடக்கழிவுகளை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் மற்றும் தனி நபர் வருமான அடிப்படையில் அதிகளவில் பிளாஸ்டிக்கை நுகரும் நாடு அமெரிக்கா" திடக்கழிவுகளுக்கு ஒரு முக்கிய காரணம் பிளாஸ்டிக் பயன்பாடு.
 
2019ல் 662,244 டன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால் மதிப்பின் அடிப்படையில் பார்த்தால், ஐ.நாவின் தரவுகள்படி அந்தாண்டு ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள்தான் அதிகளவில் திடக்கழிவுகளை ஏற்றுமதி செய்துள்ளன.
 
அதே நேரத்தில் 2018ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றுமதி குறைந்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் சீனா உள்ளிட்ட சில நாடுகள் இந்த இறக்குமதிகளுக்கு தடை விதித்துள்ளன.
 
அமெரிக்காவின் கூற்று: "பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தயாரிப்பதும் ஏற்றுமதி செய்வதும் சீனா". அதோடு கடலில் அதிகம் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வதற்கும் சீனாதான் முக்கிய காரணம். பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் தயாரிக்கும் நாடு சீனாதான் என்று உலக வங்கி தரவுகள் உறுதி செய்கின்றன.
 
உலகில் பயன்படுத்தப்படும் மொத்த பிளாஸ்டிக்குகளில் மூன்றில் ஒரு பங்கு சீனாவில் தயாரிக்கப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான காரணம் ஒட்டுமொத்தமாக சீனா அதிக பொருட்களை தயாரித்து ஏற்றுமதி செய்வது.
 
ஆனால் இன்னும் அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் தனிநபர் அடிப்படையில் அதிக பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. "உலகின் 4 சதவீத மக்கள் தொகை கொண்ட நாடு அமெரிக்கா. ஆனால் அந்நாடு 17 சதவீத பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறது" அதே நேரத்தில் சீனா மற்றும் பிற ஆசிய நாடுகள் கடலில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments