தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு (2015) நிகழ்ந்துள்ள சாதி மோதல்கள், முந்தைய ஆண்டை விட இரட்டிப்பாகியுள்ளது என்று தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் தமிழகத்தில் 426 சாதி மோதல்கள் நிகழ்ந்துள்ளன என்று இந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட சாதி மோதல்களில், உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
சாதி மோதல்கள் அதிகளவில் நடந்த மாநிலங்கள் (2015):
மாநிலம் |
மோதல்கள் |
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை |
உத்தரப் பிரதேசம் |
724 |
808 |
தமிழ்நாடு |
426 |
578 |
பீகார் |
258 |
403 |
ஜார்கண்ட் |
252 |
363 |
அதிக அளவு சாதி மோதல்கள் நடந்துள்ளதாக, கடந்த காலங்களில் அவப்பெயர் ஏற்பட்டுள்ள பீகார் மாநிலத்தை விட, சென்ற ஆண்டு தமிழகத்தில் கூடுதலான சாதி தொடர்பான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2014 ஆம் ஆண்டை விட 100% -க்கும் அதிகமாக 2015-இல் சாதி மோதல்கள் தமிழகத்தில் நடந்துள்ளன என்று கூறும் இந்த அறிக்கை, தமிழகத்தில் பதிவாகியுள்ளதாக பட்டியலிட்டுள்ள 426 சாதி மோதல்களில், தாழ்த்தப்பட்ட பிரிவினர்களுக்கு எதிராக 186 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
''ஒரு நாகரீக சமூகத்தில் நடக்கும் வகுப்புவாதம் மிகவும் ஆபத்தானது. இதுவே சாதி மோதல்கள் அதிகரிப்புக்கு காரணமாக அமைகிறது'' என்று தலித் ஆர்வலரான புனிதா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், நாட்டில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து பேசும் மக்கள், தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பாரபட்சங்கள் குறித்து எதுவும் பேசுவதில்லை என்று கூறியுள்ளார்.
தலித் மற்றும் பழங்குடி சமூகத்தினர் மீதான அடக்குமுறைகளை தடுக்கும் சட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள இடைவெளி மற்றும் காலதாமதம் குறித்து பல சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தலித் சமூகத்தினர் சந்திக்கும் அவலங்கள் குறித்து கருத்து தெரிவித்த மனித உரிமைகள் ஆர்வலரான பேராசிரியர் கார்ல் மார்க்ஸ், ''தலித் மற்றும் பழங்குடி சமூகத்தினர் மீதான அடக்கு முறைகளை தடுக்கும் சட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்கு எந்த பொறிமுறையும் இல்லை. இது போன்ற சம்பவங்களை கையாள ஒரு ஆணையம் தேவைப்படுகிறது'' என்று தெரிவித்தார்.
''தலித் சமூக மக்கள் அளிக்கும் புகார்கள், தலித் மற்றும் பழங்குடி சமூகத்தினர் மீதான அடக்கு முறைகளை தடுக்கும் சட்டத்தின்படி பதிவு செய்யப்படுவதில்லை. இந்த சட்டம் தவறுதலாகவும் பயன்படுத்தப்படுகிறது'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் குறைந்தளவு சாதி வன்முறை நடந்துள்ளதாக தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டின் அறிக்கையாக 'இந்தியாவில் நடந்துள்ள குற்றங்கள்' என்ற தலைப்பில், நேற்று தேசிய குற்றப் பதிவுகள் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவில் நடந்துள்ள மாணவர் கலவரங்களின் எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டில் 3600-ஆக பதிவாகியுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாகும் என்றும் தெரிவித்துள்ளது.