Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் மூலம் வாக்காளர்கள் செல்போன் எண்களை எடுத்து பாஜக வாட்சாப் பிரசாரம்? தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (12:43 IST)
(இன்று 25.03.2021 வியாழக்கிழமை, இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

புதுச்சேரியில் 'வாட்ஸ் ஆப் குரூப்' தொடங்கி பிரசாரம் செய்யும் பா.ஜ.க.வுக்கு எதிரான புகாருக்கு தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், முகவரி மட்டுமே இருக்கும். அதில் செல்போன் எண் இருக்காது. ஆனால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று, 'வாட்ஸ்அப் குழுக்கள்' தொடங்கி பா.ஜ.க.வினர் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், 'வாட்ஸ்அப் குரூப்கள் உருவாக்கி செய்யப்படும் பிரசாரம் குறித்து மனுதாரர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், 'அரசியல் கட்சிக்கு எப்படி வாக்காளர்களின் செல்போன் எண்கள் கிடைத்தன? அந்த செல்போன் எண்களை அரசியல் கட்சி எப்படி பயன்படுத்தலாம்?' என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அரசியல் கட்சியின் இந்த செயலுக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், 'இதுபோன்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆளுங்கட்சி என்பதால் தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறதா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதோடு, இந்த வழக்குக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையம் விரிவான பதிலை தெரிவிக்க வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டதாக தினத்தந்தியில் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் மீது 60% வரி: ஜிஎஸ்டிக்குள் வந்தால் 28% மட்டுமே சாத்தியம்: சுஷில் குமார் மோதி

மாநிலங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு ஆண்டு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் பெட்ரோல், டீசல் வணிகத்தை அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) வரையறைக்குள் கொண்டுவர வாய்ப்பே இல்லை என பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுஷில் குமார் மோதி கூறிதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

நேற்று (புதன்கிழமை) நிலவரப்படி ஒரு லிட்டா் பெட்ரோல் மும்பையில் ரூ.97.40-க்கும், சென்னையில் 92.95-க்கும், கொல்கத்தாவில் ரூ. 91.18-க்கும், தில்லியில் ரூ. 90.99-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

விலை உயா்வுக்கு கண்டனம் தெரிவித்து வரும் எதிர் கட்சிகள், விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், பெட்ரோல், டீசல் வணிகத்தை ஜிஎஸ்டி வரையறைக்குள் கொண்டுவரவும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற 2021 நிதி மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற பாஜக தலைவா் சுஷில் குமார் மோதி கூறியதாவது:

பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி விதிப்பின் மூலம் மத்திய, மாநில அரசுகள் கூட்டாக ரூ. 5 லட்சம் கோடி வருவாயை ஈட்டி வருகின்றன. அவற்றின் மீது 60 சதவீத வரி விதிப்பு செய்யப்படுகிறது. ஒருவேளை, பெட்ரோல், டீசல் வணிகம் ஜிஎஸ்டி வரையறைக்குள் கொண்டுவரப்பட்டால், அவற்றின் மீது அதிகபட்சமாக 28 சதவீத வரி விதிப்பை மட்டுமே செய்யமுடியும். அதாவது, ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.100-க்கு விற்கப்படும்போது, ரூ. 60 வீதம் கிடைக்கும் வரி வருவாய், ரூ. 14-ஆக குறைந்துவிடும்.

மேலும், இந்த 60 ரூபாய் வரியில், மாநில அரசுக்கு ரூ. 25 கிடைக்கும். அதோடு, மத்திய அரசுக்கு கிடைக்கும் ரூ. 35-இல், 42 சதவீதம் மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், மாநிலங்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு ஆண்டு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்பதால் பெட்ரோல், டீசல் வணிகத்தை அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி (சரக்கு சேவை வரி) வரையறைக்குள் கொண்டுவர வாய்ப்பே இல்லை.

மேலும், ஜிஎஸ்டி வரி விதிப்பை 'கப்பா் சிங் வரி' என்று சிலா் விமா்சனம் செய்து வருகின்றனா். ஆனால், இதுவரை நடைபெற்றுள்ள ஜிஎஸ்டி குழு கூட்டத்தில் இந்த வரி விதிப்பை எந்தவொரு மாநிலமும் எதிர்க்கவில்லை என அவா் கூறியதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு ஸ்டாலின்!- தொல். திருமாவளவன் பேட்டி

இந்து தமிழ் திசைக்கு கொடுத்த நேர்காணலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஸ்டாலின் கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு என மதிப்பிடுகிறேன் எனக் கூறியுள்ளார்.

பாஜகவுக்கு எதிரான யுத்தத்தில் திமுகவையும் ஸ்டாலினையும் எந்த அளவுக்கு நம்புகிறீர்கள்? என்கிற கேள்விக்கு, முழுமையாக நம்புகிறேன்.

ஸ்டாலினை நான் எப்படி மதிப்பிடுகிறேன் என்றால், அவர் 'கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு' என கூறுவேன். எப்படியென்றால், உறுதியான சனாதன எதிர்ப்பு என்கிற கருத்தியல் சார்ந்து ஒரு முடிவை எடுக்கும்போது கருணாநிதியின் பிள்ளை என்பதை அவர் நிரூபிக்கிறார்.

திமுக கூட்டணியை விட்டு விசிகவை அகற்ற எத்தனையோ சக்திகள் முயன்றன; குறிப்பாக, 'மநு' விவகாரத்தை இதற்குச் சரியான வாய்ப்பாக அவை பயன்படுத்தின. ஸ்டாலின் பக்கபலமாக நின்றார். பகைவர்களை அடையாளம் கண்ட பின் அவர்களுக்கு எதிராக எதற்கும் அஞ்சாமல் முன்னோக்கிச் செல்வதிலும், கூடவே அது நோக்கி இயக்கத்தையும் கட்டுப்பாடாக நிர்வகித்துச் செல்வதிலும் ஜெயலலிதாவை அவர் பிரதிபலிக்கிறார். சனாதனத்துக்கு எதிராக அவர் முன்னெடுக்கும் போரில் விசிக பக்கபலமாக இருக்கும் என தொல் திருமாவளவன் பதிலளித்துள்ளதாக அந்நேர்காணலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments