Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்றுநோய் வர சர்க்கரை, செல்போன் உள்ளிட்ட இந்த 3 பொருள்களும் காரணம் ஆகுமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Prasanth Karthick
வெள்ளி, 19 ஜூலை 2024 (15:06 IST)

நம்மில் பலருக்கும் புற்றுநோயுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு இருக்கும். குடும்பத்தில் ஒருவரோ, நண்பர்களில் ஒருவரோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது நமக்குப் புற்றுநோய் இருக்குமோ என்ற பயம் இருக்கலாம்.


 

உலக மக்களில் இரண்டில் ஒருவருக்கு, அவர்களது வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படலாம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 

புற்றுநோய் இவ்வளவு பரவலாக இருப்பதால் அதுபற்றி ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது.
 

பல சமயங்களில் புற்றுநோயைப் பற்றிய கட்டுக் கதைகளும் தவறான தகவல்களுமே நமக்குக் கிடைக்கின்றன. இவை நம் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடமிருந்தோ, செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சி மூலமாகவோ நமக்குக் கிடைக்கின்றன. இத்தகைய தவறான தகவல்கள் புற்றுநோய் கண்டறியப்பட்ட ஒருவருக்கு மிகவும் ஆபத்தாகக் கூட அமையலாம்.
 

புற்றுநோய் குறித்த இத்தகைய கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்களிலிருந்து, உண்மைகளைப் பிரித்தறிவது எப்படி?
 

இதற்கான ஒரு முன்னெடுப்பாக, புற்றுநோய் உருவாக்கக் கூடும் என்று பொதுவாக நம்பப்படும் மூன்று விஷயங்கள் உண்மையிலேயே புற்றுநோயை உருவாக்குமா என்று இக்கட்டுரையில் பார்ப்போம்.
 

சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்பான்கள் புற்றுநோயை உருவாக்குமா?


பிரிட்டனின் ‘கேன்சர் ரிசர்ச் யு.கே’ என்ற புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் செவிலியராகப் பணியாற்றும் லெஸ்லி கிரீன், தன்னிடம் சிலசமயம் ‘சர்க்கரை புற்றுநோயை உருவாக்குமா?’ என்று கேட்கப்படுவதாகக் கூறுகிறார்.
 

அம்மையத்தில் ஆராய்ச்சித் தகவல்களுக்கான தலைவராக இருக்கும் மருத்துவர் சாம் காட்ஃப்ரே, இந்தத் தகவல் ‘வார்பர்க் விளைவு’ (Warburg Effect) என்பதன் தவறான புரிதல் என்கிறார். “இந்த விளைவு புற்றுநோய் செல்கள், அதிக அளவு சர்க்கரையை உண்கின்றன, அவை சர்க்கரையை மிகத் திறமையாக ஜீரணம் செய்கின்றன என்று சொல்கிறது,” என்கிறார் அவர்.
 

பெருங்குடல் புற்றுநோயிலிருந்து குணமான மருத்துவர் அனிஷா படேல், “ஆனால், சர்க்கரை உட்கொள்வதை நிறுத்தினால் மட்டும் புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்க முடியாது," என்கிறார்.
 

அப்படியெனில் செயற்கை இனிப்பான்கள்? டயட் குளிர்பானங்களில் இருக்கும் அஸ்பார்டேம் போன்ற செயற்கை இனிப்பான்கள் புற்றுநோயை உண்டாக்குமா?
 

“அநேகமாக இல்லை,” என்கிறார் மருத்துவர் சாம் காட்ஃப்ரே.
 

இதுபோன்ற செயற்கை இனிப்பான்கள் 2B வகுப்பு கார்சினோஜென்கள் (புற்றுநோய் உண்டாக்கும் வஸ்துக்கள்) வகைமையில் சேர்க்கப்பட்டுள்ளன, என்கிறார் அவர்.
 

“இது, அவை புற்றுநோயை உருவாக்கும் என்பதற்கான தீர்க்கமான ஆதாரம் அல்ல. ஆனால் அவை உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அவை சிறிதளவுகூட புற்றுநோயை உண்டாக்கும் நிலையை அடைய, ஒருவர் ஒரு நாளைக்கு 14 கேன்கள் குளிர்பானங்களைக் குடிக்க வேண்டும்,” என்கிறார் சாம் காட்ஃப்ரே.
 

ஆனால், குளிர்பானங்களில் இருக்கும் சர்க்கரை உடல் பருமனை அதிகரிக்கும், என்கிறார் மருத்துவர் அனிஷா படேல்.
 

உடல் பருமனை ஆரோக்கியமான அளவில் வைத்துக்கொள்வது புற்றுநோய் ஏற்படும் ஆபத்தின் மீது தாக்கம் செலுத்துகிறது, என்கிறார் செவிலியர் லெஸ்லி கிரீன்.
 

மொபைல் ஃபோன் கதிர்வீச்சு புற்றுநோயை உண்டாக்குமா?


மொபைல் ஃபோன் கதிர்வீச்சு புற்றுநோயை உண்டாக்கும் என்று சிலர் நினைக்கின்றனர்.

“ஆனால், இது மொபைல் ஃபோன் வெளியிடும் கதிர்வீச்சு குறித்த தவறான புரிதல்,” என்கிறார் சாம் காட்ஃப்ரே. மொபைல் ஃபோன்கள் மின்காந்த அலைகளைக் கொண்டிருக்கின்றன, என்கிறார் அவர்.
 

கேன்சர் ரிசர்ச் யு.கே அமைப்பின் கேம்ப்ரிட்ஜ் நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவர் சிகூர்னி பொன்னர், “மின்காந்த அலைகள் என்ற பெயர் ஆபத்தானது போலத் தோன்றினாலும், இதன்மீது நடத்தப்பட்ட புற்றுநோய் ஆராய்ச்சிகள், மொபைல் ஃபோன் கதிர்வீச்சு புற்றுநோயை உருவாக்காது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றன,” என்கிறார்.
 

மேலும், மொபைல் ஃபோன்களின் மின்காந்த அலைகள் மிகவும் பலவீனமாவை என்றும், அவை நமது டி.என்.ஏ-வைப் பாதித்து புற்றுநோயை உண்டாக்காது என்கிறார், இங்கிலாந்தின் அறிவியல் அருங்காட்சியகத்தின் மருந்துகள் பிரிவின் அதிகாரியான கேட்டி டாபின்.
 

ஆனால் அயனியாக்கும் கதிர்வீச்சு வேறு மாதிரியானது, என்கிறார் சிகூர்னி பொன்னர். “இந்த வகைக் கதிரியக்கத்துக்கு நாம் அடிக்கடி உட்படுவதில்லை. உதாரணமாக விமான நிலையங்களில் இருக்கும் பாதுகாப்பு ஸ்கேனர்கள். விமானங்களில் பயணம் செய்யும்போதும் நாம் அயனியாக்கும் கதிரியக்கத்துக்கு உட்படுகிறோம்,” என்கிறார் அவர்.
 

அதேபோல், மருத்துவப் பரிசோதனைகளில் உபயோகிக்கப்படும் எக்ஸ்-ரேக்கள், எம்.ஆர்.ஐ ஸ்கேனர்கள் ஆகியவற்றிலும் இந்த வகை கதிரியக்கம் உள்ளது, ஆனால் அவை மிகவும் குறைந்த நிலை ஆபத்துக்கள் என்கிறார் சிகூர்னி பொன்னர். “இதற்கு நாம் மிகக்குறைந்த கால அளவே உட்படுகிறோம்,” என்கிறார் அவர்.
 

“உங்கள் மொபைல் ஃபோன்களை உபயோகிப்பது ஆபத்தானது அல்ல, சொல்லப்போனால், அவை உங்கள் உயிரைப் பாதுகாக்கும் கருவிகளாகக் கூட இருக்கலாம்,” என்று தீர்க்கமாகக் கூறுகிறார் சிகூர்னி.

 

தீய்ந்துபோன உணவு புற்றுநோயை உண்டாக்குமா?


 

சமைக்கும் முறை, உணவு தயாரிக்கும் முறை ஆகியவறுக்குப் புற்றுநோயுடன் எவ்வாறு தொடர்புள்ளது என்பது பற்றிப் பல தவறான புரிதல்கள் உள்ளன, என்கிறார் கேட்டி டாபின்.

“உணவை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் போட்டு அதை மைக்ரோவேவ் அவனில் மறுசூடாக்கிச் சாப்பிட்டால், புற்றுநோய் வருமா, என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை,” என்கிறார் சிகூர்னி.
 

தனது பாட்டி, ரொட்டியைத் தீயவைத்துச் சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படக்கூடும் என்று கூறுவார், என்கிறார் சாம் காட்ஃப்ரே. “உணவைத் தீய வைத்தால், அதில் அக்ரிலமைட் என்ற ரசாயனம் உண்டாகிறது. நல்ல செய்தி என்னவெனில், அக்ரிலமைட் புற்றுநோயை உண்டாக்கும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை,” என்கிறார் அவர்.
 

“அதனால், உங்களுக்குத் தீய்ந்துபோன உணவுகளை உட்கொள்வது பிடிக்குமெனில், அதை எவ்வளவு வேண்டுமானாலும் தீயவைத்துச் சாப்பிடலாம்,” என்கிறார் அவர்.
 

அதேபோல், உணவை பிளாஸ்டிக் பாத்திரத்திலோ, மைக்ரோவேவ் அவனிலோ சூடாக்குவதிலும் ஒரு ஆபத்தும் இல்லை, என்கிறார் அவர். “சொல்லப்போனால், ஒரு ஆராய்ச்சியில், ஆராய்ச்சியாளர்கள், உணவை ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்து அதை வெகுநேரம் சூடாக்கினர். பிளாஸ்டிக்கிலிருந்து எந்தவொரு ரசாயனமும் உணவுக்குச் செல்லவில்லை,” என்கிறார் அவர்.
 

புற்றுநோய்க்கான காரணிகள் என்ன?


 
 

மருத்துவர் சாம் காட்ஃப்ரே, உண்மையில் புற்றுநோய் உருவாக்கும் விஷயங்களின் எண்ணிக்கை குறைவுதான் என்கிறார்.
 

“எல்லாவற்றுக்கும் மேலாக, நமக்கு வயதாவதுதான் புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணம். வயது முதிர்வு ஏற்படும் போது புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களும் அதிகரிக்கின்றன,” என்கிறார் அவர்.
 

புற்றுநோயைப் பற்றிய உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் முக்கியம், என்கிறார் செவிலியர் லெஸ்லி கிரீன். “அப்போதுதான் மக்கள் தேவையில்லாமல் பயப்பட மாட்டார்கள், சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடுவார்கள்,” என்கிறார் அவர்.
 

ஆனால் சரியான நேரம் எப்போது?
 

“உங்களுக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் இருந்தால், அதுகுறித்து உங்களுக்குக் கவலையாக இருந்தால், அவை மூன்று வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்தால், உங்கள் மருத்துவரைச் சென்று பாருங்கள்,” என்கிறார் மருத்துவர் அனிஷா படேல்.
 

“சரியான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில், புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது உயிர்களைக் காக்க உதவும்,” என்கிறார் அவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments