Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமியை கண்காணித்துக் கொண்டிருக்கும் ஏலியன்கள்: கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் கூறும் வழி

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (21:15 IST)
கடந்த சில காலமாக விண்வெளியில் உயிர்கள் வாழ்வதற்கு உகந்த இடம் உள்ளதா என நாம் ஆராய்ந்து வருகிறோம். பிரபஞ்சத்தில் வேறு எங்கும் உயிர்கள் இருக்கக்கூடும் என்பதற்கான சில சாத்தியக்கூறுகளை வானியல் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டிருந்தாலும், வேற்றுகிரகவாசிகள் வாழ்வதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை.
 
ஆனால், ஒருவேளை நிஜமாகவே ஏலியன்கள் இருந்தால்?
 
ஏலியன்கள் இருக்கிறார்களா என நாம் உற்றுப் பார்ப்பது போல அவர்கள் பூமியை உற்று நோக்கினால், பூமியில் மனிதர்கள் இருப்பதை அவர்களால் பார்க்கமுடியுமா?
 
விஞ்ஞானிகள் சமீப காலங்களில் விடை கண்டுபிடிக்கப் போராடும் ஒரு கேள்விதான் இது.
 
பூமியில் நாம் இருக்கிறோம் என்பதை விண்மீன் மண்டலத்திற்கு நாம் தொடர்ந்து தெரிவித்துக்கொண்டே இருக்கிறோம். மேலும், "பூமியில் இருந்து நாம் மற்ற கோள்களைப் பார்க்கிறோம். அவர்களும் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கலாம்," என அமெரிக்க வானியற்பியல் விஞ்ஞானி ஜாக்குலின் ஃபேர்டி தெரிவிக்கிறார்.
 
இன்றுவரை, நமது விண்மீன் மண்டலத்தில் 5,500க்கும் மேற்பட்ட கோள்கள், மற்ற நட்சத்திரங்களைச் சுற்றி வருவதை நாம் கண்டறிந்துள்ளோம். ஆனால் அத்தகைய அவதானிப்புகள் ஆரம்ப நிலையில்தான் உள்ளன.
 
கோடிக்கணக்கான கோள்கள் பால்வீதி முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. இந்தக் கோள்களில் ஏதேனும் உயிர்களின் நடமாட்டம் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கோள்களின் வளிமண்டலத்தில் ஏதேனும் ரசாயன அடையாளங்கள் இருக்கின்றனவா என்றும் ஏதேனும் ரேடியோ சிக்னல்கள் அந்தக் கோள்களில் இருந்து பூமியை நோக்கி தெரிந்தோ தெரியாமலோ அனுப்பப்பட்டதா என்றும் ஆராய்ச்சி செய்யப்படுகிறது.
 
மற்றொரு பக்கம், சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக விண்மீன் மண்டலத்தில் பூமி அதன் இருப்பைத் தயக்கமின்றிக் காட்டி வருகிறது.
 
பூமியில் நாம் இருக்கிறோம் என்பதை விண்மீன் மண்டலத்திற்குத் தெரிவித்துக்கொண்டே இருக்கிறோம்.
 
பூமியில் இருந்து வரும் சிக்னல்களை ஏலியன்களால் கண்டுபிடிக்க முடியுமா?
டிவி நிகழ்ச்சிகள் முதல் செயற்கைக்கோள் தகவல் தொடர்புகள் வரை ரேடியோ சிக்னல்களை இன்றும் நாம் தொடர்ந்து ஒளிபரப்புகிறோம். ஆனால் குறைவாகக் கண்டறியக்கூடிய வகையில். மொபைல் ஃபோன் சிக்னல்கள் போன்ற பிற நவீன தகவல் தொடர்புகளைப் பொறுத்தவரை அவற்றின் சிக்னல்களை கண்டறிய முடியாது.
 
ஆனால் நமது அனைத்து சிக்னல்களும் அப்படி கண்டுபிடிக்கவே முடியாதபடி இல்லை. முக்கியமாக, விண்கலங்கள் சம்பந்தப்பட்ட சிக்னல்கள். சூரிய குடும்பம் முழுவதும் பல விண்கலங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் தொலைவில், நாசாவின் வாயேஜர் 1 விண்கலம், பூமியிலிருந்து 2,400 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது.
 
இருபது கிலோவாட் வரையிலான இந்த சிக்னல்கள் சில மற்ற நட்சத்திரங்களைச் சென்றடையுமா என்று ஐசக்சன் கணக்கிட்டார். அதில், அவர் பூமிக்கு அருகிலுள்ள நான்கு நட்சத்திரங்களும் அவற்றோடு இருக்கும் கோள்களும் ஏற்கெனவே பூமியில் இருந்து போகும் இந்த சிக்னல்களை பெற்றிருக்கும் எனத் தெரிய வந்தது.
 
அதுமட்டுமன்றி, 2031 வாக்கில் பூமிக்கு மிக நெருக்கமான நட்சத்திரங்கள் இந்த சிக்னல்களை பெறுவதற்கும், தங்கள் சொந்த சிக்னலை திருப்பி அனுப்புவதற்கும் போதுமான நேரத்தைப் பெற்றிருக்கும். இது எதிர்கால ஆய்வுக்கான ஒரு சுவாரஸ்யமான இலக்காக இருக்கலாம்.
 
 
நகர விளக்குகளை வைத்து நம்மை கண்காணிக்கும் ஏலியன்கள்?
 
மற்ற கோள்களில் இருக்க வாய்ப்புள்ள ஏலியன் வானியலாளர்கள் மனிதர்களைக் கண்காணிப்பதில் ஆர்வமாக இருந்தால், சில வழிகளின் மூலம் அவர்களால் நாம் பூமியில் வாழ்வதைக் கண்டுபிடிக்க முடியும்.
 
பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான சிறந்த அறிகுறியானது ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் நீராவியாக இருக்கலாம் என்று பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் வானியற்பியலாளர் பால் ரிம்மர் கூறுகிறார். நைட்ரஜன் டை ஆக்சைடால் நமது கிரகத்தில் ஓர் அறிவார்ந்த உயிர், அதாவது மனிதன், வாழ்வதற்கான சில தடயங்களை வழங்க முடியும்.
 
பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான முக்கியமான சாட்சிகளில் மற்றொன்று நமது நகர விளக்குகள். அத்தகைய விளக்குகளில் இருந்து வெளிப்படும் சோடியம் ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தில் கண்டறியப்படலாம் என்று 2021ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.
 
மற்ற உலகங்களில் இருந்து பார்த்துக் கண்டுபிடிக்கும் அளவுக்கு பூமி இன்னும் நகரமயமாகவில்லை. பூமியின் மேற்பரப்பில் 1 சதவீதத்துக்கும் குறைவான பகுதிதான் நகரங்களாக உள்ளது. ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களில் உள்ள கோரஸ்கண்டின் கற்பனை உலகத்தைப் போல ஆவதற்கு பூமிக்கு இன்னும் பல வருடங்கள் ஆகும்.
 
பூமியின் வளர்ச்சி அதன் தற்போதைய வேகத்தில் தொடர்ந்தால், 2150 வாக்கில் நகரமயமாக்கல் அதன் தற்போதைய அளவைவிட 10 மடங்கு அதிகரிக்கலாம், மேலும் நவீன தொலைநோக்கிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக நாம் பிரகாசிக்கக்கூடும் என்று பீட்டி கூறுகிறார்.
 
அதுமட்டுமின்றி பூமியைச் சுற்றிவரும் நாம் அனுப்பிய பல செயற்கைக்கோள்கள் மூலம் ஏலியன் வானியலாளர்கள் ஒரு நாள் நம்மைக் கண்டுபிடிக்க முடியும் என்று சோகாஸ்-நவரோ கூறுகிறார்.
 
ஆனால் அதற்கு, "இப்போது நம்மிடம் இருக்கும் செயற்கைகோள்களின் எண்ணிக்கையைவிட பில்லியன் மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார். அது சாத்தியமா என்ற கேள்விக்கு, நாம் சில பத்து ஆண்டுகளில் ஒரு காரில் இருந்து நூறு கோடி கார்களை பயன்படுத்தும் அளவுக்குச் சென்றுள்ளோம் என்பதை மறந்துவிடக் கூடாது என்று அவர் கூறுகிறார்.
 
 
ஒருவேளை, முதல் தொடர்பை ஏலியன்களோடு ஏற்படுத்த விஞ்ஞானிகளும் ஆர்வமாக இருந்து பொதுமக்களும் ஆதரவாக இருந்தால், பூமியைச் சுற்றி விண்வெளியில் பெரிய கட்டமைப்புகளை உருவாக்குவது ஒரு நல்ல யோசனையாக இருக்கலாம் என்று பீட்டி கூறுகிறார்.
 
அதாவது பெரிய கோள் அளவுக்கு உள்ள மெல்லிய பொருளால் செய்யப்பட்ட முக்கோணம் அல்லது சதுர வடிவ கட்டமைப்பை நாம் பூமியைச் சுற்றியுள்ள வின்வெளிப் பகுதியில் வைத்தால், இது ஏலியன் வானியலாளர்களுக்கு வெளிப்படையாகத் தெரியலாம்.
 
தற்போதைக்கு, நாம் இருப்பதற்கான அறிகுறிகள் மிகவும் குறைவுதான், ஆனால் கண்டறியக் கூடியதற்கான வாய்ப்புள்ளவையாக அவை உள்ளன.
 
"அவர்கள் நம்மைக் கண்டுபிடிப்பதற்கு பெரிய அதிசயம் நிகழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களிடம் நம்மிடம் இருக்கும் அதே தொழில்நுட்பம் இருந்தால் போதும். ஆனால் அது பெரிய அளவில் இருக்க வேண்டும்," என்கிறார் அமெரிக்காவில் உள்ள செட்டி இன்ஸ்டிடியூட் (வேற்று கிரக நுண்ணறிவுக்கான தேடல்) மூத்த வானியலாளர் சேத் ஷோஸ்டாக்.
 
ஆனால், நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், மற்ற கோள்களில் இருந்து யாரேனும் பூமியை கவனித்துக் கொண்டிருக்கிறார்களா?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments