அமெரிக்காவில் பல ஆண்டுகளாக மகளை அடித்துத் துன்புறுத்திய இந்திய தம்பதியினரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து அரசு வழக்குரைஞர் ரிச்சர்ட் பிரவுன் கூறுகையில், “குயின்ஸ் நகரத்தைச் சேர்ந்த ராஜேஷ் ரனோட் என்பவரது மகள் மாயா ரனோட். இவரது இடது கை மணிக்கட்டு வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக மாயாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தனது தந்தை ராஜேஷ் ரனோட்டும் அவரது இரண்டாவது மனைவி ஷீத்தலும் பல ஆண்டுகளாகத் தன்னை வீட்டில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து ராஜேஷ் ரனோட்டும், ஷீத்தலும் கைது செய்யப்பட்டு குயின்ஸ் நகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், ஷீத்தலுக்கு ரூ.36 லட்சம், ராஜேஷ் ரனோட்டுக்கு ரூ.15 லட்சம் பிணைத் தொகை அடிப்படையில் இருவரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணை 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இவர்கள் இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஷீத்தலுக்கு 33 ஆண்டு சிறை தண்டனையும், ராஜேஷ் ரனோட்டுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கக்கப்படக்கூடும்“ என்று ரிச்சர்ட் பிரவுன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.