இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியுள்ள நிலையில் அவரை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.
இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் விண்வெளி வீரராக செயல்பட்டு பலமுறை விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு 10 நாட்கள் பயணமாக சென்றனர்.
ஆனால் அவர்கள் மீண்டும் பூமிக்கு திரும்பவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக கடந்த 9 மாதங்களாக விண்வெளி ஆய்வு மையத்திலேயே இருந்து வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்க அதிபரான ட்ரம்ப், சுனிதா வில்லியம்ஸை மீட்கும் பொறுப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கிடம் ஒப்படைத்தார்.
அதன்படி, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், நாசா இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ 10 என்ற மீட்பு விண்கலத்தை அனுப்பி சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோரை மீட்க துரித நடவடிக்கை எடுத்தனர். இன்று இந்த ராக்கெட் புறப்பட இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்டு நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட் ஏவப்படும் என நாசா தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு வந்து சேர வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Edit by Prasanth.K