Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை, இந்தியாவுக்கு ஆயுதம் விற்கிறதா...?

இலங்கை, இந்தியாவுக்கு ஆயுதம் விற்கிறதா...?
, ஞாயிறு, 11 மே 2014 (08:50 IST)
இலங்கையிடமிருந்தும் இந்தியா ஆயுதக் கொள்வனவு செய்வதாக இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த காலத்தில் வெளியாகியிருந்ததாகக் கூறப்படும் கருத்துக்களை உள்ளடக்கிய ஊடகச் செய்திகளை மேற்கோள்காட்டி நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ஆனால் அந்தக் கேள்விக்கு, இந்தியாவில் நடந்துவரும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பதில் அளிப்பதாக அரசாங்கக் கட்சியின் தலைமைக் கொறடா அமைச்சர் தினேஸ் குணவர்தன நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார்.
 
இப்படியான ஆயுத வியாபாரம் நடந்தால் அந்தக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய விபரங்களை நாடாளுமன்றத்துக்கு வெளிப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலத்தா அத்துகோரள கேள்வி எழுப்பியிருந்தார்.
 
'இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோனி லோக்சபாவில் தெரிவித்த கருத்தில் இந்தியா ஆயுதக் கொள்வனவு செய்கின்ற நாடுகளில் இலங்கையும் இருப்பதாகக் கூறியிருந்தாக ஊடகச் செய்திகள் வௌியாகியிருந்தன' என்றார் அத்துகோரள.
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே இதுபற்றிய கேள்விகளை பதிவுசெய்திருந்த போதிலும், நேற்று வெள்ளிக்கிழமையே அந்தக் கேள்விக்கான வாய்ப்பு நாடாளுமன்றத்தில் கிடைத்ததாகவும் ஐதேக எம்.பி. பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
 
'இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் எப்படி நடந்தன, எவ்வளவு பணம் சம்பந்தப்பட்டது, அந்தப் பணம் எந்தக் கணக்குக்கு வந்தது, இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் இரண்டு அரசுகளுக்கு இடையே நடந்தனவா அல்லது நிறுவனங்களுக்கு இடையே நடந்தனவா போன்ற கேள்விகளைத் தான் நான் தொடுத்திருந்தேன்' என்றார் தலத்தா அத்துகோரள.
 
இந்திய ஆளுங்கட்சிக்கு சிக்கல்?
 
webdunia
தனது கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கப்படவில்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் அத்துகோரள, இந்தியாவில் தற்போது தேர்தல் நடந்துவருவதால், தேர்தல் முடிந்தபின்னர் பதில் அளிப்பதாக அரசாங்கக் கட்சியின் தலைமைக் கொறடா நாடாளுமன்றத்தில் கூறியதாக தெரிவித்தார்.
 
'நாங்கள் பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்கிறோம். எந்த அடிப்படையில் இந்த ஆயுதங்கள் இந்தியாவுக்கு விற்கப்படுகின்றன என்ற கேள்விகள் எங்களிடம் உள்ளன' என்றார் ஐதேக எம்.பி.
 
யுத்த காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் அரசாங்கம் பெருந்தொகை பணத்தை ஆயுதக் கொள்வனவுக்காக செலவிட்டுவருவதாகக் கூறிய அவர், இந்தியாவுக்கு ஆயுதம் விற்பதாக இருந்தால் அவை எந்த ஆயுதங்கள் என்ற கேள்விகள் எதிர்க்கட்சிக்கு எழுவதாகவும் பிபிசியிடமும் கூறினார்.
 
'இலங்கையுடன் இப்படியான கொடுக்கல் வாங்கலொன்று நடந்திருக்கிறது என்று இலங்கை நாடாளுமன்றத்தில் தகவல்கள் வெளியாகினால், இப்போது இந்தியாவில் ஆட்சியிலுள்ள அரசாங்கத்துக்கு ஏதும் சிக்கல்கள் ஏற்படலாம் என்ற காரணத்திற்காக அமைச்சர் இந்தப் பதிலைக் கூறியிருக்கிறாரோ என்று எனக்குப் புரியவில்லை' என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தமிழோசையிடம் தெரிவித்தார்.
 
இதேவேளை, எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பில் அரசாங்கத்தின் பதில் என்ன என்று அரசாங்கக் கட்சியின் தலைமைக் கொறடா அமைச்சர் தினேஸ் குணவர்தனவை தொடர்பு கொண்டு தமிழோசை விபரம் கேட்டது.
 
இதுபற்றி பதில் அளிக்கும் நிலையில் தான் இல்லை என்ற அமைச்சர் தொடர்ந்தும் கருத்துக்கூற மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil