Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீமோர் தீவில் தத்தளிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற தமிழக அரசு முயற்சி எடுக்க சீமான் கோரிக்கை

தீமோர் தீவில் தத்தளிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற தமிழக அரசு முயற்சி எடுக்க சீமான் கோரிக்கை
, புதன், 10 ஜூன் 2015 (17:53 IST)
தத்தளிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசின் மூலமாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இந்தோனேசியாவிலிருந்து, நியூசிலாந்து நாட்டுக்குத் தஞ்சம் கேட்டு கடல் வழியாக 54 தமிழர்களும், 10 வங்கதேசக்காரர்களும் ஒரு மியன்மர்காரரும் படகில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
 
அப்போது ஆஸ்திரேலியச் சுங்கத் துறையினரும் கடற்படையினரும் அவர்களை வழிமறித்து விசாரணை என்கிற பெயரில் மிரட்டி, அவர்களை நடுக்கடலிலேயே தத்தளிக்க விட்டுச் சென்றுள்ளனர்.
 
வாழ வழியற்று உயிரைக் காக்க ஒவ்வொரு திசை நோக்கியும் ஓடிக் கொண்டிருக்கும் அப்பாவி ஏதிலி மக்களை கொஞ்சமும் மனசாட்சியின்றி தண்டித்திருக்கிறார்கள் ஆஸ்திரேலிய நாட்டின் அதிகாரிகள்.
 
இலங்கையில் சிங்கள அரசின் வெறித்தாண்டவங்களைத் தாங்க முடியாமல் அனுதினமும் செத்துப் பிழைக்கும் தமிழ் மக்கள் தங்களின் விடிவுக்காக உலகத்தின் எத்திசையிலாவது இடம் கிடைக்காதா எனத் தத்தளிக்கிறார்கள்.
 
அவர்களில் சிலராக இலங்கையில் இருந்து கிளம்பிய 54 தமிழர்கள் இந்தோனேசியாவுக்கு வந்திருக்கிறார்கள். அங்கேயும் வாழப் பிடிமானம் இல்லாது போனதால் அங்கிருந்து நியூசிலாந்துக்குக் கடல் வழியாகக் கிளம்பியுள்ளனர்.
 
கர்ப்பிணிகளும், குழந்தைகளும் இருக்கிறார்களே என்றுகூட எண்ணாமல், அவர்களின் பயணத்தைத் தடுத்து நிறுத்தி விசாரித்திருக்கிறார்கள். அவர்களின் படகுகளைப் பறித்துக்கொண்டு சுங்கத்துறை படகுக்கு ஏதிலிகளை மாற்றியுள்ளனர்.
 
கடும் மழை பெய்த போதுகூட உணவோ, உடைகளோ கொடுக்காமல், மனசாட்சி மரித்துப் போனவர்களாக மாலுமிகளைத் தனியே அழைத்துப் பேரம் பேசி உள்ளனர்.
 
நாட்கணக்கில் தங்க வைத்த வேதனையைக் கண்டித்து படகிலேயே ஏதிலிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த, வேறு வழியில்லாமல் பயணத்துக்கே தகுதியற்ற படகையும், மிகக் குறைந்த அளவு டீசலையும் கொடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
 
அதிகாரிகள் சொல்லி அனுப்பியபடியே சில கணத்திலேயே மாலுமிகள் படகை விட்டுக் குதித்து, தப்பித்துப் போய்விட அப்பாவி மக்கள் படகைச் செலுத்த முடியாமல் நடுக்கடலில் தத்தளித்திருக்கிறார்கள்.
 
ஒருவழியாக இந்தோனேசியாவில் உள்ள தீமோர் தீவில் படகு ஒதுங்க, இப்போது எந்த வசதியும் இல்லாமல் 65 ஏதிலிகளும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்லும் இடமெல்லாம் தமிழனைக் கொல்லும் சூழலே சூழ்ந்திருப்பது நெஞ்சை நொறுக்கும் வேதனையாக மனதை வறுத்துகிறது.
 
இழவு வீட்டில் களவு செய்யும் கொடுமையாக எல்லாவற்றையும் இழந்து வெளியேறும் ஏதிலிகளிடமும் பணம் பறித்தும் ஆதாயம் தேடியும் அலைகிற அதிகாரக் கூட்டத்தை சம்பந்தப்பட்ட நாடுகளும் வேடிக்கைப் பார்ப்பதுதான் உச்சபட்ச வேதனையாக உள்ளது.
 
தீமோர் தீவில் தவிக்கும் ஏதிலிகளைக் காப்பாற்ற உலகத்தின் ஜனநாயக சக்திகள் உடனடியாகக் குரல் கொடுக்க வேண்டும்.
 
இந்தோனேசிய அரசு அவர்களின் உணவு, உடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
 
அவர்களது விருப்படி, நியூசிலாந்து செல்ல இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் மனசாட்சியோடு முயற்சி எடுக்க வேண்டும்.
 
தத்தளிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசின் மூலமாகத் தமிழக அரசும் முயற்சி எடுக்க வேண்டும். நாடோடிகளாக அலையும் ஏதிலிகளின் விடிவுக்கு உலக சமூகம் உடனடியாக ஒன்றுதிரள வேண்டிய நேரம் இது என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil