Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தோனேசியாவில் விமான விபத்து: பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் விமான விபத்து: பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு
, புதன், 1 ஜூலை 2015 (10:04 IST)
இந்தோனேசியாவில் விமானப்படை விமானம், விபத்துக்கு உள்ளானது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


 


அமெரிக்காவில் தயாரானதும், 4 என்ஜின்களைக் கொண்டதுமான ‘சி–130 ஹெர்குலிஸ்’ ரக விமானங்கள், இந்தோனேசிய விமானப்படையில் இடம் பெற்றுள்ளன. அவற்றை விமானப்படை வீரர்களை ஏற்றிச்செல்வதற்கும், தளவாடங்களை எடுத்துச் செல்வதற்கும் இந்தோனேசியா பயன்படுத்தி வருகிறது.
 
இந்நிலையில், அந்த விமானங்களில் ஒன்று, நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 12.08 மணியளவில், சுமத்ரா தீவில் மேதன் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து நேட்டுனா தீவுக்கு 113 பேருடன் புறப்பட்டு சென்றது.
 
இதில் 3 விமானிகள் சிப்பந்திகள் உள்பட 12 , விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்  101 பேர் பயணம் செய்தனர்.
 
இந்த விமானம், புறப்பட்டுச்சென்ற 2 நிமிடங்களில் விமானப்படை தளத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் விழுந்து, நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. மக்கள் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து எரிந்ததில் அந்த பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், வாகனங்கள் எரிந்து பலத்த சேதம் அடைந்தன.
 
இந்த, விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர். இந்த விபத்தில் 30 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.
 
பின்னர் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. இறுதியில், விமானத்தில் பயணம் செய்த அத்தனைபேரும் (ஒரு குழந்தை உள்பட 122 பேர்)  பலியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
 
முன்னதாக விமானத்தில் 113 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பொதுமக்களும் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்றது.
 
இதைத் தொடர்ந்து, சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், பலி எண்ணிக்கை 141 ஆக உயர்ந்தது என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து காவல்துறை அதிகாரி அகஸ்டினஸ் தெரிகான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாங்கள் இதுவரையில் 141 சடலங்களை மீட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.
 
இந்த விமான விபத்தில் பலியானவர்களுக்கு, அந்த நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி அவர்  "டுவிட்டர்’" சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்தியில், "(பலியானவர்களின்) குடும்பங்களுக்கு பொறுமையையும், பலத்தையும் கொடுக்க வேண்டும். இத்தகைய பேரிடர்களில் இருந்து இனி நாம் காக்கப்படுவோமாக" என கூறியுள்ளார்.
 
இந்த விமான விபத்துக்கு எந்திர கோளாறு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், விபத்துக்குள்ளான விமானம், 51 ஆண்டு பழமையானதாக இருந்தாலும், அது நல்ல நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil