Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈக்குவடார் அதிபரைக் கொலை செய்ய முயன்ற 6 காவல்துறை அதிகாரிகள்

ஈக்குவடார் அதிபரைக் கொலை செய்ய முயன்ற 6 காவல்துறை அதிகாரிகள்
, சனி, 2 ஆகஸ்ட் 2014 (13:35 IST)
தென்அமெரிக்க நாடான ஈக்குவடார் அதிபரைக் கொலை செய்ய முயன்ற 6 காவல்துறை அதிகாரிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டில் போனஸ் பிரச்சினை தொடர்பாக காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 10 பேர் பலியானதுடன் 274 காயமடைந்தனர்.

பதட்ட நிலை உருவானதைத் தொடர்ந்து அந்நாட்டின் சோசலிச அதிபரான ரபேல் கோரியா ஒரு மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்தார்.

ஆனால் போராட்டக்காரர்கள் அவரை அந்த மருத்துவமனைக்குள் வைத்து 12 மணி நேரத்திற்கும் மேலாக வெளிவரவிடாமல் முற்றுகையிட்டனர்.

பின்னர் மீட்புக் குழுவினரின் உதவியுடன் தனது மெய்க்காப்பாளர்கள் சூழ அங்கிருந்து ஒரு குண்டு துளைக்காத காரில் அவர் தப்பினார். அப்போது அந்த காரின் மீதும் போராட்டக்காரர்கள் சுட்டதில் அதிபரின் மெய்க்காப்பாளர் ஒருவர் உயிரிழந்தார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் அதிபர் பதவியில் இருக்கும் கோரியா தனக்கு முன்னால் 2003 இல் இருந்து 2005 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த லூசியோ குட்டியெரெவின் ஆதரவாளர்களே தனது ஆட்சியை முறியடிக்கும்விதமாக இந்தக் கலகத்தில் ஈடுபட்டனர் என்று குற்றம் சாற்றினார்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 40 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் அதிபரைத் தாக்க முயன்ற ஆறு காவல்துறை அதிகாரிகளும் தங்கள் முகத்தை மூடிக்கொண்டு, கையில் ஆயுதங்களுடன் அதிபரைத் தாக்க தயாராக இருந்தது வீடியோ காட்சி மூலம் நிரூபிக்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் குஸ்தாவோ பெநிடஸ் தெரிவித்தார்.

இவர்கள் மீதான குற்றம்  உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆறு பேருக்கும் 8 முதல் 12 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil