சீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தில் வசிக்கும் ஜு கிங்வா, சிறுநீரகக் கற்களை அகற்றுவதற்குப் புதிய கட்டில் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
ஜு கிங்வாவின் மனைவிக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு, இடது சிறுநீரகம் அகற்றப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு வலது சிறுநீரகத்தில் கற்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
ஏற்கெனவே ஒரு சிறுநீரகத்துடன் இருப்பவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்களை அகற்றுவது ஆபத்து என்பதால், தினமும் சில நிமிடங்கள் தலைகீழாக நின்றால் கற்கள் இடம் மாறும் என்றும் ஆலோசனை வழங்கினார்கள் மருத்துவர்கள்.
இதனால், ஒரு புதுவிதமான கட்டிலை உருவாக்கினார் ஜு கிங்வா. மனைவியைப் படுக்க வைத்து, கட்டிலோடு சேர்த்துக் கட்டினார். டிராக்டர் இன்ஜின் மூலம் கட்டிலுக்கு அதிர்வுகளை உண்டாக்கினார்.
கட்டில் மேலும் கீழும் செல்லும்போது சிறுநீரகக் கற்கள் இடம்பெயர்ந்தன. விஷயம் பரவி, அந்த கிராமத்தில் மட்டும் மூன்று பேர், சிறுநீரகக் கற்கள் பிரச்சினையில் இருந்து வெளிவந்து விட்டனர்.
காப்புரிமை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஜு கிங்வா.