Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'சேனல் - 4' வெளியிட்ட விடியோ காட்சிகள் : அமெரிக்கா அக்கறை

'சேனல் - 4' வெளியிட்ட விடியோ காட்சிகள் : அமெரிக்கா அக்கறை
, வியாழன், 3 செப்டம்பர் 2009 (12:29 IST)
இலங்கை தரைப் படையினர் தமிழ் இளைஞர்களைச் சுட்டுக்கொல்வதைச் சித்தரிக்கும் வகையில் வெளியான விடியோ காட்சிகள் தொடர்பாக தம்முடைய தீவிர அக்கறையை தெரியப்படுத்தி இருக்கும் அமெரிக்கா, இது தொடர்பாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக மேலும் தகவல்களை எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின் போது, கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் நிர்வாணமாக்கப்பட்டு கைகளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படுவதைச் சித்தரிக்கும் விடியோக் காட்சிகளை பிரிட்டனின் 'சேனல் - 4' தொலைக்காட்சி கடந்த வாரம் ஒளிபரப்பியதை அடுத்து மனித உரிமைகள் அமைப்புக்களின் கவனம் அதனை நோக்கிக் குவிந்திருக்கின்றது.

இந்நிலையில், இந்தத் தகவல்கள் தங்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளதாக தெரிவித்திருக்கும் ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் சூசன் ரைஸ், "இது தொடர்பான எமது நாட்டின் பிரதிபலிப்பை வெளிப்படுத்துவதற்கு எமக்கு மேலதிகமான தகவல்கள் தேவையாக இருக்கின்றன" எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆராயுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் சுழற்சி முறையிலான தலைமைப் பதவியின்படி செப்டம்பர் மாதத்துக்கான தலைமைப் பதவியை ரைஸ் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

"பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இந்த விவகாரத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என உறுப்பு நாடுகள் கேட்டுக்கொள்ளுமா என்பது எனக்குத் தெரியவில்லை" எனத் தெரிவித்த ரைஸ், விடியோ தொடர்பான தகவல்கள் புதிதாக இருப்பதால் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் அப்பாவிப் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாகவும், இதனைப் போர்க் குற்றமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கை ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எடுத்த நிலைப்பாட்டினால் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil