Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாயமான விமானத்தின் தொடர்பு வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டது - மலேசிய பிரதமர் பேட்டியின் முழுவிவரம்

மாயமான விமானத்தின் தொடர்பு வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டது - மலேசிய பிரதமர் பேட்டியின் முழுவிவரம்
, ஞாயிறு, 16 மார்ச் 2014 (13:08 IST)
காணாமல் போய் 9 நாட்களாகி விட்ட மலேசிய விமானத்தின் தொடர்பு வேண்டுமென்றே துண்டிக்கப்பட்டது என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்தார்.
FILE

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங்கிற்கு 7 ஆம் தேதி நள்ளிரவு 5 இந்தியர்கள் உள்பட 239 பேருடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், 8 ஆம் தேதி அதிகாலை 2.40 மணிக்கு மாயமானது. 9 நாட்களாகியும் அந்த விமானம் என்ன ஆனது, கடத்தப்பட்டதா, தெற்கு சீனக்கடலில் விழுந்ததா, நாசவேலைக்கு ஆளானதா என்பதில் ஒன்றைக்கூட உறுதி செய்ய முடியாத நிலை தொடருகிறது.

தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வந்தாலும், ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பதால் மலேசிய விமான நிறுவனமும் சரி, விமானத்தில் பயணித்த பயணிகள், ஊழியர்களின் குடும்பங்கள் தவிக்கின்றன.

மலேசிய விமானத்தைத் தேடும் முயற்சியில் 14 நாடுகளின் 58 விமானங்கள், 43 கப்பல்கள் ஈடுபட்டு வந்தாலும், விமானம் அல்லது அதன் சிதைந்த பாகங்களின் சுவடுகளைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றன. இந்தியாவும் அந்தமான், நிக்கோபார் தீவு பகுதிகளில் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் பணியில் தன்னையும் ஈடுபடுத்தியுள்ளது. ஆனால் இது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போன்றது என அந்தமானில் இந்திய பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் ஹர்மீத் சிங் கூறினார்.

விமானம் மாயமானது தொடர்பான விசாரணை நடத்துகிற அதிகாரிகள், நாசவேலை நடந்திருக்கலாமோ என்ற கோணத்திலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். மலேசிய போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், “விமானத்தைக் கடத்தி நாசவேலைக்கு உட்படுத்தி இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது” என்றார்.

மலேசிய உயர் அதிகாரி ஒருவர், “விமானத்தில் இருந்த 2 விமானிகளில் ஒருவர் அல்லது விமானம் ஓட்டத் தெரிந்த வேறு யாரோ ஒரு நபர், விமானத்தை கடத்தி இருக்க வேண்டும் என்று புலனாய்வு நடத்துகிறவர்கள் உறுதியான ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்” என்றார். அமெரிக்க அரசு அதிகாரிகளோ, அந்த விமானம் காணாமல் போனதில் கொள்ளையர்கள் கைவரிசை இருக்குமோ என்றும் விவாதித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கோலாலம்பூரில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மாயமான விமானத்தை இப்போது இரண்டு தடங்களில் தேடுகிற முயற்சி நடந்து வருகிறது. ஒன்று, வடக்கே கஜகஸ்தான், துர்க்மேனிஸ்தான் தடம். மற்றொன்று தெற்கே இந்தோனேசியாவிலிருந்து இந்தியப்பெருங்கடலின் தென்பகுதி தடம்.

புதிய செயற்கைக்கோள் தகவல்படி, மலேசிய கிழக்கு கடலோரப்பகுதியை அந்த விமானம் சென்றடைவதற்கு சற்றுமுன்னர், விமானத்தில் தகவல் தொடர்பு சாதனங்கள் செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளன என்று உறுதியாக நம்புகிறோம். அதாவது, மலேசிய எல்லைக்கும், வியட்நாம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பகுதிக்கும் இடையே விமானம் பறந்தபோது, அதன் டிரான்ஸ்பாண்டர் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.

ரேடார் தகவல்கள், அந்த விமானம் வட மேற்கு பகுதிக்கு திரும்புமுன், மேற்கு நோக்கி திரும்பி உள்ளது. விமானத்தில் இருந்த யாரோ வேண்டுமென்று செய்த செயல்தான் இது. ஆனால் விமானம் கடத்தப்பட்டதா என்பதை உறுதிபட கூற முடியாது.

அந்த விமானத்திலிருந்து கடைசியாக செயற்கைக்கோளுக்கு தகவல், உள்ளூர் நேரப்படி 8 ஆம் தேதி காலை 8.11 மணிக்கு வந்துள்ளது. எனவே விமானம் கட்டுப்பாட்டை இழப்பதற்கு முன்பாக 7½ மணி நேரம் பறந்துள்ளது. விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என ஊடகத் தகவல்கள் கூறியபோதிலும், நாங்கள் அனைத்து கோணத்திலும் இதைப் பார்க்கிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும், விமான சிப்பந்திகள், பயணிகள் மீதும் மீண்டும் விசாரணை நடத்தப்போகிறோம்.

ஒரு புதிய தகவலின் அடிப்படையில் விமானத்தினை தேடும் பணியில் இறங்கி உள்ளோம். இந்தப் புதிய தகவல், விமானத்தை தேடிக் கண்டறிவதில் ஒரு படி முன்னே அழைத்துச்செல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil