Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் - இலங்கைக்கு ஐநா சபை வலியுறுத்தல்

மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் - இலங்கைக்கு ஐநா சபை வலியுறுத்தல்
, வியாழன், 3 ஏப்ரல் 2014 (13:15 IST)
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு மனித உரிமை ஆணையம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.
Human rights violations in Sri Lanka
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போரில் அப்பாவித் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இதுகுறித்து போர் நடந்த பகுதிகளில் சுதந்திரமான சர்வதேச அமைப்புகளின் மூலம் விசாரணை நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க அரசு கடந்த மாதம் 27 ஆம் தேதி தீர்மானம் கொண்டு வந்தது. அமெரிக்காவின் இந்த தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் இதற்கு இலங்கை அரசு கண்டனம் தெரிவித்ததுடன் விசாரணை நடத்த ஒத்துழைக்கப் போவதில்லை என்றும் கூறிவருகிறது. இதுதொடர்பாக இலங்கை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே கூறும்போது, சர்வதேச அமைப்புகள் நடத்தும் விசாரணையில் இலங்கை அரசு கலந்து கொள்ளவும் செய்யாது. இதற்கு ஒத்துழைப்பும் அளிக்க மாட்டோம் என்றார்.
 
இலங்கை அமைச்சரின் இந்த பேச்சு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இறுதிகட்டப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச அமைப்புகள் நடத்துவதற்கு மனித உரிமைகள் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்கான முழுப்பொறுப்பும் இலங்கை அரசுக்கு இருக்கிறது என்பதையும் அவர் கோடிட்டு காட்டியுள்ளார்.
webdunia
War crimes in Sri Lanka
இருதரப்பிலும் போர்க்குற்றங்கள், போர் விதிமுறைகள் மீறல் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் எனவும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அதிபர் 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட ஐ.நா. சபையுடன் வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த விஷயத்தில் தான் ஒத்துழைப்பதாக உறுதியளித்திருக்கிறார். இலங்கையில் அமைதியும், ஒற்றுமையும் நிலவுவதற்கும் அரசியல் ரீதியாக தீர்வு காணவும் ஐ.நா. சபை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளும்.
 
ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்று பர்ஹான் ஹக் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil