Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீ விபத்து: பாங்காக்கில் 60 பேர் பலி

புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீ விபத்து: பாங்காக்கில் 60 பேர் பலி
, வியாழன், 1 ஜனவரி 2009 (13:35 IST)
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், புத்தாண்டு கொண்டாட்டம் நடந்த கேளிக்கை விடுதியில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஏராளமானவர்கள் அயல்நாட்டு சுற்றுலா பயணிகள்.

இவ்விபத்தில் காயமடைந்த 200 பேரில், சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாங்காக் நகரின் எக்கமாய் பகுதியில் உள்ள சன்டினா கேளிக்கை விடுதியில் 2009ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டம் நேற்றிரவு நடத்தப்பட்டது. இதில் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

ஆனால் நள்ளிரவு நேரத்தில் கேளிக்கை விடுதியில் இருந்த அலங்கார மின் விளக்கு வெடித்துச் சிதறியதாகவும், அதில் எழுந்த தீ மளமளவென விடுதி முழுவதும் பரவியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீயில் இருந்து தப்பிக்க விடுதிக்குள் இருந்தவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலர் உயிரிழந்தனர். மேலும் கடும் புகை ஏற்பட்டதால் அதில் மயக்கமுற்ற பலரும் தீயில் கருகி உயிரிழந்ததாக மீட்புக்குழுவினர் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளே தீ விபத்திற்கு காரணம் என்றும் விடுதியில் இருந்து உயிர்தப்பிய சிலர் தெரிவிக்கின்றனர்.

புத்தாண்டு துவங்கிய சில நிமிடங்களிலேயே ஏற்பட்ட இந்த கோர விபத்தால் தாய்லாந்து மக்கள் சோகத்தில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil