Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.நா. நிபுணர் குழு: இந்தியாவின் மவுனத்திற்கு இலங்கை அதிருப்தி

ஐ.நா. நிபுணர் குழு: இந்தியாவின் மவுனத்திற்கு இலங்கை அதிருப்தி
கொழும்பு , வியாழன், 1 ஜூலை 2010 (20:11 IST)
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.செயலர் நாயகம் பான் கி மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவிற்கு இந்தியா இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்காதது குறித்து இலங்கை அதிபர் ராஜபக்ச அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.நா சபையில் வீட்டோ அதிகாரமுள்ள ரஷ்யா உள்ளிட்ட 29 நாடுகள் தமக்கு ஆதரவாக நிபுணர் குழுவை எதிர்த்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ராஜபக்ச, அயல்நாடான இந்தியா மௌனம் சாதிப்பது, இந்தக் குழுவை ஏற்பது போன்று அமையும் எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாகக் கவனம் செலுத்துமாறு இலங்கை அயலுறவுத் துறை அமைச்சகத்திற்கு ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளதாக அந்த அமைச்சத்தின் உயரதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தியா தமக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டும் என இலங்கை அமைச்சர் டி.எம்.ஜயரட்ன அண்மையில் கூறியிருந்தது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

அதேசமயம் அண்மையில் இந்தியா சென்றிருந்த ராஜபக்சவும் இந்தியாவின் ஆதரவை பல வழிகளிலும் கோரியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

போர் உச்சக் கட்டத்தை அடைந்திருந்த கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஐ.நா. சபையிலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிலும் பிரேசில், மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளால் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள், இந்தியாவின் ஆதரவுடன் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil