Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் பாலியலில் ஈடுபடுத்தப்படும் தமிழ்ப் பெண்கள்: ஆஸி. நாளேடு தகவல்

Webdunia
வியாழன், 2 ஜூலை 2009 (13:46 IST)
இலங்கையின் வடபகுதியில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழ் அகதிகளின் நிலை மிகவும் மோசமானதாக இருப்பதாகவும் , அங்குள்ள பெண்கள் அகதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில் அவர்கள ் பலாத்காரமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருப்பதாகவும் ஆஸ்ட்ரேலியாவின் பிரபல நாளேடான 'த ஆஸ்ட்ரேலியன்', அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ள 'த ஆஸ்ட்ரேலியன்', புல்மோட்டையில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண்களே அதிகாரிகளால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கின்றது.

இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமும், உதவி நிறுவனங்களும் இணைந்து விசாரணைகளை நடத்திவருவதாகவும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

" இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இருந்த போதிலும் யாரும் இது தொடர்பாக எதனையும் செய்யவில்லை" என தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத உதவி நிறுவனப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

" இந்த அகதி முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரம் ஒன்றில் சராசரியாக மூன்று குடும்பங்கள் தங்கியிருக்கின்றன. இந்நிலையில் அவர்கள் மற்றவர்களுடைய இடையூறுகள் இல்லாமல் அவற்றில் வசிக்க முடியாது.இந்நிலையில் அங்கு வரும் இராணுவத்தினர் அவர்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கோ அல்லது மேலதிக இடத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கோ கைமாறாக எதனையாவது எதிர்பார்க்கின்றார்கள்" எனவும் அந்த உதவி நிறுவனப் பணியாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

" இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் முற்றிலும் தவறானவை" என திட்டவட்டமாக மறுக்கும் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன, இருந்தபோதிலும் இது தொடர்பாக அரசு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதையும் உறுதிப்படுத்தினார்.

" படையினர் இந்தப் போரில் வெற்றிபெற்றுள்ளார்கள்.அவர்கள் விரும்பியிருந்தால் அவர்கள் சென்ற பாதையில் ஒவ்வொரு பெண்ணையும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியிருக்க முடியும்.ஆனால் எந்த ஒரு பாலியல் வல்லுறவுச் சம்பவமும் இடம்பெறவில்லை" என அவர் கூறியுள்ளார்.

இந்த முகாம்களில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர், இதில் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் என நம்பப்படும் ஆண்களும், பெண்களும் அங்கிருந்து வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் அவர்கள் தனியாகக் கொண்டுசெல்லப்பட்டமை தொடர்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படுவது போன்ற இதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் பேணப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்தப் பிரச்னைகள் தம்மைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய கவனத்துக்கு உரியவையாக இருப்பதாகத் தெரிவித்த அவர், நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பது சிறிலங்கா அரசியலமைப்பின் கீழேயே மனித உரிமையை மீறும் ஒரு செயலாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பது முகாம்களில் பெரும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.இதற்கு எதிராக மக்களும் கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளனர்.குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாக வெவ்வேறு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதால் தமது இரத்த உறவுகளைச் சந்திப்பதற்காக அவர்கள் மற்றைய முகாம்களுக்குச் செல்வதற்கு முற்படுகின்றார்கள்.ஆனால் இதற்கு படையினர் அனுமதி மறுப்பது பதற்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

இவ்வாறான ஒரு சம்பவத்தின் போதே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு அகதிகள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்த நாளேடு தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இதேவேளையில் இந்த முகாம்களின் நிலைமை படிப்படியாக அபிவிருத்தியடைந்து வருவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கான தூதுவர் நெயில் பூனே, இருந்தபோதிலும் அகதிகள் முகாம்களில் இருந்து வெளியே சென்று வருவதற்கு அனுமதிக்கப்படாமல் முகாம்களுக்குள்ளேயே முடக்கப்பட்டிருப்பதுதான் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது" எனவும் குறிப்பிட்டார்.

" இந்த முகாம்களில் உள்ள மக்களில் 80 வீதமானவர்கள் இந்த வருட இறுதிக்குள் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பியனுப்பப்பட்டுவிடுவார்கள் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவிக்கின்றது எனச் சுட்டுக்காட்டும் அவர், இருந்தபோதிலும் அது மிகவும் கடினமான ஒரு இலக்காகவே இருக்கின்றது எனவும் குறிப்பிடுகின்றார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!