Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவசரப்பட்டு அரசியலில் குதித்த பொன்சேகா ஒரு முட்டாள்: ராஜபக்ச

அவசரப்பட்டு அரசியலில் குதித்த பொன்சேகா ஒரு முட்டாள்: ராஜபக்ச
கொழும்பு/கோலாலம்பூர் , வியாழன், 18 மார்ச் 2010 (18:02 IST)
சரத் பொன்சேகா ஒரு முட்டாள் என்றும், அவருக்கு இப்போதைக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படாது என்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

"சிங்கப்பூர் ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்" இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள அவர்,
பொன்சேகா அரசியலில் பிரவேசிப்பதற்கு எந்த தயார் நிலையையும் கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி தம்மை பொன்சேகா சந்தித்தபோது, அவருக்கு அரசியல் ஆர்வம் உள்ளதா என தாம் விசாரித்ததாகவும், எனினும் அப்படியான ஒரு எண்ணம் தமக்கு இல்லை என அப்போது தெரிவித்ததாகவும் ராஜபக்ச அதில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர், பொன்சேகா தம்மை இறுதியாக சந்தித்த போதும், இது குறித்து தம்மிடம் எதனையும் தெரிவிக்கவில்லை என்றும், இந்த நிலையில் தாம் பொன்சேகாவுக்கு அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் ஒரு இராணுவம் இல்லை; இராணுவத்தில் கட்டளை இடும் போது, அதன் படி இராணுவத்தினர் நடப்பர்.ஆனால் அரசியலில் இடப்படும் கட்டளைகளுக்கு மாற்று செயற்பாடுகளே காணப்படும் என தாம் பொன்சேகாவுக்கு தெரிவித்ததாகவும், ஆனால் பொன்சேகா அதனை கேட்காமல் அவசரப்பட்டு, முட்டாள்தனமாக செயல்பட்டுவிட்டதாகவும் ராஜபக்ச அதில் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவது குறித்து கருத்து தெரிவித்த ராஜபக்ச, இது பிரிட்டன் சட்டம் எனவும், அவர்கள்தான் இந்தியாவுக்கும்ம், இலங்கைக்கும் அதனை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.

பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்த போது, ஆயிரக்கணக்கானவர்களை, இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தி உள்ளார்.இந்த எண்ணிக்கை 8500 ஆக அதிகரித்த போது அவர்களை விடுவிக்குமாறு தாம் பொன்சேகாவிடம் கோரியதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தற்போது சட்ட ரீதியான விடயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எல்லா விடயத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாது என்றும் ராஜபக்ச அந்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil