Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழர்களை வெளியேற்றுவது வரலாற்றுத் தவறு - ‌‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்

தமிழர்களை வெளியேற்றுவது வரலாற்றுத் தவறு - ‌‌விடுதலை‌ப் பு‌லிக‌ள்
, திங்கள், 2 மார்ச் 2009 (20:13 IST)
webdunia photoFILE
தமிழர்க‌ள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் இடங்களில் இருந்து அவர்களை வெளியேற்ற முயற்சிப்பது வேதனையானது, ஒரு வரலா‌ற்று‌த் தவறு எ‌ன்று‌ம், தீர்வு ஒன்றை காண்பதற்காக 'காசா' பகுதியில் வாழும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதனை ஐக்கிய நாடுகள் சபை ஆதரிக்குமா? என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகு‌றி‌த்து டைம்ஸ் நௌவ் தொலைக்காட்சிக்கு பா. நடேசன் வழங்கிய நேர்காணல் வருமாறு :

ஐ.நா.வின் பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (27.02.09) உரையாற்றிய ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக்கள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதற்கான உங்களின் பதில் என்ன?

ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் ஜோன் கோல்ம்ஸ் வன்னிக்கு வந்து அங்குள்ள மக்களின் நிலமைகளை பார்வையிடுவதற்கும், பொதுமக்கள் இங்கு பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பதை பார்வையிடுவதற்குமான பாதுகாப்பான பயண ஒழுங்குகளை மேற்கொள்ளாதது வருத்தமானது.

வன்னியில் பணியாற்றி வந்த ஐ.நா. மற்றும் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றை அங்கிருந்து வெளியேறும்படி கடந்த வருடம் அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து ஐ.நா. தமிழ் மக்களை கைவிட்டுள்ளது. அதன் பின்னர் அரசு சாட்சிகள் அற்ற நிலையில் தனது போரை நடத்தி வருகின்றது.

தமது சொந்த விருப்பத்தின் அடிப்படையில்தான் மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் வாழும் பிரதேசத்தில் அமைதியும், பாதுகாப்பும் வேண்டும் என விரும்புகின்றனர். ஐ.நா.வின் ஆதரவுடன் சிறிலங்கா அரசு நடத்தி வரும் தடை முகாம்களுக்கு செல்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. சிறிலங்காவின் இந்த முகாம்களை தடை முகாம்களுக்கு ஒப்பானவை என கடந்த மாதம் 20 ஆம் நாள் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது.

சிறிலங்கா வேறு நாடுகளின் அதிகாரங்களுக்கு உட்பட்ட நாடு அல்ல. எனவே யாரும் போரை நிறுத்தும்படி அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என சிறிலங்காவின் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளாரே?

காசா பகுதியை விட வன்னியில் அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக உலக நாடுகள் கவனம் செலுத்துகின்றன. உலக நாடுகளில் சிறிலங்காவும் ஒன்று, அது அணிசேரா நாடுகள், ஐ.நா. போன்றவற்றிலும் உறுப்புரிமை உள்ள நாடு. உலகின் இந்த நிலைப்பாடு ஆளுகைக்கு உட்பட்ட நாடு என்ற வாதத்தின் அடிப்படையிலானது அல்ல.

இருந்த போதும், ஐ.நா. மற்றும் உலகின் மனிதாபிமான சமூகம் என்பன வன்னியில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாகவும், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் முக்கிய கவனத்தை இதுவரையில் செலுத்தவில்லை.

பயங்கரவாதத்தின் மீதான போரை மேற்கொண்டு மக்களை விடுவிக்கின்றோம் என்ற போர்வையில் திட்டமிட்ட படுகொலைகளையும், இனவாத தாக்குதல்களையும், பயங்கரமான வன்முறைகளையும் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மனித கேடயங்களாக பொதுமக்களை பயன்படுத்துவதாக போலியாக அரசு கூறியவாறு அவர்கள் மீது எறிகணைகளை வீசி படுகொலை செய்து வருகின்றது. இது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக அரசினால் மேற்கொள்ளு‌ம் இன அழிப்பு நடவடிக்கையாகும்.

தமிழ் மக்களை பாரம்பரியமாக வாழ்ந்து வரும் அவர்களின் இடங்களில் இருந்து வெறியேற்றுவதற்கு முயற்சிப்பது வேதனையானது. நான் ஒன்றை கேட்கின்றேன், தீர்வு ஒன்றை காண்பதற்காக காசா பகுதியில் உள்ளவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதனை ஐ.நா. ஆதரிக்குமா?

இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் அனைத்துலகத்திற்கு ஆபத்தானது அல்லாத உள்நாட்டு விவகாரம் என தெரிவித்து சிறிலங்காவின் படை நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாக ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் விவாதிப்பதற்கு சில நாடுகள் கவலைப்படுவது வேதனையானது. ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் துன்பத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு உதவிகளை புரிவதுடன், மனித பேரவலத்தை தடுக்க முன்வர வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கையை நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்காததனால் ஏற்பட்டு‌‌ள்ள பாதிப்புக்கள்?

சிங்கள படையினரின் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களினால் இங்கு நா‌ள்தோறு‌ம் 50 பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். சிறுவர்களின் கல்வியும் தடைப்பட்டுள்ளது. உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பீரங்கி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்திகளின் தாக்குதலினால் சிறுவர்களும், பெண்களும், முதியவர்களும் கொல்லப்படுகின்றனர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசு தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றுவதனை அனைத்துலக சமூகத்தின் செயற்திறன் அற்ற நடவடிக்கை ஊக்குவிக்கின்றது. வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள தடை முகாம்கள் ஒன்றை மட்டும் தான் வெளிப்படுத்துகின்றன. அதாவது, ஆடுகளை எதிர்பார்த்து ஓநாய்கள் காத்திருக்கின்றன.

விடுதலைப் புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என சிறிலங்கா அரசு தெரிவித்து வருகின்றதே?

வன்னியில் இருந்து வெளியேறும் மக்களை சிறிலங்கா அரசு தடுத்து வைத்துள்ளது. அவர்களை நேர்காணல் காண்பதற்கு இராணுவத்தினரால் வழிநடத்தப்படும் ஊடகங்களையே அனுமதித்து வருகின்றது. துன்பத்தினாலும், அச்சத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களை பயன்படுத்தி ஆக்கிரமிக்கும் இராணுவத்தை விடுவிப்பவர்களாக சித்தரிக்கின்றது.

ஆனால், சில அனைத்துலக ஊடகங்களின் தகவல்களின்படி வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா சென்ற மக்கள் மீண்டும் வன்னிக்கு திரும்பவே விரும்புவதாக அறியமுடிகின்றது. இந்த தமிழ் மக்களை பிரச்சாரத்திற்கான கேடயமாக சிறிலங்கா அரசு பயன்படுத்தி வருவதுடன், அவர்களை நிரந்தரமாக அகதிகளாக்கவும் முற்பட்டு வருகின்றது.

அரசு தனது அதிகளவான வளங்களை பயன்படுத்தி பெருமளவில் திட்டமிட்ட பிரச்சாரத்தினை படை நடவடிக்கைகளுடன் இணைத்து மேற்கொண்டு வருகின்றது. அரசியல் தீர்வு தொடர்பான சிறிலங்கா அரசு காண்பித்து வரும் அசிரத்தையும், தற்போது மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கையும் நோக்கும் போது ஒன்று மட்டும் உறுதியானது. அதாவது, படையினர் மேற்கொண்டு வரும் எல்லா நடவடிக்கைகளும் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றன என்பதுதான்.

போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என சில நாடுகளும், ஐ.நா.வும் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனவே?

இவை எல்லாம் தமது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற நடவடிக்கையை மெருகுபடுத்தும் வார்த்தைகள். ஜனநாயக வழிகளில் 1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை பிரகடனத்தின் மூலம் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக முன்மொழிந்த சுயாட்சியும், தமிழ் மக்களின் உரிமையுமே எமது நோக்கம்.

எனவே, பெருமளவில் தமிழ் மக்களை அவர்களின் வாழ் நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு அனைத்துலக சமூகம் ஆதரவினையும், உற்சாகத்தினையும் வழங்கக்கூடாது. அனைத்துலக சமூகம் தொடர்ந்தும் மௌனமாக இருந்து கொண்டு தடை முகாம்களுக்கு நிதிகளை வழங்குவார்களாக இருந்தால் அது உண்மையாகவே ஒரு வரலாற்று பேரழிவும், தவறுமாகும்.

மிகவும் கொடூரமான அரசுகள் பலவந்தமாக பெருமளவில் வெளியேற்றப்பட்ட மக்களை அவர்களின் செர்ந்த இடங்களில் மீண்டும் குடியேற்றியதாக உலகின் எந்தப் பகுதியிலும், எப்போதும் வரலாறு இல்லை. ஆனால், அனைத்துலக சமூகம் தமது சுருதியை மாற்றியுள்ள போதும் மீண்டும் பழைய முழக்கத்தையே தற்போதைய புதிய சூழலிலும் பயன்படுத்தி வருவது வருத்தமானது.

மீளக்குடியமர்த்துதல், மறுவாழ்வு திட்டம் என்ற பெயரில் சிறிலங்கா அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களுக்கு நிதி உதவிகளை நேரடியாக வழங்குவது தொடர்பாக அனைத்துலக கொடை நாடுக‌ள் கு‌றி‌த்து?

கொழும்பு போன்ற பிரதேசங்களில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் உரிமைகளையோ, பாதுகாப்பையோ கூட அரசு ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றது. மக்களை மீளகுடியமர்த்துவதாக சிறிலங்கா அரசு அனைத்துலக சமூகத்திற்கு தெரிவித்து வரும் வாக்குறுதிகள் அவர்கள் கொடுக்கும் நிதி உதவிகள் கிடைக்கப் பெற்றதும், அதே வேகத்தில் காணாமல் போய்விடும்.

ஆழிப்பேரலை முகாமைத்துவ கட்டமைப்புக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பல தடவைகள் அனைத்துலக சமூகம் கோரிக்கை விடுத்து வந்திருந்தன. முன்னாள் அமெரிக்க அரச தலைவர் பில் கிளின்டன் கூட இதனை மேற்கொண்டிருந்தார். ஒ‌ற்றுமையையும் அரசியல் தீர்வையும் பலப்படுத்தும் வழி இதுவென கருதப்பட்டது. ஆனால் நீதித்துறையை தவறாக பயன்படுத்தி அதனை சிறிலங்கா அரசு சீரழித்து விட்டது.

தற்போது கூட மக்கள் முன்னணி அரசில் அங்கம் வகிப்பவர்களும், அ‌திபரின் சொந்த கட்சியில் இருப்பவர்களும் தாம் இராணுவத் தீர்வுக்கே ஆதரவுகளை வழங்குவோம் எனவும், அதிகார பரவலாக்கத்திற்கு அல்ல எனவும் தெரிவித்து வருகின்றனர்.

போரை நிறுத்தி, மக்களை தமது வாழ்விடங்களில் வாழ அனுமதித்து, அவர்களை சுயமரியாதையுடன் வாழ அனுமதிப்பதே உண்மையான மனிதாபிமானம். தமிழ் மக்களின் பிரச்சினைகள், சிறுபான்மை மக்களை அரசு நடத்தும் முறை, மனித உரிமை மீறல்கள் போன்றவை தொடர்பான சிறிலங்கா அரசின் உண்மையான தோற்றத்தை உலகில் உள்ள மனிதாபிமான சமூகம் தாமதிக்காது உணர்ந்துகொள்ளும் என நாம் நம்புகின்றோம்.

மக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாக வைத்துள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்து வருகின்றதே?

தமிழ் மக்களை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் இது. இங்கு தமிழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இங்கு தொடர்ந்து வாழவே விரும்புகின்றனர். சிறிலங்கா அரசு, ஐ.நா. மற்றும் அனைத்துலக நாடுகள் போன்றவை தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதாக தமது அறிக்கைகளில் தெரிவித்தவாறு அவர்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றி இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் முட்கம்பிகளுடன் கூடிய முகாம்களுக்குள் அடைப்பதற்கு முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் ஒரு தசாப்தத்துக்கு மேலாக அரசு ஆக்கிரமித்துள்ள இடங்களில் மீளக்குடியேறுவதற்காக காத்திருக்கின்றனர். அண்மையில் கிழக்கிலும் இது நிகழ்ந்துள்ளது. கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் பின்னர் சம்பூரில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் பல இடங்கள் தமிழ் மக்கள் செல்ல முடியாத பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் திட்டமிட்ட முறையில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

இடம்பெயர்ந்து செல்லும் மக்களை தனக்கு ஆதரவான துணை இராணுவக் குழுவினரை பயன்படுத்தி அரசு மிரட்டி வருகின்றது. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது. கிழக்கில் மக்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அது தெரிவித்திருந்தது.

இவ்வாறான ஆபத்தான நிலைமையில் தமிழ் மக்கள் இந்த தடை முகாம்களுக்குள் விருப்பத்துடன் செல்ல வேண்டுமா? தமது பாரம்பரிய வாழ்விடங்களை கைவிட்டு தமிழ் மக்கள் வெயேற வேண்டும் என ஐ.நா.வும், ஏனைய நாடுகளும் எதிர்பார்க்கின்றனவா? வெளியேறும் மக்களை தடை முகாம்களுக்குள் அடைப்பதற்கு அவை முயற்சிக்கின்றனவா? இந்த முயற்சி தமிழ் மக்களின் ஏகோபித்த விருப்பத்துடன் தான் மேற்கொள்ளப்படுகின்றதா?

பயங்கரவாதத்தின் மீதான போரை மேற்கொண்டு மக்களை விடுவிக்கின்றோம் என்ற போர்வையில் திட்டமிட்ட படுகொலைகளையும், இனவாத தாக்குதல்களையும், பயங்கரமான வன்முறைகளையும் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மனித கேடயங்களாக பொதுமக்களை பயன்படுத்துவதாக போலியாக அரசு கூறியவாறு அவர்களை வெளியேற்றவும் முற்றாக அழிக்கவும் முயற்சித்து வருகின்றது. இது இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 61 வருடங்களாக அரசினால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு நடவடிக்கையாகும்.

விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அழைப்பை பயன்படுத்தி மக்களை வெளியேற்றுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவி‌த்‌திரு‌ப்பது?

மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு முன்வைக்கப்பட்ட இந்த போர் நிறுத்த கோரிக்கையை, தமக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என சிறிலங்கா அரசு ஏற்கெனவே நிராகரித்து விட்டது.

தமிழ்நாடு தூத்துக்குடியில் பிரணாப் முகர்ஜி இதனை சொல்லியிருப்பதை அரசியல் அழுத்தத்தால் சொல்லப்பட்ட ஒரு விடயமாகவே கொழும்பு பார்க்கின்றது.

அத்தோடு, மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான ஒரு போர் நிறுத்தம் தொடர்பாக இந்தியா தொடர்ந்து சொல்லி வருவதை, ஒரு தற்காலிக நடவடிக்கையாகவும், தமிழர் தாயகம் மீதான சிறிலங்காவின் படையெடுப்புக்கு வழங்கப்படும் ஓர் ஆசீர்வாதமாகவுமே நாம் கருத முடியும்.

பிரணாப் முகர்ஜியின் கருத்துக்கு பதில் வழங்கியிருக்கும் சிறிலங்கா அரசு, விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதே போர் நிறுத்தத்தை நோக்கி இட்டுச்செல்லும் என்று சொல்லியிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஆயுதங்களை கீழே போடுவதற்கான எந்த கோரிக்கையையும் நாம் நிராகரிக்கின்றோம். ஏனெனில், இந்த ஆயுதங்கள் எமது அரசியல் போராட்டத்தின் கருவிகள் மட்டுமன்றி, அவையே எமது மக்களின் பாதுகாப்பு கவசங்களுமாகும்.

இந்தியா இப்போது, போரை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்களின் துன்பங்களைப் போக்கி, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு நிரந்தரத் தீர்வு காணவே சிறிலங்காவை வலியுறுத்த வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil